
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் 31 வயது மாடல் அழகி கிறிஸ் கலேரா.

“காதல்மீது நம்பிக்கை வந்துவிட்டது!”
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் 31 வயது மாடல் அழகி கிறிஸ் கலேரா. இவர், கடந்த காலங்களில் ஏற்பட்ட உறவு முறிவுகள் காரணமாகக் காதல்மீது ஏற்பட்ட அவநம்பிக்கையால், தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தார். இதன்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் பிரேசிலின் சாவோ பாவ்லோ நகரிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில், தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டு பரபரப்பைக் கிளப்பினார். திருமணமாகி 90 நாள்கள் கடந்த நிலையில், தன்னைத் தானே விவகாரத்து செய்வதாக அறிவித்திருக் கிறார் கலேரா. ``மிகவும் சிறந்த நபர் ஒருவரைச் சந்தித்தேன். அதனால் காதல்மீது எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. எனவே, என்னை நானே விவகாரத்து செய்யப்போகிறேன். இதுவரை என்னுடன் நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது’’ என்று சொல்லி தனது விவாகரத்தை அறிவித்து, பிரேசில் நாட்டு இளைஞர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் கலேரா.

மாட்டிக்கொண்ட கப்பல்கள்!
ஆண்டுதோறும் ஆர்க்டிக் பகுதியிலுள்ள கடல்நீர், பனிக்காலங்களில் உறைந்து காணப்படும். எனவே அதற்குத் தகுந்தாற்போல, கப்பல் நிறுவனங்கள் தங்கள் பயணங்களை அமைத்துக்கொள்ளும். ஆனால், இந்த ஆண்டு ஆர்க்டிக் கடலின் ரஷ்யப் பகுதியில் முன்கூட்டியே பனிப்பொழிவு ஏற்பட்டதால் கடல்நீர் உறைந்துவிட்டது. 30 செ.மீ ஆழத்துக்குக் கடல்நீர் உறைந்துவிட்ட காரணத்தால், 18 சரக்குக் கப்பல்கள் கடலுக்குள் மாட்டிக்கொண்டன. இதுவரை பனிக்கட்டிகளில் சிக்கித் தவித்த இரண்டு எண்ணெய் கப்பல்களை மீட்டிருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மீதமிருக்கும் கப்பல்களை நவம்பர் மாத இறுதிக்குள் மீட்கத் திட்டமிட்டிருப்பதாகவும் ரஷ்ய கடற்படை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அமெரிக்கக் கடைகளும் 80 கொள்ளையர்களும்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், வால்நட் க்ரீக் நகரில், நார்டுஸ்ட்ராம் (NordStrom) என்ற பெரிய பல்பொருள் அங்காடி செயல்பட்டுவருகிறது. கடந்த வாரத்தில் இந்தக் கடைக்கு வெளியே 25 கார்களில் முகமூடி அணிந்த 80 நபர்கள் வந்திறங்கினர். அந்த 80 பேரும் ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்து கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு சில நிமிடங்களில் அங்கிருந்து வெளியேறி காரில் தப்பிச் சென்றனர். அவர்களில் மூவர் மட்டும் சம்பவ இடத்திலேயே காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டனர். சிக்கியவர்களிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும் பறிமுதல் செய்திருக்கிறது காவல்துறை. இந்தச் சம்பவம் நடந்ததை அடுத்து, அக்கம் பக்கத்துக் கடைக்காரர்கள் அனைவரும் கடையை மூடிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர். நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பாக, சான் பிரான்சிஸ்கோ நகரிலும் இதே போன்று பல கடைகளில் சிறிய கும்பல் ஒன்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறது. அது நடந்த அடுத்த நாளே 80 பேர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது, அமெரிக்க வியாபாரிகளிடம் கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறது!