Published:Updated:

தாலிபன்- ஆப்கன் மோதல்: இந்தியாவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார்!

புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்
புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் ( Danish Siddiqui / Twitter )

ஆப்கானிஸ்தான், இராக் போர், ரோஹிங்கியா அகதிகள் முகாம், ஹாங்காங் போராட்டங்கள், நேபாள நிலநடுக்கங்கள் என உலக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளை டேனிஷ் தன்னுடைய புகைப்படக் கருவிகளில் பதிவு செய்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கும், அந்நாட்டின் ராணுவப் படைகளுக்குமான போரில் அமெரிக்கா தனது ராணுவப் படைகளை அனுப்பி தாலிபன் பயங்கரவாதிகளை அழிக்க ஆப்கன் படைகளுக்கு உதவியது. ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் வீழ்ச்சிக்குப் பிறகு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டு பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலம் முதலே தனது படைகளை அமெரிக்கா அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பப் பெற்றுவந்தது. அந்த வகையில் தற்போதுதான் அமெரிக்கப் படைகள் 90 சதவிகிதம் அளவுக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பியிருக்கின்றன.

அமெரிக்கப் படைகள் முழு வீச்சில் வெளியேறிவருவதைத் தொடர்ந்து, இனி நாட்டைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் ஆப்கன் படைகளிடம்தான் என்றாகிவிட்ட நிலையில், ஆப்கானிஸ்தானில் சில ஆண்டுக்காலம் பதுங்கியிருந்த தாலிபன் பயங்கரவாதிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர். அதனால், தாலிபன்களின் கை அண்மையில் அங்கு ஓங்கியிருக்கிறது. அதன் காரணமாக, கடந்த சில வாரங்களாக மீண்டும் தாலிபன்களுக்கும் ஆப்கன் படைகளுக்கும் இடையே பயங்கர மோதல் நிலவிவருகிறது.

தாலிபன்
தாலிபன்

இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரத்தில் வெள்ளிக்கிழமை இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல செய்தி புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டதாக, சர்வதேச ஊடங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவந்த மும்பையைச் சேர்ந்த டேனிஷ் சித்திக் தாலிபன் - ஆப்கன் படைகளுக்கு இடையேயான மோதல்களைப் பதிவு செய்வதற்காக ஆப்கன் சிறப்புப் படையினருடன் தங்கியிருந்தபோது தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

டெல்லியின் கொரோனா மரணங்கள், ஆக்சிஜன் தட்டுப்பாடு என கொரோனா காலத்தில் ராய்ட்டர்ஸ் சார்பாகப் புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் எடுத்த புகைப்படங்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தியச் செய்திப் புகைப்பட கலைஞரான டேனிஷ் 2018-ல் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் சார்பில் ரோஹிங்கியா அகதிகளின் இன்னல்களை ஆவணப்படுத்தியதற்காக ஊடக உலகின் மிக உயரிய விருதான புலிட்சர் விருதை வென்று இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்தார்.

டேனிஷ் எடுத்த புகைப்படம்
டேனிஷ் எடுத்த புகைப்படம்

புகைப்பட கலைஞர் டேனிஷ் உலகம் முழுவதும் கவனிக்கத்தக்க மக்கள் பிரச்னைகளைக் காலம், நேரம் பார்க்காமல் பயணித்து தன்னுடைய புகைப்படங்களால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, பிரச்னைகளுக்குத் தீர்வு காணுவதில் அதீத முனைப்பு காட்டக் கூடியவர். ஆப்கானிஸ்தான் போர், இராக் போர், ரோஹிங்கியா அகதிகள் இன்னல்கள், ஹாங்காங் போராட்டங்கள் மற்றும் நேபாள நிலநடுக்கங்கள் என உலக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அனைத்துப் பிரச்னைகளையும், நிகழ்வுகளையும் டேனிஷ் தன்னுடைய புகைப்படக் கருவிகளில் பதிவு செய்திருக்கிறார்.

டேனிஷ் கடந்த சில தினங்களாகவே ஆப்கன் சிறப்புப் படைகளுடன் இருந்து தாலிபன் - ஆப்கன் மோதல்களைப் படம் பிடித்து வெளி உலகுக்கு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் மூலம் நிலவரத்தைத் தெரியப்படுத்திவந்தார். இந்தநிலையில், அவர் (வெள்ளிக்கிழமை) இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலில் கொல்லப்பட்டதாக இன்று காலை முதலே செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. எனினும், ஆப்கானிஸ்தான் தரப்பிலிருந்து இன்னும் டேனிஷ் மரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

டேனிஷின் ட்விட்டர் பதிவு.
டேனிஷின் ட்விட்டர் பதிவு.

அமெரிக்கப் படைகள் விலகிக்கொண்டதால், ஆப்கன் படைகளுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கும் இந்த இக்கட்டான சூழலில், ஏற்கனவே இருமுறை தான் தாலிபன் தாக்குதலில் மயிரிழையில் உயிர் பிழைத்ததாக அண்மையில் டேனிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தநிலையில், அவரது மறைவுச் செய்தி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு