அரசியல்
அலசல்
Published:Updated:

நியூஸ் எம்பஸி

இரான்
பிரீமியம் ஸ்டோரி
News
இரான்

ஏழு மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவருகிறது ரஷ்யா - உக்ரைன் போர். ஆரம்பம் முதலே ஓங்கியிருந்த ரஷ்யாவின் கை, இந்த மாதத் தொடக்கத்தில் சரியத் தொடங்கியது

இரான் நாட்டில் ஹிஜாப்புக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் வன்முறையில் முடிந்திருக்கிறது. தலைநகர் தெஹ்ரானில் காவல்துறையும் ராணுவமும் போராட்டக்காரர்கள்மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 40 பேர் இறந்திருக்கிறார்கள். கடந்த செப்.13 அன்று, குர்திஸ் இனத்தைச் சேர்ந்த மாசா அமினி (22), என்ற இளம்பெண்ணை இரான் நாட்டின் அறநெறிப் பிரிவு காவல்துறை (இஸ்லாமிய நெறிமுறைகளை மீறுபவர்களைக் கண்காணிக்கும் காவல் பிரிவு) கைதுசெய்தது. கூந்தல் முழுவதுமாக மறைக்கும்படி மாசா ஹிஜாப் அணியவில்லை என்பதே அவர் கைதுசெய்யப்பட்டதற்கான காரணம். இந்த நிலையில் காவல்துறை கட்டுப்பாட்டிலிருந்த மாசா, செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார்.

`திடீரென ஏற்பட்ட இதயக் கோளாறுதான் மாசா உயிரிழக்கக் காரணம்’ என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டாலும், கைதுசெய்தபோது மாசாவை காவல்துறையினர் தாக்கியதாகச் சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்தனர். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவ, பெரும் போராட்டம் வெடித்தது. பெண்கள் பலரும் தங்கள் கூந்தலை வெட்டிக்கொண்டும், ஹிஜாப்பை எரித்தும் எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். ராணுவமும் காவல்துறையும் போராட்டத்தை ஒடுக்க முயல, போர்க்களமாயின தெஹ்ரான் வீதிகள். இந்த வன்முறையில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

நியூஸ் எம்பஸி

மாசாவின் தந்தை அம்ஜத் அமினி, ``கைதுசெய்யும்போது என் மகளை மட்டுமல்ல, மகனையும் அதிகாரிகள் தாக்கியிருக்கிறார்கள். மாசாவின் உடற்கூறாய்வு அறிக்கையைப் பார்க்கவும் என்னை அனுமதிக்கவில்லை. பொட்டலம் கட்டியே என் மகளின் உடலை எங்களிடம் தந்தார்கள்’’ எனக் கண்ணீருடன் பேட்டியளித்திருக்கிறார்.

உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள், மாசாவுக்கு எட்டு வயதில் மூளையில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாகத் தெரிவித்தனர். இதை மறுத்த அம்ஜத், ``இது சுத்தப்பொய். காய்ச்சல், சளி தவிர வேறெந்த நோய்க்காகவும் என் மகள் மருத்துவமனைக்குச் சென்றதில்லை’’ என்றிருக்கிறார். மாசாவின் நண்பர்களும், அவளுக்கு எந்த உடல்நலக்குறைவும் இருந்ததில்லை என்கின்றனர். தற்போது, மாசாவுக்கு நீதி கேட்டு, அமெரிக்கா, துருக்கி, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் பேரணிகள் நடத்தப்பட்டுவருகின்றன. மேலும் போராட்டங்கள் பரவாமலிருக்க, இரான் முழுவதும் இணைய சேவைகளை முடக்கியிருக்கிறது அரசு.

இதற்கிடையே, ஐ.நா பொதுக்கூட்டத்துக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்த இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, சி.என்.என் தொலைக்காட்சிக்குப் பேட்டியளிப்பதாக இருந்தது. பிரபல செய்தியாளர் கிறிஸ்டியன் அமன்பூர் ஹிஜாப் அணிந்துகொண்டு பேட்டி காண மறுத்ததால், அந்த நேர்காணலைத் தவிர்த்திருக்கிறார் அதிபர் ரைசி.

