Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

ஜெர்மனியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், 16 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சிசெய்த ஏஞ்சலா மெர்க்கலினின் கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கிறது

நியூஸ் எம்பஸி

ஜெர்மனியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், 16 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சிசெய்த ஏஞ்சலா மெர்க்கலினின் கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கிறது

Published:Updated:
நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி
நியூஸ் எம்பஸி

முன்னெப்போதும் இல்லாத வகையில் மின்பற்றாக் குறையால் தத்தளிக்கிறது சீன தேசம். இதன் விளைவாக, தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், சீனாவின் ஏற்றுமதி சரிவை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. தொழிற் சாலைகள், நிறுவனங்களைத் தாண்டி வீடுகளிலும் மின்வெட்டுகள் அதிகரித்திருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சீனா தனது மின் உற்பத்திக்கு நிலக்கரியையே அதிகம் சார்ந்திருக்கும் நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டால்தான் அங்கு மின்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பெரும்பான்மை பொருள்களை உலக நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்துவரும் சீனாவில், மின் தட்டுப்பாட்டால் உற்பத்திகள் குறைந்திருப்பது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் பொருளாதார ஆய்வாளர்கள்!

நியூஸ் எம்பஸி

ஜப்பான் நாட்டின் பேரரசர் நருஹிட்டோவின் தங்கை மகள் மேக்கோ. தன்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்த கெய் கொமுரோ என்பவரைக் காதலித்த மேக்கோ, அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்திருக்கிறார். ஜப்பான் நாட்டின் வழக்கப்படி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், மக்களில் ஒருவரை மணக்க விரும்பினால், அவர் அரச குடும்பத்திலிருந்து விடுவிக்கப்படுவார். அதேசமயம், அவர்களுக்கு அரச குடும்பத்திலிருந்து சன்மானம் வழங்கப்படும். அந்த வகையில், மேக்கோவுக்கு இந்திய மதிப்பில் சுமார் 95 கோடி ரூபாய் சன்மானம் வழங்க முன்வந்தது அரச குடும்பம். ஆனால், சன்மானத் தொகையை ஏற்க மறுத்த மேக்கோ, “காதலுக்கு முன்பாக அரச வாழ்வும் பணமும் பெரிதல்ல...” என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் இளைஞர்களால் அதிக அளவு கொண்டாடப்படும் பெண்மணியாக மாறியிருக்கிறார் மேக்கோ!

நியூஸ் எம்பஸி

ஜெர்மனியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், 16 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சிசெய்த ஏஞ்சலா மெர்க்கலினின் கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மெர்க்கலினின் ‘கிறிஸ்டியன் டெமாக்ரட்டிக் யூனியன்’ கட்சிக்கு 24.1 சதவிகித வாக்குகளும், பிரதான எதிர்க்கட்சியான ‘சோஷியல் டெமாக்ரட்டிக்’ கட்சிக்கு 25.7 சதவிகித வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. 1949-க்குப் பிறகு இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே ஜெர்மனியில் ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், இந்த முறை ‘கிரீன்ஸ்’ கட்சி 14.8 சதவிகித வாக்குகளையும், ‘லிபரல்’ கட்சி 11.5 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கின்றன. இப்படி எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ‘லிபரல்’, ‘கிரீன்ஸ்’ கட்சிகளோடு கூட்டணி அமைத்து, ஆட்சியமைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது ‘சோஷியல் டெமாக்ரட்டிக்’ கட்சி. அப்படி ஆட்சியமைத்தால், ஜெர்மனி வரலாற்றில் மூன்று கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைவது, இதுவே முதன்முறையாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இரும்புப் பெண்மணியாக விமர்சிக்கப்பட்ட ஏஞ்சலா மெர்க்கல் 2018-ம் ஆண்டே, ‘அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்’ என்று அறிவித்திருந்தார். “மெர்க்கல் போட்டியிடாததுதான் அவரது கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறதா?” என்கிற கேள்விக்கு, ``காரணம் அதுமட்டுமல்ல... இளைஞர்கள் பலரும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்கள் நாட்டுக்குத் தேவை என்று நினைக்கிறார்கள். அதனால்தான் சூழலியல் சார்ந்த திட்டங்களை முன்வைத்த ‘கிரீன்ஸ்’ கட்சி முன்னேறியிருக்கிறது. மெர்க்கலின் கட்சி, நவீன உள்கட்டமைப்புகளையும், சரியான முதலீட்டாளர்களையும் ஜெர்மனிக்குக் கொண்டுவரத் தவறிவிட்டதாக மக்கள் கருதுகின்றனர். இதுவும் அவர்களது தோல்விக்குக் காரணம்’’ என்று பதிலளிக்கிறார்கள் ஜெர்மனின் அரசியல் நோக்கர்கள்.

நியூஸ் எம்பஸி

ஏமன் நாட்டின் அல்மாரா பாலைவனத்தின் நடுவே, 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும்கொண்ட மர்மக் கிணறு ஒன்று இருக்கிறது. உள்ளூர் மக்கள் இந்தக் கிணற்றை `நரகக் கிணறு’ (Well of hell) என்றே அழைக்கிறார்கள். சூரியஒளிகூட கிணற்றின் குறிப்பிட்ட அடி தூரம் வரை மட்டுமே பாய்வதால், இருள் சூழ்ந்தே காணப்படுகிறது இந்தக் கிணறு. சமீபகாலமாக, கிணற்றிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே... கிணற்றுக்குள் பேய், பிசாசுகள் உலவுகின்றன என்றெல்லாம் வதந்திகள் பரவின. இதையடுத்து 10 ஆராய்ச்சியாளர்கள், கிணற்றுக்குள் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அப்போதுதான் இது கிணறு அல்ல... கிணற்றை ஒத்த குகை என்கிற ஆச்சர்யத் தகவல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ``இந்தக் கிணறு குகைபோல நீண்டுகொண்டே போகிறது. இது பல மில்லியன் ஆண்டுகள் பழைமையானது என்று மதிப்பிட்டிருக்கிறோம். சமீபத்தில் கிணற்றுக்குள் பறவைகளும், பூச்சிகளும் அதிக அளவில் இறந்திருப்பதால்தான் துர்நாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இயற்கையான இந்தக் குகைக்குள் அழகான நீர்வீழ்ச்சியும் பாம்புகளும் இருக்கின்றன. இது ஏமன் நாட்டின் புதிய அதிசயம். ஏமன் நாட்டுக்குப் புதிய வரலாற்றை எழுதவிருக்கும் இந்தக் குகையில் எங்கள் ஆராய்ச்சிகள் தொடரும்” என்று சொல்லியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் தாலிபன்களின் கட்டுப்பாடுகளால் விழிபிதுங்கிவருகிறார்கள் மக்கள். சலூன் கடைகளில் தாடியை ஷேவிங், ட்ரிம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மக்களின் பிரதான பொழுதுபோக்கான பட்டம் விடுவதற்கும் தடை. இவை மட்டுமல்ல... ஐபிஎல் ஒளிபரப்புக்குத் தடை, பெண்கள் விளையாடுவதற்குத் தடை, டி.வி., ரேடியோவில் பெண்கள் குரல் ஒலிக்கத் தடை, இசைக்கருவிகளுக்குத் தடை எனத் தடைகள் நீள்கின்றன. கொடூரங்களுக்கும் பஞ்சமில்லை... கடந்த வாரம் எட்டு வயது சிறுவனை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ‘எங்களை எதிர்த்து போரிடும் பஞ்ச்ஷிர் படைத்தலைவரின் மகனாக இருக்கலாம்’ என்பதே அந்தச் சிறுவனைக் கொலை செய்ததற்கு தாலிபன்கள் அளிக்கும் வியாக்கியானம்! ``நாங்கள் மாறிவிட்டோம்; முன்புபோல் இல்லை என்று தாலிபன்கள் சொன்னதெல்லாம் பொய். மீண்டும் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது ஆப்கானிஸ்தான்’’ என்று கவலை பொங்கச் சொல்கிறார்கள் ஆப்கனை உற்றுநோக்கும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.