Published:Updated:

ஜூலியன் அசாஞ்சே முதல் நித்யானந்தா வரை... ஈக்வடார் என்னும் பூலோக சொர்க்கத்தின் ஸ்பெஷல் என்ன?

ஈக்வடார் நாட்டின் அழகிய மலை ரயில்
ஈக்வடார் நாட்டின் அழகிய மலை ரயில்

உலகின் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று முதன்முறையாக 1979-ம் ஆண்டு 32 பகுதிகளை ஐ.நா அறிவித்தது. அதில், முதல் இரு இடங்களும் ஈக்வடார் நாட்டைச் சேர்ந்தவை.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போதுதான் ஈக்வடார் நாட்டின் பெயரையே இந்தியாவில் சிலர் உச்சரிப்பார்கள். இப்போது, நித்யானந்தாவின் புண்ணியத்தில், ஈக்வடார் நாடு இந்தியா முழுக்க பாப்புலராகியுள்ளது. இந்தியாவில் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ள நிலையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஈக்வடார் நாட்டிடம் இருந்து தனித் தீவை வாங்கி, 'கைலாஷா ' என்ற பெயரில் புதிய நாட்டை நித்யானந்தா உருவாக்கியுள்ளதாகச் செய்திகள் உலவுகின்றன. ரிசர்வ் வங்கி, தனிக்கொடி, தனி நாணயம் எனப் புதிய நாடு உருவாக்கும் முயற்சியில் நித்யானந்தாவின் சீடர்கள் ஐ.நா வரை சென்று அணுகியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நித்யானந்தா
நித்யானந்தா

நித்யானந்தாவை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே இந்த நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர், கைலாஷ்.ஆர்க் என்ற பெயரில் உள்ள தனி வெப்சைட்டை அணுகலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வெப்சைட் பனாமா நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் சர்வர் இயங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி முதல் இந்த வெப்சைட் இயங்கத் தொடங்கியுள்ளது. கடைசியாக, கடந்த அக்டோபர் மாதம் 10-ம் தேதி, இந்த வெப்சைட்டில் தகவல் பதிவேற்றப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, எந்தத் தகவலும் பதிவேற்றப்படவில்லை. விக்கிபீடியா போல நித்யானந்தபீடியா என்ற வெப் பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.

தென்அமெரிக்காவின் ஈக்வடார் அருகேதான் பனாமா நாடும் உள்ளது. இதனால், நித்யானந்தா தனி நாடு உருவாக்கப்போவது உண்மையே என்றும் கருத வேண்டியுள்ளது. ஈக்வடார் நாட்டை, பூலோக சொர்க்கம் என்றும் சொல்வார்கள்.

கொலம்பியா நாடு ஸ்பெயின் நாட்டின் பிடியில் இருந்தது. ஸ்பெயின் அரசு, கொலம்பியாவுக்கு விடுதலை கொடுத்தபோது, ஈக்வடார், பனாமா என இரு புதிய நாடுகள் உருவாகின. உலகிலேயே பூமத்திய ரேகைக்கு (equator ) மிக நெருக்கமாக இருக்கும் நாடு இது. இதனால், ஈக்வடார் என்ற பெயரிலேயே இந்த நாடு அழைக்கப்பட்டது. பூமியில் எவரெஸ்ட் சிகரம்தான் விண்வெளிக்கு அருகில் உள்ள பகுதி என்று நினைத்தால், அது தவறு .

சிம்ப்ரோஸோ மலை
சிம்ப்ரோஸோ மலை

ஈக்வடாரில் உள்ள 'Chimborazo' மலைப் பகுதிதான் விண்வெளிக்கு நெருக்கமாக உள்ள பகுதி என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். எவரெஸ்ட் சிகரத்தைவிட இந்த மலை 1.5 மைல் அளவு விண்வெளிக்கு நெருக்கமாக இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்துதான் சிகரங்கள் அளவிடப்படுகின்றன. ஈக்வடார் நாட்டில், கடல் மட்டமும் உயரமான இடத்தில் இருப்பதால் சிம்ப்ரோஸோ சிகரத்தின் உயரம் குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நித்யானந்தா உண்மையில் எங்கே இருக்கிறார்? #Nithyananda #Kailaasa

