Published:Updated:

நியூஸ் எம்பஸி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், கடந்த 25 ஆண்டுகளாக மிகப்பெரிய போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்திவந்தவர் அன்டோனியோ உசுகா.

பிரீமியம் ஸ்டோரி

பல உயிர்களைக் காப்பாற்றிய ஹென்ரீட்டா!

ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஹென்ரீட்டா லாக்ஸ். இவர் 1951-ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக அமெரிக்காவிலுள்ள பால்டிமோர் நகரின் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது உயிரிழந்தார். தனது 31-வது வயதில் உயிரிழந்த ஹென்ரீட்டா, 70 ஆண்டுகள் கடந்தும் தற்போதுவரை பலர் உயிர்கள் வாழக் காரணமாக இருந்துவருகிறார். அது எப்படி என்கிறீர்களா... சிகிச்சையின்போது ஹென்ரீட்டாவுக்குத் தெரியாமலேயே அவரது உடலிலிருந்து செல்கள் எடுக்கப்பட்டிருந்தன. அனுமதியின்றி ஹென்ரீட்டாவிடமிருந்து எடுக்கப்பட்ட செல்களை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தத் தொடங்கியது மருத்துவமனை. இந்த முயற்சிதான் `அழிவில்லாத மனித செல்கள்’ குறித்த ஆராய்ச்சிகளுக்கு வித்திட்டது. இந்தச் செல்களுக்கு `Henrietta Lacks’ என்ற பெயரின் முதல் இரண்டு எழுத்துகளை எடுத்து `Hela Cells’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ், லூக்கேமியா, பார்க்கின்சன்ஸ் நோய்களுக்கான மருந்துக் கண்டுபிடிப்பிலும், போலியோ, கொரோனா உள்ளிட்ட நோய்களுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பிலும் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறது ஹெலா செல்ஸ். சமீபத்தில் ஹென்ரீட்டாவின் 70-வது நினைவு தினத்தையொட்டி அவரது பங்களிப்பைப் பாராட்டிய உலக சுகாதார நிறுவனம், ``ஹென்ரீட்டாவின் அனுமதி பெறாமல் அவரது செல்களைப் பயன்படுத்தியது வரலாற்றுப் பிழை. அவருடைய அடையாளத்தைப் பல காலமாக மறைத்ததும் தவறு’’ என்று கூறியிருந்தது. மருத்துவ உலகின் முன்னேற்றங்களுக்கு மைல்கல்லாக இருந்துவரும் ஹென்ரீட்டாவின் பெருமைகளை, இளைஞர்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் `hlackslegacy’ என்கிற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றும் தொடங்கப்பட்டிருக்கிறது!

நியூஸ் எம்பஸி

ஆளுநரை அடித்தது ஏன்?

இரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அபிதின் கோரம் (Abedin Khorram). அவர் தனது பதவியேற்பு விழாவில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென மேடையேறிய ஒருவர், அபிதினின் பின்னந்தலையில் ஓங்கி அடித்தார். மீண்டும் ஒருமுறை அபிதினைத் தாக்க முயன்ற அந்த நபரை, பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி இழுத்துச் சென்றனர். இரான் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவரின் பெயர் அயுப் அலிஜாதே (Ayoub Alizadeh) என்கிறது இரான் காவல்துறை. ‘‘புதிய ஆளுநரை அலிஜாதே அடித்ததற்கு அரசியல் காரணம் ஒன்றுமில்லை. தாக்கியவரின் மனைவிக்கு, பெண் ஊழியருக்கு பதிலாக ஆண் ஊழியர் தடுப்பூசி செலுத்திய கோபம்தான் காரணம்’’ என்று தகவல் தெரிவித்திருக்கிறது இரான் அரசு ஊடகம்.

நியூஸ் எம்பஸி

சிக்கிய கடத்தல் மன்னன்!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், கடந்த 25 ஆண்டுகளாக மிகப்பெரிய போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்திவந்தவர் அன்டோனியோ உசுகா. 50 வயதான இவர், தனது இளம் வயதில் கொலம்பியாவுக்கு எதிரான கிளர்ச்சிப்படையில் இணைந்து பணியாற்றினார். 1990-களில் கிளர்ச்சிப் படைகளை கொலம்பியா அரசு ஒடுக்க, போதைப்பொருள் கடத்தலில் களமிறங்கினார். முதலில் கொலம்பியாவில் மட்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த அன்டோனியோ, நாளடைவில் `கல்ஃப் க்ளான்’ என்ற குழுவை உருவாக்கி, சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலைச் செய்துவந்தார். 2005-ம் ஆண்டுக்குப் பின்னர், யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத கடத்தல் மன்னனாக உருவெடுத்த அன்டோனியோவைக் கைதுசெய்ய முடியாமல் கொலம்பிய அரசு திண்டாடியது. 2017-ல் 5,000 வீரர்கள் அடங்கிய சிறப்புப் படை அமைத்து அன்டோனியோவைத் தேடிவந்தது. அமெரிக்க உளவுத்துறையும் இந்த ஆபரேஷனுக்கு உதவியது. நான்கு ஆண்டு தேடலுக்குப் பின்னர், கொலம்பியா - பனாமா எல்லைப்பகுதியில் அன்டோனியோ மறைந்திருப்பதாகத் தகவல் கிடைக்க, 22 ஹெலிகாப்டர்களுடன் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தியது கொலம்பிய பாதுகாப்புப் படை. அக்டோபர் 24-ம் தேதியன்று, கொலம்பியா எல்லையிலுள்ள சுரங்கம் ஒன்றில் மறைந்திருந்த அன்டோனியோவைக் கைதுசெய்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. `மோஸ்ட் வான்டட்’ குற்றவாளியான அன்டோனியோ கைதுசெய்யப்பட்டிருப்பது, சர்வதேசக் கடத்தல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு