Published:Updated:

நியூஸ் எம்பஸி

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில், ஆளுநர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தொழிலதிபரான ஜான் காக்ஸ், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

பிரீமியம் ஸ்டோரி

மே 8-ம் தேதியன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மிகப்பெரிய குண்டு வெடிப்புச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. காபூல் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது சயீத்-உல்-சுஹாதா பெண்கள் உயர்நிலைப் பள்ளி. மாணவிகள் பள்ளியைவிட்டு வெளியேறும்போது, முதலில் கார் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாகவும், அதைத் தொடர்ந்து பள்ளி வளாகத்துக்கு வெளியே இரண்டு குண்டுகள் வெடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில் சுமார் 85 பேர் உயிரிழந்திருக் கின்றனர். உயிரிழந்தவர்களில், பெரும்பாலானோர் 11-15 வயதுடைய குழந்தைகள் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

நியூஸ் எம்பஸி

இந்தச் சம்பவத்துக்கு இதுவரை எந்தவோர் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாலிபன்கள்தான் இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி (Ashraf Ghani). ஆனால், இதைத் திட்டவட்டமாக மறுத்ததோடு, இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனங்களையும் பதிவுசெய்திருக்கிறது தாலிபன்கள் அமைப்பு. #கடும் கண்டனங்கள்!

நியூஸ் எம்பஸி

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில், ஆளுநர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தொழிலதிபரான ஜான் காக்ஸ், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். `மீட் தி பீஸ்ட்’ என்ற பெயரில், 454 கிலோ எடைகொண்ட கரடியை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் இவர். இதனால் ஜான் காக்ஸ் செல்லும் இடங்களில் அதிக அளவில் கூட்டம் கூடுகிறதாம். கூடுபவர்கள் அனைவரும் கரடியைக் காணவே கூடுவதாகவும், இவை எதுவும் வாக்குகளாக மாறாது என்றும் சொல்லப்படுகிறது. ``வாக்கு வேண்டாம்... கூட்டம் கூடினால் போதும்’’ என்கிறாராம் ஜான் காக்ஸ். முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கட்சியைச் சேர்ந்தவரான ஜான் காக்ஸ், ட்ரம்ப்பைப்போலவே விநோதமாக நடந்துகொள்வதாகக் கேலி, கிண்டல்கள் ஒருபுறம் கிளம்ப, `இது மிருகவதை’ என்று மற்றொருபுறம் எதிர்ப்புகளும் வரத் தொடங்கியிருக்கின்றன. #அமெரிக்காவில் ஒரு மன்சூர் அலிகான்

நியூஸ் எம்பஸி

சீனாவின் வென்சங் ஏவுதளத்திலிருந்து, கடந்த ஏப்ரல் 29-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது லாங் மார்ச் 5பி (Long March 5B) ராக்கெட். இந்த ராக்கெட், விரைவில் நிறுவப்படவிருக்கும் சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனின் ஒரு பகுதியை விண்ணுக்கு எடுத்துச்சென்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த ராக்கெட்டின் 23 டன் எடை கொண்ட ஒரு பாகம் ராக்கெட்டிலிருந்து தனியாகப் பிரிந்து பூமி நோக்கி கீழே விழுந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. `இந்த ராக்கெட்டின் பாகங்கள், பூமியில் பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறைவுதான். பெரும்பாலும் இதன் பாகங்கள் கடலில்தான் விழும்’ என்று சீனா தெரிவித்திருந்தது. அதேபோல மே 9-ம் தேதி அதிகாலையில், ராக்கெட்டின் உடைந்த பாகங்கள் மாலத்தீவு அருகே கடலில் விழுந்திருக்கின்றன. சீன ராக்கெட்டின் பாகங்கள் பூமியில் விழுவது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சீன ராக்கெட்டின் பாகங்கள் அட்லாண்டிக் பெருங்கடலிலும், மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு கிராமத்திலும் விழுந்தன. உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றாலும் ‘இது தொடர்ந்தால், மனிதகுலம் பெரும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்’ என்று சீனாவுக்கு மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. #சோதிக்காதீங்கய்யா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு