Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் எம்பஸி

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெற்றுவருகின்றன.

நியூஸ் எம்பஸி

பூமியின் செயல்பாட்டில் முக்கியப் பங்காற்றும் உயிரினமான தேனீக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நேஷனல் ஜியாகிரஃபியோடு இணைந்து தன் உடம்பில் தேனீக்களைவிட்டு, போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஏஞ்சலினா ஜோலி. இந்த போட்டோஷூட்டை நடத்திய டான் வின்ட்டர்ஸ், ``மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த போட்டோ ஷூட்டை மேற்கொண்டிருக்கிறோம். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ரிச்சர்ட் அவென்டான் எடுத்த `The Beekeeper Portrait’ படம்தான் இதற்கு முன்மாதிரி. தேனீக்களைக் கவர்வதற்காக ஏஞ்சலினாவின் உடலில், ஒருவகை ரசாயனம் தடவப்பட்டிருந்தது. 18 நிமிடங்கள் தன் உடலில் தேனீக்கள் மொய்க்க போஸ் கொடுத்திருக்கிறார் ஏஞ்சலினா’’ என்று கூறியிருக்கிறார். பூக்களை மட்டுமே மொய்க்கும் தேனீக்களை தன் உடலில்விட்டு, ஏஞ்சலினா எடுத்திருக்கும் இந்த போட்டோ ஷூட் மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கிறது!

நியூஸ் எம்பஸி

லண்டனைச் சேர்ந்த ஷே சேட் (Shay Sade) என்ற பெண் 2020-ம் ஆண்டு, ஷாப்பிங்கெல்லாம் போய்விட்டு வீட்டுக்கு வந்தபோது தன் செல்போனை எங்கோ தவறவிட்டதை உணர்ந்திருக்கிறார். சில மணி நேரங்களுக்கு முன்பே சார்ஜ் இல்லாததால், ஆஃப் ஆன அந்த போனுக்கு வேறு செல்போனிலிருந்து போன் செய்தவருக்கு, `ஸ்விட்ச் ஆஃப்’ என்கிற பதில்தான் கிடைத்திருக்கிறது. இரண்டொரு நாள்கள் தான் சென்ற கடைகளுக்கெல்லாம் சென்று விசாரித்துவிட்டு, கிடைக்காது என்று விட்டுவிட்டார். சுமார் எட்டு மாதங்கள் கழித்து, சமீபத்தில் ஒரு ஊபர் டாக்ஸியில் பயணம் செய்திருக்கிறார் சேட். அவரை அடையாளம் கண்டுகொண்ட ஓட்டுநர், சேடிடம் செல்போனை ஒப்படைத்திருக்கிறார். ``உங்களைத் தொடர்புகொள்ள வேறு எண் இல்லை. இந்த விலையுயர்ந்த போனுக்கு சார்ஜ் போட்டு, உங்களைத் தொடர்புகொள்வது எப்படி என்றெல்லாம் எனக்குத் தெரியாது. உங்கள் முகம் மனதில் பதிந்திருந்தது. எப்படியேனும் உங்களை மீண்டும் பார்ப்பேன், நிச்சயம் கொடுத்துவிடுவேன் என்று நம்பினேன்” என்று ஓட்டுநர் சேடிடம் சொல்லியிருக்கிறார். இதைக் குறிப்பிட்டு, ``மனிதம் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது’’ என்று பதிவிட்டிருக்கிறார் ஷே சேட்.

நியூஸ் எம்பஸி

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, Chalchuapa நகரில் 57 வயதாகும் தாய் மற்றும் 26 வயதுடைய மகள் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் முன்னாள் காவல் அதிகாரியான ஹியூகோ எர்னெஸ்டோ ஓசோரியோ கைது செய்யப்பட்டார். கடும் விசாரணைக்குப் பின்னர் ஹியூகோ, இருவரின் உடல்களையும் தன் வீட்டிலிருக்கும் தோட்டத்தில் புதைத்துவைத்திருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து ஹியூகோ வீட்டுத் தோட்டத்தில் தோண்டும் பணியை மேற்கொண்ட காவல்துறையினருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. தோண்டத் தோண்டப் பிணங்கள் வந்து கொண்டேயிருக்க, இதுவரை 40 உடல்கள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பெரும்பாலான உடல்கள் பெண்களுடையவைதான். பல ஆண்டுகளாகவே இத்தகைய கொடுஞ்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஹியூகோவின் பின்னணியில் முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறையினர், ஆள் கடத்தல்காரர்கள் எனச் சுமார் 10 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக அந்த நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

நியூஸ் எம்பஸி

லண்டனைச் சேர்ந்த உலோகக் கண்டுபிடிப்பாளரான (Metal Detectorist) மார்க் வில்லியம்ஸ் (51) என்பவர், ஹாம்ஷையரில், புல்வெளி ஒன்றில் குண்டு ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார். இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட அதன் தகவல்களையும், படத்தையும் ஈ பே நிறுவன இணையதளத்தில் விற்பனைக்காக அப்லோடு செய்திருக்கிறார். இதைப் பார்த்த ராணுவப் பொருள்களைச் சேகரிக்கும் ஷெர்வின் என்பவர், ``இந்த குண்டு செயலிழக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?’’ என்று வில்லியம்ஸுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். ``இது செயலிழக்கவில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ என பதிலுக்குக் கேட்டிருக்கிறார் வில்லியம்ஸ். வில்லியம்ஸின் கடுமையான பதிலைக் கண்ட ஷெர்வின் காவல்துறையினரைத் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து வில்லியம்ஸின் வீட்டில் சோதனை மேற்கொண்டு குண்டை கண்டெடுத்துப் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்திருக்கிறது காவல்துறை. வில்லியம்ஸைக் கைதுசெய்த காவல்துறையினர் அந்த இடத்தில் குண்டு கிடைத்தது எப்படி என்று விசாரித்துவருகின்றனர்.

நியூஸ் எம்பஸி

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் எழுந்த உட்கட்சிப் பூசலால், மே 10-ம் தேதியன்று பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஆட்சியமைக்கக் கோரினார் நேபாள அதிபர் பித்யா தேவி பந்தாரி. மே 13-ம் தேதி வரை இதற்குக் கெடு வழங்கியிருந்தார். ஆனால், அதுவரை எதிர்க்கட்சிகள் எதுவும் ஆட்சியமைக்க முன்வராததால், மீண்டும் கே.பி.ஷர்மா ஒலியே பிரதமரானார். இந்தநிலையில், 30 நாள்களுக்குள்ளாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கே.பி.ஷர்மா ஒலியிடம் கேட்டுக்கொண்டார் பித்யா தேவி. ஆனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மீண்டுமொரு வாக்கெடுப்பு நடத்துவதைப் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி விரும்பவில்லை. இதையடுத்து கடந்த 21-ம் தேதி நள்ளிரவில் நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார் அதிபர் பித்யா தேவி பந்தாரி. அங்கு நவம்பர் மாதத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதிபர் பித்யா தேவி அறிவித்திருக்கிறார்.