Published:Updated:

`வெரி ஸாரி.. மோடி அப்படியொரு கோரிக்கையை உங்களிடம் வைக்கவில்லை!' - ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை

பிரேம் குமார் எஸ்.கே.

அமெரிக்கா - பாகிஸ்தான் நாடுகள் சந்தித்துப் பேசும்போது பாகிஸ்தான் பிரதமர்கள் பெரும்பாலும் காஷ்மீர் தொடர்பாகப் பேசுவார்கள். அமெரிக்கா தலையிட்டு சுமுகத் தீர்வு கொண்டுவர வேண்டும் என்பார்கள்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின்போது அமெரிக்க அதிபருடனான சந்திப்பு, உலக வங்கித் தலைவருடன் பேச்சுவார்த்தை என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்ரான் கான் - ட்ரம்ப்
இம்ரான் கான் - ட்ரம்ப்

நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் இம்ரான் கான். அப்போது இம்ரான் கான், வெகு காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்கா உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய ட்ரம்ப், ``என்னால் உதவ முடிந்தால், நான் நிச்சயமாக இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராகச் செயல்படுவேன். இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினேன். அப்போது நாங்கள் இதே காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசினோம்.

தீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தும்வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை கிடையாது!
இந்தியா

அப்போது மோடி என்னிடம் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தராக இருக்க முடியுமா என்று கேட்டார். காரணம் இது நீண்ட காலமாக தீர்க்கப்படாமலே உள்ளது” என்றார். ட்ரம்ப்பின் இந்தக் கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.

காரணம், மோடி சொன்னதாக ட்ரம்ப் சொன்ன கருத்துகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் செய்திதொடர்பாளரான ராவேஷ் குமார் இது தொடர்பாக ட்விட்டரில், ``இந்தியப் பிரதமர் அப்படி ஒரு கோரிக்கையை அமெரிக்க அதிபரிடம் வைக்கவில்லை.

ட்ரம்ப்
ட்ரம்ப்

பாகிஸ்தான் நாட்டுடன் இருக்கும் அனைத்துப் பிரச்னைகளும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்க்கப்படும் என இந்தியா நம்புகிறது” எனப் பதிவிட்டார். தீவிரவாதிகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தும்வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை கிடையாது என இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் விளக்கத்துக்கு முன்னர் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், ``ட்ரம்ப் என்ன பேசுகிறார் என்பதை தெரிந்துதான் பேசுகிறாரா? அவர் விரிவாகவும் பேசவில்லை.. மோடி சொன்னதை சரியாகப் புரிந்துகொண்டாரா? மூன்றாம் நபர் மத்தியஸ்தம் செய்யும் என்ற நிலைப்பாட்டில்தான் இந்தியா இருக்கிறதா? இது தொடர்பாக வெளியுறவுத்துறை தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

இம்ரான் கான் - ட்ரம்ப்
இம்ரான் கான் - ட்ரம்ப்
Vikatan

அமெரிக்கா - பாகிஸ்தான் நாடுகள் சந்தித்துப் பேசும்போது பாகிஸ்தான் பிரதமர்கள் பெரும்பாலும் காஷ்மீர் தொடர்பாகப் பேசுவார்கள். அமெரிக்கா தலையிட்டு சுமுகத் தீர்வு கொண்டுவர வேண்டும் என்பார்கள். ஆனால் இந்தியாவோ, பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு உதவுவதை நிறுத்தும்வரை அதற்கு வாய்ப்பில்லை என தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய மத்தியஸ்தரை விரும்பவில்லை என்பதையும் தெளிவாகச் சொல்லிவருவது குறிப்பிடத்தக்கது!