Published:Updated:

`அடர்ந்த காட்டுப்பயணம்; உணவு இல்லை!’- மெக்சிகோ வழியாக அமெரிக்கா செல்ல முயன்ற இந்தியர்கள் கண்ணீர்

இந்தியர்கள்
இந்தியர்கள் ( Twitter )

``யூடியூபில் வீடியோ பார்க்கும்போது, அது அவ்வளவு கடினமானதாக இல்லை. உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் காட்டில் நடந்துசெல்ல வேண்டும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.”

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களைத் தடுக்க, அந்நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை மெக்சிகோ அரசு தடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மெக்சிகோவிலிருந்து தங்கள் நாட்டுக்கு இறக்குமதியாகும் பொருள்களின் வரி உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க, மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் ஒன்றையும் அமெரிக்க அரசு கட்டி எழுப்பியுள்ளது. இந்நிலையில், பனாமாவில் உள்ள டேரியன் இடைவெளி வழியாக பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த 300 பேர், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேற மெக்சிகோவை அடைந்துள்ளனர். தாகம், நோய் எனப் பல்வேறு கஷ்டங்களுக்கிடையே அவர்கள், ஒரு மாதமாகப் பயணித்துள்ளனர்.

பாதிக்கப்படவர்கள்
பாதிக்கப்படவர்கள்
Twitter

இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறுவதற்காக விசா ஏஜென்ட்டுகளை நாடியபோது, ஒருத்தருக்கு 15-20 லட்சம் செலவாகும் என அவர்கள் கூறியுள்ளனர். வேலையில்லாமல், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட, விவசாயக் குடும்பத்தைப் பின்புலமாகக் கொண்டவர்கள். சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் குறித்த வீடியோக்கள் பார்த்து, தாங்களும் இதுபோல செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

``யூடியூபில் வீடியோ பார்க்கும்போது, அது அவ்வளவு கடினமானதாக இல்லை. உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் காட்டில் நடந்துசெல்ல வேண்டும் என்று எனக்கு அப்போது தெரியவில்லை” என்கிறார் சேவாக் சிங் (26) என்பவர்.

சங்குரூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி தீப்சிங், ``எங்களுடைய நண்பர்கள் பலர் அமெரிக்காவில் இருக்கின்றனர். நாங்கள் அவர்களிடம், இந்த விசா ஏஜென்ட்டுகள் குறித்துக் கேட்டோம். ஜலந்தரில், இந்த ஐடியாக்கள் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகள் மூலம் விற்கப்படுகின்றன என்றார்கள். இப்படி ஏஜென்ட்டுகள் மூலம் அமெரிக்காவில் குடியேறுவதற்கு ஒரே ஒரு போட்டோ மட்டும் தேவை. நாங்கள், முதலில் பஞ்சாப்பிலிருந்து டெல்லிக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அங்கு, எங்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. அதில், நாங்கள் எங்கே செல்ல வேண்டும் என்ற தகவலும் இருந்தது. எகுவடரில் விமானத்தில் சென்று, அங்கிருந்து கொலம்பியா, பிரேசில், பெரு, பனாமா, கோஸ்டாரிகா, நிகர குவா, ஹோண்டுராஸ், குவாத்தமாலா மற்றும் இறுதியாக மெக்சிகோவுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்” என்றார். மற்றொருவர் கூறுகையில், ``இந்தப் பயணத்தில் 5 முதல் 6 பேர் துப்பாக்கி ஏந்தியபடி எங்களுடன் வருவார்கள்” என்றார்.

இந்தியர்கள்
இந்தியர்கள்
Twitter

பனாமாவிலிருந்து அவர்கள் பயணம் இவ்வளவு மோசமாக இருக்கும் என நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். 5-7 நாள்கள் அடர்ந்த காட்டில் தாங்களாகவே பயணம் செய்ய அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். இது தொடர்பாக சோனு (22) என்பவர் கூறுகையில், ``காட்டில் அந்தப் பாதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. வழி நெடுகிலும் பிளாஸ்டிக் பைகள் ஏற்கெனவே அங்கு கிடந்தன. 3 நாள்கள் நாங்கள் தண்ணீர்கூட குடிக்கவில்லை. அங்கு உணவும் இல்லை. விலங்குகள் நிறைந்த அந்தக் காட்டில், எங்களில் பலர் நோய்வாய்ப்பட்டனர்'' என்றார்.

``மெக்சிகோவுக்கு வந்தடைந்ததும், அதிகாரிகளால் நாங்கள் கைதுசெய்யப்பட்டோம். பின்பு, முகாம்களில் அடைக்கப்பட்டோம். அது சிறையைப்போல இருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அவர்கள் எங்களை வெளியே அழைத்துச்சென்றனர். ஒருநாளைக்கு இரண்டு முறை உணவு கொடுத்தனர். அவர்கள் எங்களை உள்ளே மூடி வைத்திருந்தார்கள்; அனைவருக்கும் நோய்கள் வந்தன” என்கிறார் 24 வயதான ரிங்குராம். இவர், ஹரியானாவைச்சேர்ந்தவர். அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளார். 30 நாள்களுக்கு மேலாக அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு
பாதிப்பு
Twitter

பின்பு அவர்கள் அனைவரும் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியா திரும்பிய பிறகு, அவர்கள் பெரும் மன அழுத்தத்துக்கும் ஏமாற்றத்துக்கும் ஆளாகியுள்ளனர். தீப் சிங் கூறுகையில், ``மெக்சிகோவை அடைய எனக்கு நான்கு மாதங்கள் தேவைப்பட்டது. 45 நாள்கள் அவர்கள் எங்களை முகாம்களில் அடைத்துவைத்தனர். நான் என் நிலத்தை விற்றுவிட்டேன். இப்போது என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை” என்று வேதனை தெரிவிக்கிறார். மஞ்சித் சிங் என்பவர், `கடந்த 2014-ம் ஆண்டு முதல் வேலையில்லாமல் தவித்துவருகிறேன். இது, என்னுடைய கடைசி முயற்சியாக இருந்தது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு