Published:Updated:

`இந்தத் தொடரை நிச்சயம் பாருங்கள்!’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் திடீர் `துருக்கி’ பாசம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

துருக்கி தொலைக்காட்சி தொடரைப் பிரபலப்படுத்தி வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

`இந்தத் தொடரை நிச்சயம் பாருங்கள்!’ - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் திடீர் `துருக்கி’ பாசம்

துருக்கி தொலைக்காட்சி தொடரைப் பிரபலப்படுத்தி வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Published:Updated:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

உலகமே கொரோனா காரணமாக முடங்கிக் கிடக்கிறது . இந்த சமயத்தில் மக்கள் அனைவரும் தங்களது நேரத்தைப் புத்தகங்கள், வெப் சீரிஸ் மற்றும் படங்களில் செலவிட்டு வருகின்றனர். இதே நேரத்தில் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானும் துருக்கி டிவி தொடர் ஒன்றை ஆர்வமாகப் பார்த்து வருகிறார். அதைப்பற்றிய காணொலிகளையும் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்கிறார். இம்ரான் கான் ஆர்வமாகப் பார்த்து வரும் இந்தத் துருக்கி தொடரின் பெயர் `ரிசரக்சன்: எர்டுகுரூள்’ (Resurrection : Ertugrul)ஆகும்.

இது 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒகுஸ் டர்க் எர்டுகுரூள் என்பவரைப் பற்றிய தொடர் கதை. எர்டுகுரூளின் மகனான உச்மான் காசி தான் ஒட்டமன் ராஜ்ஜியத்தை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் ஒகுஸ் டர்க் ( Oguz turk ) என்னும் முஸ்லிம் மக்களின் வீரத்தைப் பறைசாற்றும் வண்ணம் உள்ளது. துருக்கியின் அனடோலியாவில் மங்கோலியர்கள், கிறித்தவர்கள் மற்றும் நைட் டெம்ப்ளர்ஸ்க்கு எதிராக இவர்கள் போரிட்டதைக் காட்சிப்படுத்துகிறது. இதற்கு அறுபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். துருக்கியின் ``கேம் ஆஃப் த்ரோன்ஸ்" என்றே இது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது நெட்ஃப்ளிக்ஸிலும் இத்தொடர் வெளியாகியுள்ளது.

எர்டுகுரூள்
எர்டுகுரூள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தன் நாட்டு இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய தொடர் இது எனப் புகழாரம் சூட்டி வருகிறார். இதைப்பற்றி அவர் கூறுகையில், ``நமது குழந்தைகளும் இளைஞர்களும் எர்டுகுரூளை கட்டாயம் பார்க்க வேண்டும். இதன் மூலம் உண்மையான இஸ்லாமிய கலாசாரத்திற்கும், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் மூலம் வரும் மூன்றாம் தர கலாசாரத்திற்கும் உள்ள வேற்றுமையை அறிய முடியும். துருக்கியின் இந்த டிவி தொடரில் காதல், வரலாறு மற்றும் இஸ்லாமியக் கருத்துகள் என அனைத்தும் உள்ளன" என்றார்.

மேலும் இவரே இந்தத் தொடர் முழுவதையும் உருது மொழியில் டப்பிங் செய்து பி டிவி வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். தற்போது ரம்ஜான் மாதத்தையடுத்து பாகிஸ்தானின் பி டிவியில் இது உருது மொழியில் வெளிவருகிறது. இம்ரான் கானின் இந்த அணுகுமுறையைத் துருக்கி அரசும் வரவேற்றுள்ளது. ஏற் கெனவே இம்ரான் கானும் துருக்கி அதிபர் எர்டோகனும் நல்ல நட்பில்தான் இருந்து வருகின்றனர்.

பாகிஸ்தான் திடீரென துருக்கியின் டிவி தொடரைக் கொண்டாடக் காரணம் அது தனது அடையாளத்தை துருக்கியின் வழியே தேடப் பார்க்கிறது எனக் கூறப்படுகிறது. இதில் எர்டுகுரூளை தங்கள் நாட்டுடன் பல்வேறு வகையில் பிணைத்துப் பார்க்கிறார் இம்ரான் கான். துருக்கி அதிபர் எர்டோகனும் ஓஸ்மானிய வழி வந்தவர் என்றே கூறி வருகிறார். இதனால், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானிற்கு ஆதரவாகத்தான் துருக்கி அதிபர் செயல்படுகிறார்.

நடிகரின் ட்வீட்
நடிகரின் ட்வீட்

பல ஆண்டுகளாகவே பாகிஸ்தான் நிலையற்ற அடையாளத் தன்மையையே சுமந்து வருகிறது. முதலில் பாகிஸ்தானியர்கள் தங்களது வழித்தோன்றல்கள் முகமது பின் க்யாஸிமா அல்லது ராஜா தஹீரா என்ற குழப்பத்தில் இருந்தனர். இப்போது புதிதாக துருக்கிய வழித்தேடலும் அதனுடன் இணைந்துள்ளது. இதையடுத்தே அவர்கள் உருவாக்கிய ஏவுகணைகளுக்கு கோரி, காச்னாவி அப்தாலி என மாற்றி மாற்றி பெயரிட்டது.

பாகிஸ்தான் அரசு துருக்கியின் டிவி தொடரைப் பிரபலப்படுத்தி வருவதற்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன. இணைய உலகில் எந்த டிவி தொடரை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால், ஒரு அரசே இவ்வாறு செய்வது என்பது கவலையளிக்ககூடியது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இம்ரான் கானின் துருக்கி டிவி தொடர் பற்றிய பரப்புரையை எதிர்த்து நடிகர் சான் சாஹித் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதில், ``நெருக்கடியான காலகட்டத்தில் இறக்குமதிக்குத் தடை விதித்து உள்ளபோது, டிவி தொடர்களை மட்டும் இறக்குமதி செய்வது நியாயமான ஒன்றில்லை. முதலில் நமது நாட்டுத் தொடர்களையும், திறமைகளையும் அங்கீகரிக்க வேண்டும். அதுவே, பாகிஸ்தானின் கேளிக்கை துறையை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல உதவும்"என்றார். இது ஒருபக்கம் இருக்க இன்ஸ்டாகிராமில் எர்டுகுரூளில் நடிக்கும் நடிகர்களை பாகிஸ்தான் ரசிகர்கள் கேள்விகளால் துளைத்து வருகின்றனர். இதில் எர்டுகுரூளின் மனைவியாக நடித்தவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான படம் ஒன்றை வெளியிட்டார். அதை பாகிஸ்தானியர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.