Published:Updated:

நடுங்கவைக்கும் பனி; உறையும் உடும்புகள்!- முதல்முறையாக எச்சரிக்கை விடுத்துள்ள மியாமி வானிலை மையம்

உடும்பு
உடும்பு

ஃப்ளோரிடாவில் நிலவும் கடும் பனியால் உடும்புகள் மரத்திலிருந்து விழும் அபாயம் உள்ளதாக மியாமியின் தேசிய வானிலை சேவை மையம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இப்போது குளிர்காலம். இந்தக் குளிர்காற்று தற்போது தெற்கு அமெரிக்காவுக்கும் பரவி வருகிறது. லூசியானா பகுதி முதல் கரோலினாஸ் வரை கடும் குளிர் நிலவுகிறது. ஏற்கெனவே ஃப்ளோரிடா மகாணத்தில் வெப்பநிலை சராசரியாக 10 முதல் 15 டிகிரி வரைதான் உள்ளது. ஃப்ளோரிடா மற்றும் ஜார்ஜியானா மாகாணங்களில் கடும் உறை பனி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று மியாமியின் தேசிய வானிலை சேவை மையம் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ``இதை எப்போதும் நாங்கள் முன்னறிவிப்பு செய்ததில்லை. வெப்பநிலை 30 ஃபாரன்ஹீட் முதல் 40 ஃபாரன்ஹீட் வரை குறைய இருப்பதால் மரத்திலிருந்து உடும்புகள் (iguanas) கீழே விழும் அபாயம் உள்ளது"எனக் கூறியுள்ளது.

உடும்பு
உடும்பு

பொதுவாக உடும்புகளால் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. இவற்றை ஃப்ளோரிடாவின் செல்ல பிராணியாகவும் மக்கள் வளர்க்கின்றனர். பூமியில் துளையிட்டு தாவரங்களை உண்ணும் உயிரினமான உடும்புகளால் கடும் குளிரைத் தாங்க முடியாது. இதனால் வெப்ப நிலை 45 ஃபாரன்ஹீட் குறைவாகச் சென்றாலே உறைந்த நிலைக்குச் சென்று விடும். இம்மாதிரியான சமயத்தில் இவை இறந்தது போலக் காட்சியளித்தாலும் இறப்பதில்லை. அப்போதும் முக்கிய உறுப்புகள் இயங்கிக்கொண்டிருப்பதோடு சுவாசிக்கவும் செய்யும். குளிரிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக இப்படிச் செய்கின்றன. ஆனால், எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக அதே நிலை நீடித்தால் சிறிய வகை உடும்புகள் இறந்துவிடும். இதுபற்றி மியாமி வானிலை மையம் கூறுகையில், ``உடும்புகள் குளிர்ந்த ரத்தம் உடையவை. இதனால் வெப்பநிலை 40 ஃபாரன்ஹீட் அல்லது அதற்குக் குறைவாகச் சென்றால் பச்சை உடும்புகள் உறைந்துவிடும். மேலும் மரத்திலிருந்து கீழே விழுவதற்கான அபாயமும் உள்ளது . ஆனால் உயிரிழக்காது” எனக் கூறியுள்ளனர்.

` வாழவே முடியாத இடத்தையும் மாசுபடுத்திவிட்டனர்!’ 
- `ஆர்ட்டிக் பகுதி' ஆய்வால் மிரண்ட ஆய்வாளர்கள்

இதற்கு முன் கடும் குளிர் நிலவியபோதும் உடும்புகள் உறைந்துவிடுவது பற்றிய எச்சரிக்கை அறிவிக்கப்படாது. உறைந்த உடும்புகள் தென்பட்டால் அவற்றை அப்படியே விட்டுவிடும்படி மட்டுமே மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஏனெனில் உடும்புகள் உயிருடன் இருப்பதால் கடிக்கக் கூடிய அபாயம் உள்ளது என ஃப்ளோரிடாவின் மீன் மற்றும் வன உயிர் பாதுகாப்பு கமிஷனின் மேற்பார்வையாளர் கிரிஸ்டன் சோமர்ஸ் தெரிவித்தார். இதேமாதிரி 2010ல்- தெற்கு ஃப்ளோரிடாவில் இரண்டு வாரங்கள் கடும் பனி நீடித்தது. இதில் நிறைய உடும்புகள் மற்றும் பர்மீஸ் மலைப்பாம்புகள் உயிரிழந்தன.

வானிலை மைய எச்சரிக்கை
வானிலை மைய எச்சரிக்கை

இந்த அறிவிப்பைப் பற்றி ஜூமியாமியின்(zoo miami) தொடர்பு துறை ஆணையர் ரான் மாகில் தெரிவிக்கையில், ``இந்தக் குளிர் காலத்தைப் பயன்படுத்தி உடும்புகளை வேட்டையாட நிறைய பேர் தயாராக உள்ளனர். இச்சமயத்தில் உடும்புகள் உறைந்துவிடுவதால் அவர்களால் எளிதில் பிடித்துவிட முடியும்" என்றார். இதற்கிடையில் ஃப்ளோரிடா மீன் மற்றும் வன உயிர் பாதுகாப்பு கமிஷன் (FWC) வீட்டில் இருக்கும் உடும்புகளைப் பிடிக்க அதற்கென உள்ள பிரேத்யக நிபுணர்களை அழைக்குமாறு கூறியுள்ளது.

பின் செல்ல