Published:Updated:

நியூஸ் எம்பஸி

நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் நாளொன்றுக்கு 15,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

நியூஸ் எம்பஸி

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் நாளொன்றுக்கு 15,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

Published:Updated:
நியூஸ் எம்பஸி
பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி
நியூஸ் எம்பஸி

40,000 வீடுகள்... 450 உயிர்கள்!

வெள்ளத்தில் மிதக்கிறது தென்னாப்பிரிக்காவின் குவாஜுலு-நேட்டல் மாகாணம். அங்கு ஆறு மாத காலத்தில் பெய்யவேண்டிய மழை, இரண்டே நாள்களில் கொட்டித் தீர்த்திருக்கிறது. இந்த வெள்ளத்தால் இதுவரை சுமார் 450 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், 40,000-க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்திருக்கின்றனர். சாலைகள், மருத்துவமனைகள் பலத்த சேதமடைந்திருப்பதால் அந்த மாகாணத்தில் பேரிடர்கால அவசரநிலையை அறிவித்திருக்கிறார் அதிபர் சிரில் ராமஃபோசா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் 35 லட்சம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ``காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய வெள்ள பாதிப்பிலிருந்து தென்னாப்பிரிக்கா விரைவில் மீண்டு வர வேண்டும்” என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.

நியூஸ் எம்பஸி

கொரோனாவும் கொல்லப்படும் பிராணிகளும்!

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் நாளொன்றுக்கு 15,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். `ஜீரோ கோவிட்’ என்ற இலக்கை அடைவதற்காக அங்கு மார்ச் மாத இறுதியிலிருந்தே தீவிர ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், ஷாங்காய் நகரிலிருந்து அதிர்ச்சி தரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கின்றன. ஒரு வீடியோவில், பச்சை நிறப் பை ஒன்றில் சில பூனைகள் அடைக்கப்பட்ட நிலையில் மூச்சுவிட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. மற்றொரு வீடியோவில் சுகாதாரப் பணியாளர் ஒருவர், நாயை அடித்துக் கொலை செய்கிறார். இந்த வீடியோக்களைப் பகிர்ந்த சிலர், ``சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள 2.6 கோடி மக்களும் தீவிர ஊரடங்கால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். பலரும் பால்கனியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். கோவிட் பாதித்தவர்களின் வீட்டிலிருக்கும் நாய், பூனை உள்ளிட்ட பிராணிகள் அரசு ஊழியர்களால் கொலை செய்யப்பட்டுவருகின்றன’’ என்று அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்கள்.

நியூஸ் எம்பஸி

உயிரைக் காத்த ஸ்மார்ட்போன்!

உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலைக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்ததையடுத்து, ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்த நிலையில், இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டபோது, உக்ரைன் வீரர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ரஷ்யத் துருப்புகள் உக்ரைன் வீரர் ஒருவர்மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 7.62 மி.மீ குண்டு ஒன்று அந்த வீரரின் பாக்கெட்டில் இருந்த ஸ்மார்ட்போனில் பாய்ந்திருக்கிறது. சக்திவாய்ந்த அந்த புல்லட்டிடமிருந்து உக்ரைன் வீரரின் உயிரைக் காப்பாற்றிய ஸ்மார்ட்போன் பற்றிய வீடியோவை சக வீரர் ஒருவர் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ``ஸ்மார்ட்போன் என் உயிரைக் காப்பாற்றிவிட்டது’’ என்று மகிழ்ச்சியில் உரக்கக் கத்துகிறார் உக்ரைன் வீரர்.

கொளுத்தப்பட்ட திருக்குர்ஆன்... வெடித்த கலவரம்!

ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிராக அங்குள்ள வலதுசாரி அமைப்புகள் தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்துவருகின்றன. இந்தப் பிரசாரங்களை ராஸ்மஸ் என்கிற வலதுசாரி அரசியல்வாதி முன்னின்று நடத்திவருகிறார். ஐரோப்பியாவின் பல நாடுகளுக்கும் பயணம் செய்யும் இவர், இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரிப்பது, மாடியிலிருந்து கீழே எறிவது, இஸ்லாமியர்களின் வீடு, கடைகளைச் சேதப்படுத்துவது ஆகியவற்றைத் தொடர்ச்சியாகச் செய்துவந்தார். கடந்த வாரம் ஸ்வீடனில் இவரின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில், குர்ஆனைத் தீயிட்டு எரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள், ராஸ்மஸ் ஆதரவாளர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்த, அது கலவரமாக மாறியது. இதையடுத்து, ஸ்வீடனின் பல்வேறு நகரங்களிலும் கலவரங்கள் வெடித்திருக்கின்றன. ``திட்டமிடப்பட்ட இந்தச் சம்பவங்கள், இஸ்லாமியர்களையும், குர்ஆனையும் இழிவுபடுத்துகின்றன’’ என்று கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கிறது சவுதி அரேபியா.

முதல் துப்பாக்கிச்சூடு!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, ராஜபக்சே அரசு பதவி விலக வேண்டும் என்று இரண்டு வாரங்களுக்கும் மேலாக அங்கு போராட்டங்கள் தொடர்கின்றன. இந்த நிலையில், ஏப்ரல் 19-ம் தேதி அன்று, இலங்கையின் கேகாலை மாவட்டத்திலுள்ள ரம்புகணையில் எரிபொருள் விலையுயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. அங்குள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகில், `ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட எரிபொருளைப் பழைய விலைக்கே விற்க வேண்டும்’ என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராடினர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 42 வயதான லக்‌ஷான் என்பவர் உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். இலங்கையில் நடந்துவரும் போராட்டங்களுக்கு எதிராக முதன்முறையாக நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா சபையும் கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism