Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
News
நியூஸ் எம்பஸி

புதிய குடியரசு ஒன்று மலர்ந்திருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளின் பிராந்திய நாடுகளில் ஒன்று பார்படோஸ்.

வடகொரியாவில் விசித்திரங்கள் அரங்கேறுவது ஆச்சர்ய மில்லை. தன் தாத்தா, அப்பா ஸ்டைலில் உடையணிந்துவந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், 2019 டிசம்பர் முதல் கறுப்பு நிற லெதர் கோட்டுகளை அணியத் தொடங்கினார். இதையடுத்து, வடகொரிய உயர்தட்டு மக்களிடையே லெதர் கோட்டுகள் பிரபலமடைந்தன. பலரும் அவரது ஸ்டைலில் லெதர் கோட்டுகளை அணியத் தொடங்கினர். இந்த நிலையில்தான், ``சந்தைகளில் விற்கப்படும் போலி லெதர் ஜாக்கெட்டுகளை பொதுமக்கள் அணிவது, அதிபரின் மதிப்பையும் அதிகாரத்தையும் குறைத்து மதிப்பிடுகிறது. போலி லெதர் கோட்டுகள் விற்கும் வியாபாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று வடகொரிய காவல்துறை அறிவித்திருக்கிறது. தனது ஸ்டைலை யாரும் காப்பி அடிக்கக் கூடாது என்பதற்காகவே இப்படியோர் அறிவிப்பை காவல்துறை மூலம் அதிபர் வெளியிட்டிருப்பதாக முணுமுணுக்கிறார்கள் மக்கள். #உஷ்ஷ்ஷ்..!

நியூஸ் எம்பஸி

புதிய குடியரசு ஒன்று மலர்ந்திருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளின் பிராந்திய நாடுகளில் ஒன்று பார்படோஸ். 1625-ல் அங்கு நுழைந்த ஆங்கிலேயர்கள் கரும்பு, பருத்தி, புகையிலை உள்ளிட்டவற்றைப் பயிரிடத் திட்டமிட்டனர். அப்போது அங்கு அதிக அளவில் மக்கள் வசிக்காததால், கொத்தடிமைகளாக வேலை செய்வதற்காகப் பல லட்சம் ஆப்பிரிக்கர்களை அழைந்துவந்தார்கள். அந்த மக்களின் கடும் உழைப்பால் செழிப்புமிக்க பூமியானது பார்படோஸ். 1838 வரை அங்கு அடிமைமுறை தொடர்ந்தது. பின்னர், படிப்படியாக அடிமைமுறை ஒழிந்து 1966-ல் நாடு சுதந்திரம் பெற்றாலும், பார்படோஸுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தே தலைவராக இருந்துவந்தார். கடந்த சில ஆண்டுகளாக பார்படோஸ் தலைவர்கள் எடுத்த முயற்சிகளால், ராணியைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவது என்ற முடிவுக்கு வந்தது அந்த நாடு. சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் பார்படோஸின் கவர்னர் ஜெனரலாகச் செயல்பட்டுவந்த சாண்ட்ரா மேசன் நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இனி அவர்தான் பார்படோஸின் தலைவரும்கூட. கடந்த நவம்பர் 30 முதல் உலகின் புதிய குடியரசு நாடாக மாறியிருக்கும் பார்படோஸுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் வாழ்த்துகளைத் தெரிவித்ததுதான் ஹைலைட். #புத்தம் புது பூமி!

நியூஸ் எம்பஸி

தைவானைச் சேர்ந்த வாங், கடந்த ஓராண்டுக்குள் 39 முறை ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தியிருக்கிறார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆம்புலன்ஸுக்கு போன் செய்யும் வாங், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குச் சென்று வாசலோடு திரும்பிச் சென்றுவிடுவார். இதை கவனித்த மருத்துவமனை ஊழியர்கள், காவல்துறையில் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில், ``எனக்கு உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை. மருத்துவமனைக்கு அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்வதற்காகத்தான் ஆம்புலன்ஸைப் பயன்படுத்திக்கொண்டேன்’’ என்று சொல்லி திகைக்கவைத்திருக்கிறார். வாங்கின் வீட்டிலிருந்து மருத்துவமனை 200 மீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது என்பதுதான் இதில் வேடிக்கை ப்ளஸ் அதிர்ச்சி. வாங்கை ‘வாங்கு வாங்கு’ என்று வாங்கிக் கடுமையாக எச்சரித்து அனுப்பியிருக்கிறது காவல்துறை! #வாங்கின் போங்காட்டம்!