Published:Updated:

'பாதிப்பு அதிகமே... ஆனாலும், கொரோனாவை இந்தியா வெல்லும்!’ - WHO கணிப்பு

WHO இயக்குநர்
WHO இயக்குநர்

உலகம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் பரவ வெறும் நான்கு நாள்களே ஆகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் மொத்த புவியும் மாஸ்க் அணிந்துகொண்டு மூச்சுவிடத் திணறிக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு வைரஸின் தாக்கம் மிக வீரியமாக உள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,78,842 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,510 ஆகவும் உள்ளது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் வளர்ந்த வல்லரசு நாடு முதல் வளரும் நாடுகள் வரை தவித்துவருகின்றன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உலகின் மொத்த நாடுகளும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளன. நாட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியேறத் தடை விதித்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதே நிலைதான் இந்தியாவிலும் நிலவுகிறது. இங்கு 446 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 548 மாவட்டங்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு, வைரஸ் பரவுவதைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

`இளைஞர்களே... நீங்கள் வெல்ல முடியாதவர்கள் அல்ல!’ - WHO-வின் ஸ்ட்ரிக்ட் எச்சரிக்கை  #Coronavirus

இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக இந்தியா சிறந்து விளங்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய WHO- வின் நிர்வாக இயக்குநர் மைக்கேல் ஜே ரியான், “பெரியம்மை, போலியோ ஆகிய இரண்டு பெரும் கொடிய நோய்களை ஒழித்ததில் இந்தியா உலக நாடுகளை வழிநடத்தியது. இந்தியாவுக்கு மிகப் பெரிய திறன்கள் உள்ளன, அதே சக்தியுடன் கொரோனாவையும் எதிர்கொள்ளும். சமூகங்கள் மற்றும் சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து பணியாற்றும்போது, உலகின் அனைத்து நாடுகளும் மிகப்பெரிய திறன்களைத் தன்வசமாக்கிக்கொள்கின்றன.

நிர்வாக இயக்குநர்
நிர்வாக இயக்குநர்

சீனாவைப் போல இந்தியாவும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உள்ளது. எதிர்காலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் கோவிட் 19 வைரஸ் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் தீர்மானிக்க வேண்டும். பொதுச்சுகாதார மட்டத்தில் இந்தியா தொடர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து உலக நாடுகளும் வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாகவும் நோயின் பரவலின் பாதையை மாற்றுவது இன்னும் சாத்தியம் என்றும் கூறியுள்ளார். இவரைத் தொடர்ந்து பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ், “கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் முதல் ஒரு லட்சம் பேரிடம் பரவுவதற்கு 67 நாள்கள் ஆகியுள்ளது. இரண்டாவது ஒரு லட்சம் பேருக்குப் பரவ 11 நாள்களும் மூன்றாவது ஒரு லட்சம் பேருக்குப் பரவ வெறும் 4 நாள்கள் மட்டுமே ஆகியுள்ளது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு