Published:Updated:

இந்தியப் பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை... வெள்ளை மாளிகையில் நேரடியாக வழங்கிய ட்ரம்ப்!

சுதா சுந்தரி - ட்ரம்ப்
சுதா சுந்தரி - ட்ரம்ப்

``சுதா திறமையான மென்பொருள் உருவாக்குநர். அவர், தன் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு மிக்க நன்றியும் வாழ்த்துகளும்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அரிய நிகழ்வு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அதில் இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவின் குடியுரிமையை அதிபர் ட்ரம்ப் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த சுதா சுந்தரி நாராயணன் என்பவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. சுதா, கடந்த 13 வருடங்களாக நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை நிகழ்வு
வெள்ளை மாளிகை நிகழ்வு

பின்னர், ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவின் சட்ட விதிகளைப் பின்பற்றுவதாக, அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் சாட் வொல்ஃப் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அப்போது பேசிய அதிபர் ட்ரம்ப், ``மதம், நிறம், இனம் என எல்லாவற்றையும் உள்ளடக்கிய அற்புதமான தேசத்துக்கு உங்களை வரவேற்கிறேன். எங்கள் பெரிய அமெரிக்கக் குடும்பத்தில் ஐந்து புதிய உறுப்பினர்களை வரவேற்பதில் அமெரிக்கா மகிழ்ச்சியடைகிறது.

புதிதாகக் குடியுரிமை பெற்றுள்ள இந்த மக்கள் அமெரிக்காவின் விதிகளைப் பின்பற்றி, சட்டங்களுக்குக் கீழ் படிந்து நம் நாட்டின் வரலாற்றைக் கற்றுக்கொண்டனர். அவர்கள் தங்களை ஒரு உயர்ந்த ஒருமைப்பாட்டின் குடிமக்களாக நிரூபித்துள்ளனர். இது அவ்வளவு எளிதானது அல்ல. இதற்காக நீங்கள் நிறைய விஷயங்களைச் சந்தித்திருப்பீர்கள். இன்று நீங்கள் எங்களுடன் இருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம்.

இன்று நீங்கள் அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் அமெரிக்க வாழ்க்கை முறைக்கு அழியாத விசுவாசத்தைத் தருவதாக உறுதியளித்துள்ளீர்கள். சத்தியப் பிரமாணம் செய்ததன் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் எங்கள் தேசத்துடன் ஒரு புனிதமான மற்றும் உடைக்க முடியாத உடன்படிக்கையில் நுழைந்துள்ளீர்கள்” எனக் கூறிய ட்ரம்ப், ஐந்து புதிய குடிமக்களின் பெயர்களையும் அவர்களின் சில விவரங்கள் பற்றியும் பேசியுள்ளார்.

``சுதா திறமையான மென்பொருள் உருவாக்குநர். அவர், தன் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவருக்கு மிக்க நன்றியும் வாழ்த்துகளும்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் அந்நாட்டின் குடியுரிமைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அமெரிக்கக் குடிமக்களுக்கு வேலை, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனக் கூறி வருகிறார். தற்போது கோவிட் -19 பரவலால் அமெரிக்காவில் வேலை இழப்புகள் அதிகரித்து அந்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் H1B விசா இடைநிறுத்தப்படுவது போன்ற பல்வேறு கடுமையான குடியேற்ற கட்டுப்பாடுகளை ட்ரம்ப் விதித்திருந்தார். இதற்கு மத்தியில் இந்தியர் ஒருவருக்கு வெள்ளை மாளிகை நிகழ்வில் நேரடியாக அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு