Published:Updated:

ஆர்.சி.இ.பி வர்த்தக ஒப்பந்தம்... இந்தியா இணையாதது லாபமா... நஷ்டமா?

RCEP SUMMIT
பிரீமியம் ஸ்டோரி
RCEP SUMMIT

`இது துணிச்சலான முடிவு’ என்று பல தரப்பிலிருந்தும் பாராட்டுக் குரல்கள் ஒலிகின்றன.

ஆர்.சி.இ.பி வர்த்தக ஒப்பந்தம்... இந்தியா இணையாதது லாபமா... நஷ்டமா?

`இது துணிச்சலான முடிவு’ என்று பல தரப்பிலிருந்தும் பாராட்டுக் குரல்கள் ஒலிகின்றன.

Published:Updated:
RCEP SUMMIT
பிரீமியம் ஸ்டோரி
RCEP SUMMIT

ஒரு விஷயத்தை 15 நாடுகளும் சரியென ஏற்றுக்கொள்ளும்போது, ‘எங்களுக்கு இது சரிப்பட்டுவராது’ என்று சொல்லி ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. `இது துணிச்சலான முடிவு’ என்று பல தரப்பிலிருந்தும் பாராட்டுக் குரல்கள் ஒலிகின்றன.

ஆர்.சி.இ.பி ஒப்பந்தம் என்பது, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, புரூனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய பத்து ஆசியான் நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய ஆறு நாடுகள் என மொத்தம் 16 நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும் ஓர் ஒப்பந்தம். ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership -RCEP) என்ற இந்த ஒப்பந்தத்தால், 16 நாடுகளுக்குள் வரியில்லாமல் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்துகொள்ள முடியும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த வாரம் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் 16 நாடுகள் கலந்துகொண்ட ஆர்.சி.இ.பி இறுதிக்கூட்டம் நடைபெற்றது. அப்போதுதான், இந்த ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகிக் கொண்டது. மற்ற 15 நாடுகள் வரியில்லா வர்த்தகத்துக்கு உடன்பட்டு ஏற்றுமதி இறக்குமதியை இனி மேற்கொள்ளும்.

மேலோட்டமாகப் பார்த்தால், நல்ல வாய்ப்பை இந்தியா நழுவவிட்டிருக்கிறது என்றுதான் தோன்றும். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சேராமல் விலகியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, சீனப் பொருள்களுக்கு இந்தியச் சந்தையைத் திறந்துவிட வேண்டாம் என நினைப்பதுதான்.

ஜோதி சிவஞானம்
ஜோதி சிவஞானம்

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதை இந்திய தொழில் துறையோடு விவசாய அமைப்புகளும் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தன. ஆனால், விவசாயச் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களில் பல்வேறு தொடர் போராட்டங்களையும் மீறி, இந்தியா இந்த வர்த்தக ஒப்பந்த மாநாட்டில் கலந்துகொண்டது. ஒப்பந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘இந்த ஒப்பந்தத்தை எதற்கு தொடங்கினார்களோ அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாகத் தெரியவில்லை. அத்துடன், இந்தப் பிராந்தியப் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இந்தியாவின் நீண்டநாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் இல்லை. எனவே, இந்தியா இதில் இணைய முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து, இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் சீனாவும் மற்ற நாடுகளும் வர்த்தக சமநிலையைக் கடைப்பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருவேளை இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்தால், உள்நாட்டு வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்திருக்கும். இந்தியாவில் உற்பத்தி செய்வதைவிட குறைவான விலையில், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மலிவான வேளாண், தொழில்துறை பொருள்கள் வந்து குவிந்திருக்கும். இந்தச் சிக்கல்கள் வராமல் தடுப்பதற்காகவே மத்திய அரசாங்கம் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகியிருக்கிறது.

தற்போதைய நிலையில் இந்தியாவைத் தவிர மற்ற 15 நாடுகளும் இணைவது உறுதியாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு நன்மைபயக்கும் ஒப்பந்தமாகப் பார்க்கப்படுவதால், எதிர்காலத்தில் இந்தியா ஒருவேளை இதில் இணைந்தால், அது சீனாவுக்கு மிகப்பெரிய வெற்றியாகும்.

ஆர்.சி.இ.பி வர்த்தக ஒப்பந்தம்... இந்தியா இணையாதது லாபமா... நஷ்டமா?

இறுதி வரை சென்று மோடி பின்வாங்கியதற்கு என்ன காரணம்? பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம்.

‘‘தற்போதைய நிலையில், இந்த 15 நாடுகளுடனான நமது வணிகப் பற்றாக்குறை 104 பில்லியன் டாலராக இருக்கிறது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்திருக்கும் சூழலில், இறக்குமதி செய்யும் பொருள்களுக்குத் தரவேண்டிய பணம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இங்கு உள்ள தொழில் சார்ந்த நிறுவனங் களும் அமைப்புகளும் மற்ற நாடுகளிலிருந்து அதிகளவில் பொருள்களை இறக்குமதி செய்வதை அனுமதிப்பதில்லை. இறக்குமதியைக் குறைக்கச் சொல்வதோடு, அவற்றுக்கு வரியை அதிகப்படுத்தச் சொல்லியும் முறையிட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போல்தான்.

ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திடாமல் வந்ததால், இங்கு உள்ள விவசாயிகள், தொழில் முனைவோர்கள் என பல தரப்பினரும் மகிழ்ந்திருக்கின்றனர். மோடியின் இந்தச் செயல் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அதே சமயத்தில், ஏற்றுமதியை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் இனியாவது மேற்கொள்ள வேண்டும். சீனா மாதிரியான மிகப்பெரிய உற்பத்தி நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள நினைக்கும்போது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்திருக்க வேண்டும். இப்படி இறுதிவரை சென்று பின்வாங்க வேண்டிய அவசியமில்லை. இந்தியாவின் உற்பத்தியை அதிகப்படுத்தியிருந்தால், ஒப்பந்தத்தில் தைரியமாக கையெழுத்திட்டு மற்ற நாடுகளுடன் பொருள்களை சரிசமமாக ஏற்றுமதி இறக்குமதி செய்யலாம்.

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துக்காக, வர்த்தக ஒப்பந்தத்தை நழுவவிட வேண்டாம் என்றுதான் மத்திய அரசு நினைத்தது. அதனால்தான் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள பல எதிர்ப்புகள் வந்தாலும், அவற்றையும் மீறி கலந்துகொள்ள மோடி முடிவெடுத்ததாகத் தெரிகிறது. வர்த்தக உடன்பாட்டில் சில நிபந்தனைகளையும் கோரிக்கை களையும் முன்வைத்துப்பார்த்தார். அந்தக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால்தான், மோடி இந்த முடிவை எடுத்திருக்கிறார்’’ என்றார் அவர்.

‘‘தற்போதைய சூழ்நிலையில் இந்திய நிறுவனங்கள் உள்நாட்டு அளவில் கவனம் செலுத்திவரலாம். ஆனால், சில ஆண்டுகளிலேயே சர்வதேச அளவில் தன்னை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு அவை செல்லும். ஆர்.சி.இ.பி ஒப்பந்தம் அதற்கு மிகவும் அவசியம்’’ என்பது மற்றொரு பிரிவினரின் வாதம்.

‘‘ஆர்.சி.இ.பி ஒப்பந்தம், ஏற்றுமதிரீதியாகவும் முதலீட்டுரீதியாகும் புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடியது. அதில் பங்கேற்கும்பட்சத்தில் இந்தியாவின் ஏற்றுமதி உயரும். இந்த ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்துக்கு இந்தியா உடன்படாவிட்டால், இந்தியாவுக்கு பொருளாதாரரீதியான பாதிப்பை அது ஏற்படுத்தும். மற்ற 15 நாடுகளுடனான வர்த்தக உறவும் பாதிக்கப்படும். மற்ற 15 நாடுகள் தங்களுக்குள் வரியில்லாமல் பொருள்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்துகொள்ளும்போது, இந்திய உற்பத்திப் பொருள்களுக்கு வரி விதிக்கப்படுவதால், மற்ற நாட்டுப் பொருள்களுடன் போட்டியிட முடியாத நிலையும் ஏற்படும்’’ என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிப்பதுதான் இதுபோன்ற சிக்கல்களைக் களைவதற்கான நிரந்தரமான தீர்வு!