Published:Updated:

'18 நாய்கள், ஒரு மனித உடல்' - காணாமல் போனவரைத் தேடியபோது கிடைத்த அதிர்ச்சி

அரசு அதிகாரிகள் அவரைத் தேட தொடங்கியபோது இப்படி நடந்திருக்கும் என நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஃப்ரெடி மாக்
ஃப்ரெடி மாக்

அமெரிக்காவில் காணாமல்போன ஒருவரின் வழக்கை விசாரித்த அதிகாரிகளுக்கு இறுதியாக ஒரு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. டெக்சாஸ் மாகாணத்தில் வீனஸ் என்ற நகரம் அமைந்திருக்கிறது. மக்கள் தொகை அடர்த்தி இல்லாத பகுதி அது. 50 கிலோமீட்டர் பரப்பளவுக்கு 4,000 பேருக்குக் குறைவானவர்களே வசித்து வருகிறார்கள்.

வீனஸ் நகரம்
வீனஸ் நகரம்

கடந்த மே மாதம் 6-ம் தேதி அந்த ஊரின் ஒதுக்குப் புறமாக அமைந்திருக்கும் வீடு ஒன்றைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருக்கிறார்கள் அரசு அதிகாரிகள். ஆனால், அந்த வீட்டில் யாருமே இருக்கவில்லை மாறாக அங்கே 18 கலப்பின நாய்கள் கோபமான நிலையில் காணப்பட்டன.

உறவினர்களிடம் விசாரித்தபோது அங்கே 57 வயதான ஃப்ரெடி மாக் (Freddie Mack) என்பவர் வசித்து வந்ததாகவும், ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் அவரைப் பார்க்கவில்லை என அவரின் உறவினர் ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும், நாய்கள் கோபமாக இருப்பதால் வீட்டுக்குள் சென்று பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஃப்ரெடி மாக்கின் வீடு
ஃப்ரெடி மாக்கின் வீடு
Johnson County Sheriff Office

அதன் பின்னர் அதிகாரிகள் நாய்களை ஒரு வழியாகச் சமாளித்துவிட்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஃப்ரெடி மாக்கை காணவில்லை. சில நாள்கள் கழித்து வந்து பார்த்த பின்னரும் அவர் இல்லாமல் போகவே அதை வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வந்திருக்கிறார்கள். மாக் எங்கே சென்றிருப்பார் என்பதை விசாரிக்கும் போதுதான் அவரது உறவினர் மைக்கேல் சார்ஜன்ட் என்பவர் தெரிவித்த ஒரு தகவல் அதிகாரிகளை இந்த வழக்கில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியது. "அவர் நாய்களை எப்படி தனியே விட்டுச் சென்றிருப்பார் என்பது தெரியவில்லை. அந்த நாய்கள் எப்போதும் அவர் பக்கத்திலேயேதான் இருக்கும்" எனத் தெரிவித்தார் மைக்கேல் சார்ஜன்ட்.

அதையடுத்து அவரது வீட்டுக்குள்ளேயே தேடுதலைத் தீவிரப்படுத்தினார்கள் அதிகாரிகள். மே 15-ம் தேதி ஒரு அதிகாரியின் கையில் எலும்புத் துண்டு ஒன்று சிக்கியது. ஏதோ தவறு இருப்பதாகத் தோன்றவே அங்கிருந்த நாய்களை அப்புறப்படுத்திவிட்டுத் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. தடயவியல் நிபுணர்கள், துப்பறியும் நிபுணர்கள் ஃப்ரெடி மாக்கின் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். தேடுதல் தீவிரமானது.

அதன் பின்னர் கிடைத்த விலங்கு கழிவில் துணியின் துண்டுகள், மனித முடி, எலும்புகள் ஆகியவை அடங்கியிருப்பது தெரியவந்தது. அப்போதுதான் அதிகாரிகளுக்கு நாய்களின் மேல் இருந்த சந்தேகம் வலுத்தது. இருந்தாலும் அந்தப் பொருள்கள் யாருடையவை என்பதை அறிந்துகொள்வதற்காக வடக்கு டெக்ஸாசில் இருந்த ஒரு தடயவியல் மையத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஃப்ரெடி மாக்கின் வீட்டில் சோதனையிடும் அதிகாரிகள்
ஃப்ரெடி மாக்கின் வீட்டில் சோதனையிடும் அதிகாரிகள்
AP

ஆய்வின் முடிவில் அது ஃப்ரெடி மாக்கினுடையதுதான் என்பது தெரிய வந்தது. அவரது உடலை நாய்கள்தான் தின்றிருக்கின்றன என்பது உறுதியானது. "அவர் தீவிரமாக நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக அவர் இறந்த பின்னர் நாய்கள் அவரது உடலைத் தின்றதா அல்லது உயிரோடு இருக்கும்போதே அவரைக் கொன்று தின்றனவா என்பது சரிவரத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இது ஒரு துயரமான சம்பவம்தான் அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என அந்தப் பகுதியின் ஷெரிஃப் ஆடம் கிங் தெரிவித்திருக்கிறார். மற்றொரு அதிகாரியான ஆரோன் பிட்ஸ், " ஒரு மனித உடலை நாய்கள் முழுவதுமாகச் சாப்பிட்டுவிட்டன என்ற ஒரு சம்பவத்தை நாங்கள் இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லை. 2 - 5 இன்ச் வரை இருந்த எலும்புத் துண்டுகளைத் தவிர்த்து அவை வேறு எதையுமே விட்டு வைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.