Published:Updated:

இந்திய வம்சாவளி, தன்பால் ஈர்ப்பாளர்; அயர்லாந்தின் பிரதமராகவிருக்கும் லியோ வரத்கர்!

லியோ வரத்கர்

இந்திய வம்சாவளியான லியோ வரத்கர், அயர்லாந்தின் பிரதமராகப் பொறுப்பு வகித்த முதல் தன்பால் ஈர்ப்பாளர் மற்றும் உலக அளவில் பிரதமர் பதவி வகிக்கும் நான்காவது LGBT சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆவார்.

இந்திய வம்சாவளி, தன்பால் ஈர்ப்பாளர்; அயர்லாந்தின் பிரதமராகவிருக்கும் லியோ வரத்கர்!

இந்திய வம்சாவளியான லியோ வரத்கர், அயர்லாந்தின் பிரதமராகப் பொறுப்பு வகித்த முதல் தன்பால் ஈர்ப்பாளர் மற்றும் உலக அளவில் பிரதமர் பதவி வகிக்கும் நான்காவது LGBT சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆவார்.

Published:Updated:
லியோ வரத்கர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அயர்லாந்து உள்ளிட்ட உலக நாடுகளில் உயர் பதவிகளில் முக்கியத் தலைவர்களாகக் கோலோச்சி வருகின்றனர்.

அந்தவகையில் அமெரிக்கத் துணை அதிபராக கமலா ஹாரிஸ், போர்ச்சுகல் பிரதமராக அன்டோனியோ கோஸ்டா, சிங்கப்பூர் அதிபராக ஹலிமா யாக்கோப், மொரீஷியஸ் பிரதமராக பிரவிந்த் ஜெகநாத், சுரினாம் அதிபராக சந்திரிகா பிரசாத் சந்தோகி, கயானாவின் அதிபராக இர்பான் அலி, நியூசிலாந்தின் சமூகம் மற்றும் தன்னார்வ அமைச்சராகத் தமிழகத்தைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன், செஷெல்ஸ் அதிபர் பதவியில் வேவல் ராமகலவன் உள்ளிட்டோர் உலக நாடுகளில் முக்கியத் தலைவர்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் அண்மையில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். இதையடுத்து தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 'லியோ வரத்கர்' அயர்லாந்தின் பிரதமராக மீண்டும் பதவி வகிக்கவுள்ளார்.

இந்திய வம்சாவளி, தன்பால் ஈர்ப்பாளர் எனப் பல அடையாளங்களைக் கொண்டுள்ள இந்த லியோ வரத்கர் யார்...? எப்படி அயர்லாந்தின் பிரதமராகவுள்ளார் என்பதைப் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களைப் பாப்போம்..!
லியோ வரத்கர்
லியோ வரத்கர்

லியோ வரத்கர் ஜனவரி 18, 1979ஆம் ஆண்டு அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் (Dublin) பிறந்தவர். இவரின் தந்தையான அசோக் வரத்கர் இந்தியாவைப் (மும்பை) பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் தந்தை 1960களில் இங்கிலாந்தில் மருத்துவராகப் பணியாற்றினார். பின்னர், அசோக் வரத்கர் அயர்லாந்தின் வம்சாவளியைச் சேர்ந்த மிரியம் (Miriam) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சில காலம் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் வாழ்ந்து வந்த இவரது குடும்பம் 1973ஆம் ஆண்டு அயர்லாந்தின் தலைநகர் டப்ளினிக்கு (Dublin) புலம் பெயர்ந்தனர். அசோக் வரத்கரின் மூன்றாவது குழந்தையான லியோ வரத்கர் வளர்ந்ததெல்லாம் டப்ளின் மாநகரில்தான். டப்ளினில் டிரினிட்டி கல்லூரியில் (Trinity College Dublin) மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற லியோ வரத்கர், சில ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றினார்.

தனது குடும்பத்துடன் இந்தியா (மும்பை) வந்திருந்த லியோ வரத்கர்.
தனது குடும்பத்துடன் இந்தியா (மும்பை) வந்திருந்த லியோ வரத்கர்.

அரசியல் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பினால் அயர்லாந்தில் செல்வாக்குப் பெற்ற 'ஃபைன் கேல் (Fine Gael)' கட்சியில் சேர்ந்து முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர், 2007ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு டப்ளின் வெஸ்ட் பகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் (Fine Gael TD) தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில் ஐரிஷ் சட்டமன்றத்தில் (Dáil Éireann) தொழில், வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்புக்கான செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பெற்றிருந்தார். பின்னர் 2011ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அதிக வாக்குகளுடன் வெற்றிபெற்று 'எண்டா கென்னி (Enda Kenny)' தலைமையிலான ஆட்சியில் 2011- 2014 வரை போக்குவரத்து, சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். இதைத் தொடர்ந்து 2014 – 2016 வரை சுகாதாரத் துறை அமைச்சராகவும், 2016-2017 வரை சமூகப் பாதுகாப்பு அமைச்சராகவும் (Minister for Social Protection) பொறுப்பெற்றிருந்தார்.

அதன்பின் 2017ஆம் ஆண்டு ஃபைன் கேல் (Fine Gael) கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2017- 2020 வரை அயர்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தார். இதன் மூலம் அயர்லாந்தின் பிரதமராகத் தேர்தெடுக்கபட்ட முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

அதுமட்டுமன்றி, அயர்லாந்தின் பிரதமராகப் பொறுப்பு வகிக்கும் முதல் தன்பால் ஈர்ப்பாளர்(Gay) மற்றும் உலக அளவில் பிரதமர் பதவி வகிக்கும் நான்காவது LGBT சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
List of LGBT prime ministers
List of LGBT prime ministers

LGBT பிரதமர்களில் முதல் நான்கு இடங்கள் வகிக்கும் பிரதமர்கள்.

  1. ஜொஹானா சிகுரார்டோட்டிர் (Jóhanna Sigurðardóttir) - ஐஸ்லாந்தின் பிரதமராக நான்கு ஆண்டுகள் 2009- 2013 வரை பதவி வகித்தார்.

  2. எலியோ டி ரூபோ (Elio Di Rupo) - பெல்ஜியத்தின் பிரதமராக இரண்டு ஆண்டுகள் 2011-2014 வரை பதவி வகித்தார்.

  3. சேவியர் பெட்டல் (Xavier Bettel)- லக்சம்பர்க்கின் பிரதமராக 8 ஆண்டுகளாக 2013-2022* பதவி வகித்துவருகிறார்.

  4. லியோ வரத்கர் (Leo Varadkar)- அயர்லாந்தின் பிரதமராக 2017- 2020 வரை பதவி வகித்தார்.

லியோ வரத்கர் (Leo Varadkar)
லியோ வரத்கர் (Leo Varadkar)

இதையடுத்து, 2020ஆம் ஆண்டு ஃபியானா ஃபெயில் (Fianna Fáil), ஃபைன் கேல் (Fine Gael) மற்றும் கிரீன் பார்ட்டி (Green Party) என மூன்று பெரிய கட்சிகளின் கூட்டணியில் அமைந்த ஆட்சி அமைந்தது. இதில் ஃபியானா ஃபெயில் கட்சி 38 சீட்டுகளையும், ஃபைன் கேல் 35 சீட்டுகளையும் பெற்றிருந்தன. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளிடையே பிரதமர் பதவிக்கான போட்டி அதிகரித்தது. பின்னர், இதற்கு முடிவு காணும் விதமாக 2020- 2025வரை ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் முதல் பாதி ஃபியானா ஃபெயில் கட்சியின் தலைவரான 'மைக்கேல் மார்ட்டின்' அயர்லாந்தின் பிரதமராகப் பதவி வகிப்பார் என்றும் அதன் பிறகு இருக்கும் மீதி ஆட்சிக்காலத்தில் ஃபைன் கேல் கட்சியின் தலைவரான லியோ வரத்கர் பிரதமராகப் பதவி வகிப்பார் என்றும் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இது அந்தச் சமயத்தில், கூட்டணிக் கட்சிகளிடையே நிகழ்ந்த பல குழப்பங்களுக்குத் தீர்வாக இருந்தது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தின்படி, அயர்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்த மைக்கேல் மார்ட்டினின் காலக்கெடு முடிவடையவுள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் தற்போது அயர்லாந்தின் துணைப் பிரதமராக இருக்கும் லியோ வரத்கர், மீதி இருக்கும் ஆட்சிக்காலத்திற்குப் பிரதமராகப் பதவி ஏற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உலகளவில் முக்கியத் தலைவர்களாக அரசின் பதவிகளில் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இந்திய வம்சாவளியும், LGBT சமூகத்தைச் சேர்ந்தவருமான 'லியோ வரத்கர்' மீண்டும் அயர்லாந்தின் பிரதமர் பதவியில் அமரவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.