மருத்துவராக வேண்டுமென்ற கனவோடு இருந்த மாசாவுக்கு நிகழ்ந்த இந்தக் கொடூரம் இனி யாருக்கும் நடக்கக் கூடாது!

நியூஸ் எம்பஸி

`கை கால்களை உடைத்துக்கொள்வது எப்படி?’

ஏழு மாதங்களுக்கு மேலாக நடைபெற்றுவருகிறது ரஷ்யா - உக்ரைன் போர். ஆரம்பம் முதலே ஓங்கியிருந்த ரஷ்யாவின் கை, இந்த மாதத் தொடக்கத்தில் சரியத் தொடங்கியது. மேற்குலக நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களின் உதவியோடு, ரஷ்யாவிடம் இழந்த சில முக்கியப் பகுதிகளை மீட்டெடுத்தது உக்ரைன் ராணுவம். இந்த நிலையில், தொலைக்காட்சியில் பேசிய அதிபர் புதின், ``போரில் கலந்துகொள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் உட்பட ரஷ்ய மக்களில் மூன்று லட்சம் பேரைத் திரட்ட உத்தரவிட்டிருக்கிறேன்’’ என்றார். இதையடுத்து, `பொதுமக்களைப் போரில் பயன்படுத்தக் கூடாது’ என்று ரஷ்ய மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கினர். ரஷ்ய அரசு தயாரித்திருக்கும் போர்புரியத் தகுதியான மூன்று லட்சம் பேர்கொண்ட பட்டியலில், தங்களது பெயரும் இருக்குமோ என்ற அச்சத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாட்டைவிட்டுத் தப்பிக்க முயன்றனர். அவர்களில் சிலர் கைதும்செய்யப்பட்டனர். இதனால், `ரஷ்ய இளைஞர்கள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற பின்னரே நாட்டைவிட்டு வெளியேறலாம்’ என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், கூகுளில், `ரஷ்யாவைவிட்டு வெளியேறுவது எப்படி?’, `கை கால்களை உடைத்துக்கொள்வது எப்படி?’ என்பது போன்ற தேடல்கள் ரஷ்யாவில் அதிகரித்திருக்கின்றன.

நியூஸ் எம்பஸி

வீட்டுச் சிறையில் அதிபர்... ராணுவ ஆட்சியில் சீனா?

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, அந்த நாட்டு ராணுவத்தினர் வீட்டுச் சிறை பிடித்துவைத்திருப்பதாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிவருகின்றன. ``உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு செப்டம்பர் 16-ம் தேதி அன்று சீனாவுக்குத் திரும்பினார் ஜின்பிங். அப்போதே சீன ராணுவத்தால், அவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைவர், நாட்டின் அதிபர் ஆகிய இரண்டு பதவிகளிலிருந்தும் ஜின்பிங் நீக்கப்பட்டுவிட்டார்’’ என்றெல்லாம் சமூக வலைதளங்களில் சொல்லப்பட்டுவருகின்றன. அதோடு, சீன ராணுவத் தளபதி Li Qiaoming அடுத்த அதிபராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. சீன ராணுவத்தின் போர் வாகனங்கள் தலைநகர் பீஜிங்கை நோக்கிச் செல்லும் சில காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கின. கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஜின்பிங்குக்கு எதிராகச் செயல்பட்ட இரண்டு முன்னாள் அமைச்சர்கள், நான்கு உயரதிகாரிகளுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

``சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிரந்தரத் தலைவராகவும், நாட்டின் நிரந்தர அதிபராகவும் இருக்கச் சட்டங்களில் சில மாற்றங்களை ஜின்பிங் ஏற்படுத்தியது, கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே அவர்மீது அதிருப்தியை உண்டாக்கியது. அதன் விளைவாகக்கூட அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கலாம்’’ என்றும் சொல்லப்படுகிறது. அதேநேரம் சீன அரசோ, அரசு ஊடகமோ இது பற்றி எந்தவொரு செய்தியும் வெளியிடவில்லை. பல நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும், `இது வெறும் வதந்திதான்’ என்று கூறிவருகின்றனர்.