`நேட்டோ’ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கான வேலைகளை அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னெடுத்து வருவதையடுத்து, ரஷ்யா பல்வேறு ஆயுதங்களுடன்கூடிய ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை, உக்ரைன் எல்லையில் நிறுத்தியிருக்கிறது. ரஷ்யாவின் இந்தச் செயலால் உக்ரைனில் போர்ச் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் நியூயார்க்கிலுள்ள ஐ.நா பாதுகாப்பு அவையில் ரஷ்யா, உக்ரைன் விவகாரம் குறித்து நேற்று விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் பேசிய அமெரிக்கப் பிரதிநிதி லிண்டா தாமஸ், ``ரஷ்யாவின் நடவடிக்கைகள் அனைவரின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்திருப்பது உலக அமைதிக்கே எச்சரிக்கை ஏற்படுத்தும்விதமாக உள்ளது. உக்ரைன் எல்லைக்குள் ரஷ்யா நுழைந்தால் நிச்சயம் கடுமையான விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரும்" என்று ரஷ்யாவுக்கு எச்சரிக்கும்விதமாகப் பேசியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதைத் தொடர்ந்து பேசிய ரஷ்ய தூதர் வைஸ்லி, ``உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவை அச்சுறுத்தும்விதமாக நடந்துகொள்கிறது" என அமெரிக்காவைக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த விவாதத்தில், இந்தியா சார்பில் பேசிய தூதர் திருமூர்த்தி, ``உக்ரைன் விவகாரத்தை தூதரகரீதியிலாக அணுக வேண்டும்" என்றார். முன்னதாக ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் விவாதம் நடத்தலாமா என்ற வாக்கெடுப்பில், இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.