பிரீமியம் ஸ்டோரி
நியூஸ் எம்பஸி!

இங்கிலாந்தின் உருமாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் பரவல், நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால், இங்கிலாந்துடன் பல்வேறு நாடுகள் போக்குவரத்து சேவைகளைத் துண்டித்திருக்கின்றன. லண்டனில் ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கிவரும் எல்.ஏ.எஸ் நிறுவனத்துக்கு டிசம்பர் 26-ம் தேதி மட்டும் 7,918 அழைப்புகள் வந்திருக்கின்றன. இது கொரோனாவின் முதல் அலை பரவலின்போது இருந்ததைவிடப் பல மடங்கு அதிகம் என்கிறார்கள். இதனால், அவசர ஆம்புலன்ஸ் உதவிக்கு மட்டுமே `999’ என்ற அவசர எண்ணை அழைக்கும்படி அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் 43 சதவிகித மக்கள், அதாவது 2.4 கோடி பேர் வசிக்கும் பகுதிகளில், வீட்டைவிட்டு வெளியே வரத் தடை உள்ளிட்ட கடுமையான நான்கு அடுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மறுபுறம், நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி போடும் பணிகள், டிசம்பர் 28-ம் தேதி முதல் தொடங்கப்பட்டிருக்கின்றன. #கொரோனா 2.0!

நியூஸ் எம்பஸி!

சீனாவின் வூஹான் நகரிலுள்ள காட்டுயிர்ச் சந்தையில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பத்திரிகைச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் அடியோடு மறுக்கப்பட்ட சீனாவிலிருந்து கொரோனா குறித்த களத் தகவல்கள் வெளியே வராமல் அதிகாரிகள் பார்த்துக்கொண்டனர். தகவல்களை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், வூஹான் நகரிலிருந்து கடந்த பிப்ரவரியில் லைவ் கவரேஜ் செய்த பெண் பத்திரிகையாளர் ஜாங் ஸானுக்கு (Zhang Zhan) நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்திருக்கிறது ஷாங்காய் நீதிமன்றம். பொதுமக்களுக்குத் தவறான தகவல்களை அளித்தல், வன்முறை ஏற்படக் காரணமாக இருத்தல் உள்ளிட்டவை அவரின் குற்றங்களாக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. கடந்த மே மாதம் மாயமான ஜாங், தங்கள் கஸ்டடியில் இருப்பதாகப் பல நாள்களுக்குப் பின்னர் ஷாங்காய் போலீஸார் அறிவித்தனர். தனது கைதை எதிர்த்து ஜூன் மாதம் முதலே உண்ணாவிரதம் இருந்துவரும் அவருக்கு, டியூப் வழியாக வலுக்கட்டாயமாக உணவு அளிக்கப்பட்டுவருகிறது. #நசுக்கப்படும் கருத்துச் சுதந்திரம்!

நியூஸ் எம்பஸி!

இஸ்ரேலின் ஜெருசலேமைச் சேர்ந்த ஆவ்ரஹாம் மின்ட்ஸ் (Avraham Mintz), ஜோஹர் அபு ஜமா (Zoher Abu Jama) ஆகியோர் ஆம்புலன்ஸ் ஒன்றில் மருத்துவப் பணியாளர்களாகப் பணியாற்றிவருகிறார்கள். ஆம்புலன்ஸின் பின்னணியில் இருவரும் பிரார்த்திப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. யூதரான மின்ட்ஸ், பாரம்பர்ய வெள்ளை, கறுப்பு நிற ஷாலுடன் ஜெருசலேமை நோக்கியும், இஸ்லாமியரான அபு ஜமா மெக்காவை நோக்கி முழங்காலிட்டும் பிரார்த்தித்த புகைப்படம்தான் கடந்த வார சோஷியல் மீடியா சென்சேஷன். வாரத்தில் மூன்று, நான்கு நாள்கள் ஒன்றாகப் பணிபுரியும் தங்களுக்கு இது வழக்கமான செயல்தான் என்கிறார்கள் மின்ட்ஸும் அபு ஜமாவும். அவர்களுடன் பணிபுரியும் ஒருவர் எடுத்த புகைப்படத்தை நெட்டிசன்கள் சிலாகித்துப் பாராட்டிவருகிறார்கள். #நல்லிணக்கம்!

நியூஸ் எம்பஸி!

சீன மொபைல் கேம் உலகின் இளவரசாக வலம்வந்த லின் காய் (Lin Qi) கொலை, சீன கேமிங் சந்தையை ஆட்டம்காண வைத்திருக்கிறது. இவரது யூசூ (YooZoo) நிறுவனம், `கேம் ஆஃப் த்ரோன்ஸ்: வின்டர் இஸ் கம்மிங்’ விளையாட்டு மூலம் உலக அளவில் பிரபலமடைந்தது. 39 வயதான லின், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 25-ம் தேதி உயிரிழந்ததாக யூசூ நிறுவனம் அறிவித்தது. அவரது சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் 76,000 கோடிக்கும் அதிகம். லின், சீனாவின் யுனான் மாகாணத்தில் விளைவிக்கப்படும் ஒருவகைத் தேநீரான புயெர் டீயின் (Pu’er tea) பிரியராவார். அவருக்குப் பிரியமான தேநீரிலேயே விஷம் கலந்து கொலை செய்யப்பட்டதாக சீன போலீஸார் கூறுகிறார்கள். இது தொடர்பாக யூசூ நிறுவனத்தின் படத் தயாரிப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பு வகித்துவந்த ஜூ யாவோ (Xu Yao) கைதுசெய்யப்பட்டிருக்கிறார். #‘கேம்’ஸ்டர்ஸ்!

நியூஸ் எம்பஸி!

சுவிட்சர்லாந்து ஹோட்டல் ஒன்றில் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான இங்கிலாந்து பயணிகள், சத்தமில்லாமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால், உலக அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் இருக்கும் வெர்பியர் (Verbier) என்ற கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இங்கிலாந்து பயணிகள் 10 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற விதி, சுவிட்சர்லாந்தில் அமலில் இருக்கிறது. 420 பேருக்கும் மேல் அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இரவு நேரத்தில் 200-க்கும் அதிகமானோர் குவாரன்டைனிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். இப்போது அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது உள்ளூர் அதிகாரிகள் குழு. #பீதியக் கெளப்பாதீங்கப்பா!

- தினேஷ் ராமையா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு