Published:Updated:

`காப்பாற்ற குதித்தார், கரையேறவில்லை'- காங்கோவில் மாயமான இந்திய ராணுவ அதிகாரி

ஜெனிஃபர்.ம.ஆ

ஐ.நா அமைதிப்படையில் பணியிலிருந்த இந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் கௌரவ் சோலாங்கியைக் காணவில்லை.

கிவு ஏரி
கிவு ஏரி ( www.visitrwanda.com )

மத்திய ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள காங்கோ நாட்டில், ஐ.நா அமைதிப்படையில் பணியிலிருந்த இந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் கௌரவ் சோலாங்கி கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை. இதுகுறித்த செய்தியை ஐ.நா, இந்திய அதிகாரிகளுக்குத் தெரிவித்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியிருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவ அதிகாரிகள் (கோப்பு படம்)
இந்திய ராணுவ அதிகாரிகள் (கோப்பு படம்)

காங்கோ நாட்டில் உள்ள மனித உரிமை மீறல்கள், உள்நாட்டுப் போர் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டுவர தன்னுடைய அமைதிப்படையை ஐ.நா அங்கே பணித்திருக்கிறது. இந்தப் படையில் இந்திய ராணுவ அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். கடந்த சனிக்கிழமை இந்தியப் படையைச் சேர்ந்த மூன்று ராணுவ அதிகாரிகள் அங்குள்ள கிவு ஏரியில், கயாக் எனும் இருவர் அமரக்கூடிய படகுச் சவாரியில் ஈடுபட்டிருந்தனர். இருவர் ஒரு படகிலும் கௌரவ் தனிப்படகிலும் சென்றனர்.

அப்போது ஒரு படகு கவிழ்ந்ததில், இரு ராணுவ அதிகாரிகள் தண்ணீரில் மூழ்கியிருக்கின்றனர், இதைக் கண்ட கௌரவ் சோலாங்கி அவர்களைக் காப்பாற்றுவதற்காக, தான் அணிந்திருந்த உயிர்க்கவசத்தைக் கழட்டிவிட்டு நீரில் குதித்திருக்கிறார். சிறிது நேரத்தில், மற்ற இரு அதிகாரிகளும் கரையேற, சோலாங்கி மட்டும் மாயமானார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில், அவரைத் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணி நடைபெறுகிறது.

இந்திய ராணுவ அதிகாரிகள் (கோப்பு படம்)
இந்திய ராணுவ அதிகாரிகள் (கோப்பு படம்)

இந்திய ராணுவ வீரர்கள், ஐ.நா அமைதிப்படையில் மிக அதிகளவில் பணியில் இருப்பது காங்கோவில்தான். ஐ.நா-விற்கு அதிகளவு ராணுவப் படைகள், வீரர்களைத் தந்திருப்பதில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம் என்பது குறிப்பிடத்தக்கது.