பத்துக்கும் அதிகமான மக்கள் ஓர் இடத்தில் கூடினால் அங்கு கண்டிப்பாகக் கூச்சல், குழப்பம், சண்டை, சிரிப்பு போன்ற அனைத்தும் இருக்கும். ஆனால், இறந்த ஒருவருக்கு அஞ்சலி செய்யக் கூடினால் மட்டும் எத்தனை பேர் வந்தாலும் அனைவரும் அமைதியாக மட்டுமே இருப்பார்கள்.

ஆனால், அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு முதியவர் இந்த நடைமுறையை மாற்றுவதே தன் இறுதி ஆசை எனக் கூறி இறந்த பிறகு அதை நிகழ்த்தியும் காட்டியுள்ளார். அயர்லாந்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஷே பிராட்லி (Shay Bradley). உடல் நிலை பாதிப்பு மற்றும் முதுமை காரணமாகக் கடந்த சனிக்கிழமை இவர் உயிரிழந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஷே பிராட்லி எப்போதும் ஜாலியான மனிதராக இருந்துள்ளார். அதனால் தான் இறப்பதற்கு முன்னதாக தன் மகளிடம், `நான் இறந்த பிறகு யாரும் அழக் கூடாது, அமைதியாக இருக்கக் கூடாது அதற்குப் பதிலாக அனைவரும் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும். இதுதான் எனது கடைசி ஆசை’ எனக் கூறியுள்ளார்.

இதோடு நிற்காமல் தன் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வரும் உறவினர்களைச் சிரிக்க வைப்பதற்காகத் தான் உயிருடன் இருக்கும்போதே அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இறப்பதற்கு முன் தன் மகளிடம் ஒரு ஆடியோ டேப்பை கொடுத்து, `நான் இறந்து என் உடலைக் குழியில் வைத்துவிட்டு இந்த ஆடியோவை ஒலிக்கச் செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
ஷே இறந்த பிறகு அவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் விதமாக அவர் கூறியது போலவே ஆடியோ ஒலிக்கப்பட்டது. அதில் பேசியுள்ள ஷே, ``நான் எங்கே இருக்கிறேன். என்னை வெளியே எடுங்கள். உங்கள் முன்பு இனி நான் இல்லை, நான் பெட்டிக்குள் உள்ளேன். நான் இறந்துவிட்டேன்” என நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.
இதைக் கேட்ட அனைவரும் உடனடியாக சிரிக்கத் தொடங்கிவிட்டனர். ஷேவின் இறுதி ஆசையும் அவர் நினைத்தது போலவே நிறைவேறிவிட்டது. பின்னர் ஷேவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ``ஒரு நாளில் தான் எத்தனை பேரைச் சிரிக்க வைத்தேன் என்பதை அவர் அறிய விரும்புவார். அதேபோல்தான் இறந்த நாள் அன்றும் பலரைச் சிரிக்கவைத்துவிட்டார். என் தந்தை மிகவும் அற்புதமானவர்” எனக் குறிப்பிட்டுள்ளார் ஷேவின் மகள். ஷேவின் இறுதிச்சடங்கில் ஒலிக்கப்பட்ட ஆடியோவும், அப்போது அவரது உறவினர்கள் சிரிக்கும் வீடியோவும் வைரலாகி இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.