ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்றுவரும் நிலையில், இந்தியர்களை மீட்க `ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் நடந்துவரும் இந்தப் பணிகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்துவருகிறது. உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இன்று 6-வது நாளாகத் தாக்குதல் நீடித்துவருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்திருப்பதாகவும், அங்கு இருக்கும் அரசு தலைமையகத்தைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மிகப் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், `இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தலைநகர் கீவ்-வில் இருந்து வெளியேறுங்கள். கிடைக்கூடிய ரயில் அல்லது இதர வாகனங்கள் மூலம் அவரசரமாக வெளியேறுங்கள்' எனத் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது. ரஷ்யா பெரும் படையுடன் கீவ் நகர் நோக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
