Published:Updated:

`இதனால் எந்த லாபமும் இல்லை; மிகக் கவனமாக இருங்கள்!’ - இந்தியாவைப் பகிரங்கமாக மிரட்டும் சீனா?

சீனா- அமெரிக்காவுக்கு இடையே நடக்கும் பனிப்போரில் இந்தியா தலையிடக் கூடாது என சீன நாளிதழ் எச்சரிக்கை தொனியில் செய்தி வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளது. வைரஸ் மற்றும் பொருளாதாரப் பிரச்னை ஆகிய இரண்டிலிருந்தும் மீண்டு வருவதற்கு இந்தியா கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவப் படை நுழைந்துள்ளதாகக் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து தகவல் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. காஷ்மீரின் கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன ராணுவத்தினர் நுழைந்து, கூடாரங்கள் அமைத்து சுரங்கம் தோண்டி அதன்வழியாகக் கனரக உபகரணங்களைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

முன் எப்போதும் இல்லாமல் சீனாவின் இந்தப் புதிய நகர்வு இந்தியத் தலைவர்களுக்குச் சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர சீனா மற்றும் இந்திய அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சீனா- இந்தியா பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் கூறினார். ஆனால், இரு நாடுகளும் அதை முழுமையாக மறுத்துவிட்டன. இருந்தும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னை தற்போது வரை தொடர்ந்துகொண்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

இந்த நிலையில், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழில் இந்தியாவுக்கு எச்சரிக்கைவிடுக்கும் தொனியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், `தற்போதைய சூழ்நிலையில் இந்தியா மிகக் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடக்கும் பனிப்போரில் இந்தியா நுழையாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் பெரும் சிக்கல் உருவாகும். சமீபத்திய இந்தியா - சீனா எல்லைப் பதற்றத்திலும் இதுவே நடந்தது.

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா - சீனா

சீனா மற்றும் மேற்கு நாட்டுக்கு இடையே நடக்கும் ஒரு புதிய பனிப்போரில் இந்தியா, அமெரிக்கா பக்கம் சாய்ந்தாலோ அல்லது அமெரிக்காவின் ஒரு சிப்பாயாகச் செயல்பட்டாலோ ஆசியாவின் இரு அண்டை நாடுகளுக்கும் இடையான பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் பேரழிவைச் சந்திக்கும். அதிலும் இந்தியா ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில்தான் உள்ளது. இந்த நேரத்தில் மேலும் பல பொருளாதார இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

`கொரோனா அச்சம்; எல்லையில் பதற்றம்!’ - இந்தியாவிலிருந்து தங்கள் மக்களை திரும்ப அழைக்கும் சீனா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவின் தேசியவாத உணர்வுகள் அதிகரித்து வருவதால் அமெரிக்கா - சீனாவுக்கு இடையேயான புதிய பனிப்போரில் இந்தியாவும் சேர வேண்டும் எனப் பல குரல்கள் கிளம்பியுள்ளன. இத்தகைய பகுத்தறிவற்ற குரல்கள் தவறாக வழிநடத்துமே தவிர வேறு எதுவும் இல்லை. அது பிரதான குரல்களாக மாறி இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கட்டுப்படுத்தக் கூடாது. சீனா- அமெரிக்கா போரில் தலையிடுவதால் இந்தியாவுக்குப் பெரிய லாபம் ஒன்றும் இல்லை. ஆனால், இழப்பதற்கு நிறைய இருக்கின்றன. அதனால் பிரதமர் மோடியின் அரசு புதிய அரசியல் வளர்ச்சியைப் பகுத்தறிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.

சீனா - இந்தியா
சீனா - இந்தியா

இந்தியாவில் ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டுள்ள நேரத்தில் அந்நாட்டின் பொருளாதார மீட்சிக்கு உதவவும் இரு நாட்டின் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்தி இதன்மூலம் ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதற்கான ஆதரவை வழங்கவும் சீனா தயாராக உள்ளது’ என்பன உள்பட பல கருத்துகள் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சீன நாளிதழின் இந்தச் செய்தி இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு