Published:Updated:

``ஒசாமா பாகிஸ்தானில் இருந்தது எங்களுக்குத் தெரியும்!” - இம்ரான் கான் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

பிரேம் குமார் எஸ்.கே.

`இதுவரை`ஒசாமா எங்கள் மண்ணில் இருந்தது எங்களுக்கே தெரியாது. அமெரிக்கா எங்களிடம் சொல்லியிருந்தால் நாங்களே அவரைப் பிடித்திருப்போம்’ என்பதுதான் பாகிஸ்தானின் கருத்தாக இருந்து வந்தது.

இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற பின்னர், முதல் முறையாக அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இம்ரான் கான். அவரது அமெரிக்க பயணம் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா உதவ வேண்டும் என்ற அவரது கோரிக்கையும் அதற்கு ட்ரம்ப் சொன்ன பதிலும் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்புடன் இம்ரான்கான்
ட்ரம்புடன் இம்ரான்கான்

இந்நிலையில், பிரபல ஆங்கில ஊடகமான ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தில் பேசிய இம்ரான் கான், ``அல் - கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இருந்தது எங்களுக்குத் தெரியும்'' என்று கூறி அதிர வைத்திருக்கிறார். காரணம், ``ஒசாமா எங்கள் மண்ணில் இருந்தது எங்களுக்கே தெரியாது. அமெரிக்கா எங்களிடம் சொல்லியிருந்தால் நாங்களே அவரைப் பிடித்திருப்போம்'' என்பதுதான் இதுநாள்வரை பாகிஸ்தானின் கருத்தாக இருந்து வந்தது.

ஒசாமா இருக்கும் இடத்தை அமெரிக்கா டிராக் செய்ய உதவிய குற்றத்துக்காகப் பாகிஸ்தானிய மருத்துவர் ஷகீல் அஃப்ரிடி கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர் விடுவிக்கப்படுவாரா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதுதான் இம்ரான் கான் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின் லேடன்
ஒசாமா பின் லேடன்

அந்தப் பதிலில் இம்ரான் கான், ``பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தான் ஒசாமா இருக்கும் இடத்தின் தகவலை அளித்தது. இது தொடர்பாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ-விடம் (அமெரிக்க உளவு அமைப்பு) கேட்டாலும், ஐ.எஸ்.ஐ தான் தொலைபேசி மூலம் தகவல் சொன்னதைச் சொல்வார்கள்.

மருத்துவர் ஷகீல் அஃப்ரிடி விடுவிப்பது குறித்து உறுதியாகச் சொல்ல முடியாது. அது உணர்வுபூர்வமான விஷயம். எங்களைப் பொறுத்தவரை அவர் எங்கள் நாட்டில் இருந்துகொண்டு அமெரிக்காவுக்கு உளவு பார்த்திருக்கிறார். பாகிஸ்தானியர்கள் அமெரிக்காவுடன் நல்ல உறவில்தான் இருக்கிறார்கள். எங்களுக்கு அந்தத் தகவல் அளிக்கப்பட்டிருந்தால் நாங்கள் அவரைப் பிடித்திருப்போம். அமெரிக்காவுக்காகப் பாகிஸ்தானும் தீவிரவாதத்துக்கு எதிராகப் போரிடுகிறது.

இம்ரான் கான் - ட்ரம்ப்
இம்ரான் கான் - ட்ரம்ப்

ஆனால், பாகிஸ்தானுக்குள் வந்த அமெரிக்கா ஒசாமாவை கொன்றது, எங்களை சங்கடப்படுத்தியது. நாங்கள் அமெரிக்காவின் கூட்டாளி என்று சொன்னாலும் அமெரிக்கா எங்களை நம்பவில்லை. எங்கள் எல்லைக்குள் வந்து கொன்றனர்” என்றார். அப்போது, ஒசாமா என்பது வெறும் ஒற்றை மனிதன் கிடையாது. அவர் நடத்திய தாக்குதலில் 3,000-க்கும் அதிகமான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னபோது, இம்ரன் கான், ``இந்த மோதல்களில் 70,000 பாகிஸ்தானியர்களைப் பலிகொடுத்துள்ளோம்” என்றார்.

`வெரி ஸாரி.. மோடி அப்படியொரு கோரிக்கையை உங்களிடம் வைக்கவில்லை!' - ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை

மேலும், ``இது செய்து முடிக்கப்பட்ட விதத்தில் எங்களுக்குக் கோபம் இருக்கிறது. ஆனால், இது எல்லாம் கடந்த காலம். ஷகீல் அஃப்ரிடி விடுதலை தொடர்பாக நான் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. எதிர்க்கட்சிகளும் இருக்கின்றன.

இம்ரான் கான்
இம்ரான் கான்

எஃப்.பி.ஐ ஏஜென்ட் மற்றும் காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு அமெரிக்க சிறையில் இருக்கும் பாகிஸ்தானியரை அமெரிக்கா விடுவித்தால் அவருக்குப் பதிலாக அஃப்ரிடி விடுவிக்கப்படலாம். எதிர்காலத்தில் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கலாம். ஆனால், இப்போது இது தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை” என்றார். மருத்துவர் அஃப்ரிடியை விடுக்க வேண்டும் என அமெரிக்க ட்ரம்ப் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.