உலகின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என்று முதன்முறையாக 1979- ம் ஆண்டு 32 பகுதிகளை ஐ.நா அறிவித்தது. அதில், முதல் இரு இடங்களும் ஈக்வடார் நாட்டில் இருந்தன. முதல் இடத்தில் ஈக்வடார் நாட்டின் கலபாகஸ் தீவும் அடுத்த இடத்தில் இந்தக் குட்டி நாட்டின் தலைநகரான குயிட்டாவும் இருந்தன. உலகிலேயே குயிட்டா நகரம்தான் அதிக உயரத்தில் உள்ள தலைநகரம். கடல் மட்டத்திலிருந்து 2,850 மீட்டர் உயரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. ஐ.நா -வின் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட உலகின் முதல் நகரமும் இதுதான்.

கலபாகாஸ் தீவு
கலபாகாஸ் தீவு

கலாசார செழிப்பு மிகுந்த இந்த நகரம், 16-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்பானிஷ் முக்கிய மொழி. மக்களில் பெரும்பாலோனோர் ரோமன் கத்தோலிக்கர்கள். சுற்றுலாதான் முக்கியத் தொழில். ஈக்வடாரில் உள்ள ஆண்டிஸ் மலைத் தொடரில் இயக்கப்படும் ரயில்கள், நீலகிரி குட்டி ரயிலைப் போல உலகப்புகழ்பெற்றவை. தலைநகர் குயிட்டாவிலிருந்து நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயிலிலேயே 3,4 நாள்கள் பயணித்து , ஈக்வடார் நாட்டின் அழகை ரசிப்பது வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். அழகிய கடற்கரைகள், தீவுகள் உங்கள் மனதை மயக்கிவிடும். இந்தத் தீவுகள், வாழ்நாள் முழுவதும் அங்கேயே வாழலாம் என்று நினைக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகளைக் கிறங்கடிக்கும்.

ஈகுவடார் நாட்டின் அழகின் ரகசியங்களை அவரின் சீடர் ஒருவர்தான் நித்யானந்தாவிடம் கூறியிருக்கிறார். தொடர்ந்து, ஈக்வடார் நாட்டின் அழகிய தீவு ஒன்றை நித்யானந்தா வாங்கியதாகவும் தகவல்கள் உள்ளன. உலக நாடுகளுக்கு அஞ்சாமல், 'விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்குப் புகலிடம் கொடுத்த நாடு ஈக்வடார். அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்களை வெளியிட்ட, ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் இரு பாலியல் வழக்குகள் பதியப்பட்டன.

குயிட்டா  நகரம்
குயிட்டா நகரம்

அப்போது லண்டனில் இருந்த அசாஞ்சே, ஈக்வடார் நாட்டு தூதரகத்தில்தான் தஞ்சமடைந்தார். சுமார் 3 மாதங்கள் ஈக்வடார் தூதரகத்தில் அவர் இருந்தார். இங்கிலாந்து அரசு மிரட்டிக் கேட்டும் அசாஞ்சேவை ஒப்படைக்க மறுத்துவிட்டது ஈக்வடார். தூதரகத்தைச் சுற்றி போலீஸை நிறுத்தி, இங்கிலாந்து கண்காணித்தது. பின்னர், சர்வதேச விதிமுறைளைத் தொடர்ந்து மீறி வந்ததால், அசாஞ்சேவுக்கு அளித்த தஞ்சத்தைக் கைவிட்டது ஈக்வடார். அதே போல, இந்தியாவில் பல்வேறு வழக்குகள் உள்ள நித்யானந்தாவுக்கு தீவைக் கொடுத்து அரவணைத்துக் கொண்டுள்ளது ஈகுவடார் என்றே கருதவேண்டியுள்ளது. இதற்கிடையே, டெல்லியில் உள்ள ஈகுவடார் தூதரகம் நித்தியானந்தவுக்கு தங்கள் நாடு தஞ்சம் அளிக்கவில்லை, தீவு எதையும் விற்கவும் இல்லையென மறுத்துள்ளது.

நித்தி மீண்டும் வெளியே தலைகாட்டினால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்!

அடுத்த கட்டுரைக்கு