அலசல்
சமூகம்
Published:Updated:

நியூஸ் எம்பஸி

கெர்சனை மீட்டெடுத்த உக்ரைன்!
பிரீமியம் ஸ்டோரி
News
கெர்சனை மீட்டெடுத்த உக்ரைன்!

இந்தப் படத்தை, `கண்ணியம், ஒழுக்கத்தை மீறிய காட்சிகள்’ இருப்பதாகச் சொல்லித் தடைசெய்திருக்கிறது பாகிஸ்தான் அரசு.

நியூஸ் எம்பஸி

‘ஜாய்லேண்ட்’ படத்துக்கு பாகிஸ்தான் தடை!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சயிம் சாதிக் இயக்கிய திரைப்படம் `ஜாய்லேண்ட்.’ குடும்பத்தின் வம்சாவளி தொடர, ஆண் வாரிசு கட்டாயம் தேவை என்ற எண்ணம்கொண்ட ஆணாதிக்கக் குடும்பத்தில் பிறந்த கடைசிப் பையன்தான் படத்தின் கதாநாயகன். வீட்டுக்குத் தெரியாமல் கவர்ச்சி நடனக்குழுவில் பயிற்சிக்குச் சேரும் அவன், அங்கு நடனமாடும் திருநங்கையோடு காதல்வயப்படுகிறான். இந்தக் கதையை மையமாகவைத்து எடுக்கப்பட்ட ஜாய்லேண்ட் படம், திரையில் வெளியாவதற்கு முன்பாகவே டொரொன்டோ, கான் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, விருதுகளையும் அள்ளிக் குவித்தது. 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவுக்கும் இந்தப் படம் தேர்வாகியிருக்கிறது. வரும் நவம்பர் 18-ல் பாகிஸ்தான் முழுவதும் படம் வெளியாகவிருக்கும் நிலையில், அந்நாட்டு அடிப்படைவாத அமைப்புகள் படத்திற்கெதிராகப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. இதையடுத்து, ஆகஸ்ட் மாதமே சென்சார் சான்றிதழ் பெற்றிருந்த இந்தப் படத்தை, `கண்ணியம், ஒழுக்கத்தை மீறிய காட்சிகள்’ இருப்பதாகச் சொல்லித் தடைசெய்திருக்கிறது பாகிஸ்தான் அரசு.

நியூஸ் எம்பஸி

கெர்சனை மீட்டெடுத்த உக்ரைன்!

கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்றுவரும் ரஷ்யா - உக்ரைன் போர், கடந்த மாதத்தில் உச்சகட்டத்தை அடைந்தது. ரஷ்யா வசமிருந்த முக்கியப் பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது உக்ரைன். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன், ஜப்ரோஷியா ஆகிய நான்கு உக்ரைன் மாகாணங்களைத் தன்னோடு இணைத்துக்கொண்டது ரஷ்யா. கடந்த வாரம், கெர்சன் பகுதிக்குள் முன்னேறிய உக்ரைன் படைகள், அங்கு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. இதையடுத்து ரஷ்யா, தனது படைகளை அங்கிருந்து திரும்பப் பெற, கெர்சன் பகுதி முழுவதையும் உக்ரைன் மீட்டது. இந்த வெற்றியை தேசியக்கொடி ஏந்திக் கொண்டாடினர் உக்ரைன் மக்கள். அமெரிக்கா, `இது அசாதாரண வெற்றி’ எனப் புகழ, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, `வரலாற்று நாள்’ என்று நெகிழ்ந்திருக்கிறார்.

நியூஸ் எம்பஸி

ரூ.2 கோடியில் கிராமத்தையே வாங்கலாம்!

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டிலிருந்து மூன்று மணி நேரப் பயண தூரத்தில் அமைந்திருக்கிறது `சால்டோ டி காஸ்ட்ரோ’ என்ற கிராமம். 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கைவிடப்பட்ட நிலையிலிருக்கும் இந்தக் கிராமத்தில், 44 வீடுகள், ஓர் உணவகம், நீச்சல்குளம், விளையாட்டு மைதானம், தேவாலயம் உள்ளிட்ட கட்டமைப்புகள் இருக்கின்றன. 2000-களில் இந்தக் கிராமத்தை வாங்கிச் சுற்றுலாத்தலமாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஒருவர். ஆனால், 2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இது சாத்தியமில்லாமல் போனது. இந்த நிலையில் தற்போது, 2,60,000 யூரோவுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) சால்டோ கிராமத்தை விற்பனை செய்யப்போவதாக இணையதளங்களில் விளம்பரம் கொடுத்திருக்கிறார் அவர். அதில், ``நான் நகரத்தில் வசிப்பதால், கிராமத்தை என்னால் பராமரிக்க முடியவில்லை’’ என்று காரணம் சொல்லியிருக்கிறார்.