Published:Updated:

மூன்றாம் கரத்தின் முடிவு!

அல் பாக்தாதி
பிரீமியம் ஸ்டோரி
அல் பாக்தாதி

‘‘அமெரிக்காவும் மேற்குலகும் நமக்கு எதிரானவை. அவர்களுக்கும் நமக்குமான போர் இரு நாகரிகங்களுக்கு இடையிலான போர்.

மூன்றாம் கரத்தின் முடிவு!

‘‘அமெரிக்காவும் மேற்குலகும் நமக்கு எதிரானவை. அவர்களுக்கும் நமக்குமான போர் இரு நாகரிகங்களுக்கு இடையிலான போர்.

Published:Updated:
அல் பாக்தாதி
பிரீமியம் ஸ்டோரி
அல் பாக்தாதி

லகையே நடுநடுங்க வைத்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவரான 48 வயது அபுபக்கர் அல் பாக்தாதியின் சிதறிய உடல் பாகங்கள் பல நூறு துண்டுகளாக சிரியாவில் ஒரு சுரங்கக் குழிக்குள்ளிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை ஒரு வெற்றிச் செய்தியாக அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். எனில் ஆட்டம் முடிந்துவிட்டதா, பயங்கரவாதம் தோல்வியடைந்துவிட்டதா, மத்திய கிழக்கில் இனி அமைதி திரும்புமா? - பாக்தாதியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் ஒருசேர அலசினால்தான் இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எழுச்சி

செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்து சதாம் உசேனின் ஆட்சியைக் கவிழ்த்து, பொம்மை அரசொன்றை நிறுவி, இறுதியில் அவரைத் தூக்கிலிட்டும் கொன்றது. சதாமின் சரிவு தனிப்பட்ட ஓர் ஆட்சியாளரின் சரிவாக மட்டுமில்லை; ஈராக்கில் அதுவரை ஆளும் வர்க்கத்தினராகவும் சமூகச் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருந்த சன்னி முஸ்லிம்களின் சரிவாகவும் இருந்தது. அதன் தாக்கம் ஈராக்கைக் கடந்து மத்திய கிழக்கெங்கிலும் எதிரொலித்தது.சன்னிக்களின் சரிவிலிருந்துதான் பாக்தாதியின் எழுச்சி தொடங்குகிறது. ‘புதிய இஸ்லாமிய நாடு ஈராக்கில் உதயமாகிறது’ என்னும் அறிவிப்போடு 2014ஆம் ஆண்டு முதல்முறையாக அல் பாக்தாதி ஒரு வீடியோ மூலம் உலகுக்கு அறிமுகமானார். அவருடைய பிரசாரம் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது...

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

‘‘அமெரிக்காவும் மேற்குலகும் நமக்கு எதிரானவை. அவர்களுக்கும் நமக்குமான போர் இரு நாகரிகங்களுக்கு இடையிலான போர். சன்னி இஸ்லாம் என்னும் மாபெரும் அமைப்புக்கும் அதன் எதிரிகளுக்கும் இடையிலான போர். நம் செழுமையான வரலாற்றை, பொற்காலத்தை அமெரிக்கா சீரழித்துவிட்டது. நாம் அவற்றை மீட்டெடுக்க மாபெரும் தியாகங்களைச் செய்தாக வேண்டும். நம் ஒவ்வொருவருடைய மூன்றாவது கரமாக வாள் மாற வேண்டும். ஈராக்கிலும் சிரியாவிலும் நம்முடைய ஆட்கள்தானே ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள். அவர்களுக்கு என்னிடம் இருப்பதைப் போன்ற பெருங்கனவு இல்லை. ஆட்சி, பதவி சுகம், செல்வம், இன்பம் என்று அவர்கள் வழிதவறிவிட்டார்கள். அமெரிக்காவையும் மேற்கையும் எந்த அளவுக்குத் தீவிரமாக எதிர்க்கிறோமோ அதே தீவிரத்துடன் பொம்மை இஸ்லாமிய ஆட்சியாளர்களையும் எதிர்ப்போம். புதிய போர்களை முன்னெடுப்போம்! சன்னிகளின் பொற்காலம் நம் கண்முன் மலரட்டும்!’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாஜிகள் எவ்வாறு விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனரோ அவ்வாறே ஐஎஸ்ஐஎஸ் ஆட்களும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.

கடுகளவு உண்மையை எடுத்து வைத்துக் கொண்டு அதை ஊதி ஊதி மலையாக்கி, பெரும் திரளானவர்களின் நம்பிக்கையை வென்றெடுத்தார் பாக்தாதி. ஒரு மதத் தலைவராகவும் அரசியல் தலைவராகவும் ஒரே சமயத்தில் தன்னை முன்னிறுத்திக்கொண்ட பாக்தாதியின் மாயையில் ஏராளமான இளைஞர்கள் சுயவிருப்பத்தோடு சிக்குண்டனர். அதற்கு அகக்காரணங்களுக்குச் சமமாகப் புறக்காரணங்களும் இருந்தன. திரும்பும் திசையெங்கும் ஊழலும் இனக்குழு மோதலும் பழைமைவாதமும் மட்டுமே காட்டுச் செடிகளைப்போல் செழித்திருந்தன. கல்வியில்லை, வளர்ச்சியில்லை, அறிவியல் கண்ணோட்டமில்லை, வேலை வாய்ப்புகளில்லை. எல்லா அமைப்புகளும் எல்லா நம்பிக்கைகளும் எல்லா வாக்குறுதிகளும் பொய்த்துப்போன ஒரு சூழலில், பற்றிக்கொள்ள ஏதுமின்றித் தனித்து விடப்பட்ட இளைஞர்களுக்கு பாக்தாதி அள்ளி அள்ளி அபின் கனவுகளை வழங்கினார். அந்தக் கனவுகள் அவர்களுடைய வயிறுகளை நிரப்பினவோ இல்லையோ மூளைகளை நிரப்பி ஒரு வித மயக்கநிலைக்குக் கொண்டு சென்றன. ‘வாருங்கள் நாமொரு புதிய எதிர்காலத்தைப் படைப்போம்’ என்றொரு செயல்திட்டத்தை அவர்கள் முன் பாக்தாதி பரப்பியபோது, பெரும் ஆர்வத்தோடு அவர்கள் இணைந்துகொண்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்துகிடந்த விலங்கை வெளியில் கொண்டுவந்தார் பாக்தாதி. அவர் ஆயுதம் தூக்கச் சொன்னால் அவர்கள் தூக்கினார்கள். ஆளைக் கடத்து என்றால் கடத்தினார்கள். கழுத்தை அறுத்துக் கொல் என்றால் கொன்றார்கள். இது எங்கெல்லாம் பறக்கிறதோ அங்கெல்லாம் நம் ஆட்சியை அமைப்போம் என்று கறுப்புக்கொடியை பாக்தாதி கையளித்தபோது, அவர்கள் அதைப் போர் வீரர்கள்போல் பயபக்தியோடு பெற்றுச்சென்றனர்.

நதியா முராட்
நதியா முராட்

போர் ஆரம்பமானது. ஈராக், சிரியா இரண்டையும் கைப்பற்றுவதுதான் (பாக்தாதி மொழியில் சொல்வ தென்றால் விடுவிப்பது) ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தொடக்கக்கால நோக்கமாக இருந்தது. அதன் அடிப்படையில்தான் ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்டு சிரியா’ என்றே அமைப்புக்குப் பெயரிட்டனர். வட ஈராக்கில் அமைந்துள்ள பெருநகரமான மொசூல் ஒரு பூனைக்குட்டிபோல் நடுங்கியபடி கைக்கு வந்து சேர்ந்ததும் உற்சாகமடைந்த பாக்தாதி அடுத்தடுத்த நகரங்களை நோக்கிப் பாய ஆரம்பித்தார். ரக்கா, அலெப்போ என்று கால் பதித்த இடமெல்லாம் சீட்டுக்கட்டுக் கோபுரம்போல் அரசுகள் கவிழ்ந்தன. கறுப்புக்கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்தன. ஹிட்லரின் தலைக்கு ஏறிய அதே போதை பாக்தாதியின் தலைக்கும் ஏறியபோது, ‘என்னை வெல்ல இந்தப் புவியில் யாருமில்லை’ என்று அவர் கொக்கரிக்க ஆரம்பித்தார். ஆனானப்பட்ட அமெரிக்காவாலேயே தன்னைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்பது அவருக்கு மிதமிஞ்சிய மயக்கம் தந்தது. எதற்கு சிக்கனமாக இரு நாடுகளை மட்டும் குறிவைக்க வேண்டும்...மத்தியக் கிழக்கு முழுக்கக் கறுப்புக்கொடிகளைப் பறக்கவிட்டால் என்ன என்று நினைத்தார்.

வீழ்ச்சி

அல் கொய்தாவுக்கு ஒரு ஒசாமா என்றால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஒரு பாக்தாதி. அவர் தலைக்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் விலை நிர்ணயித்தது. அமெரிக்க உளவு அமைப்புகள் மட்டுமன்றி நட்பு நாடுகளின் உளவாளிகளும் 24 மணிநேரமும் தேட ஆரம்பித்தார்கள். அடுத்தடுத்து வீழ்ந்த நகரங்களைத் தவிர, பாக்தாதி எங்கிருக்கிறார், எப்படி இதையெல்லாம் திட்டமிடுகிறார், எங்கிருந்து படைகளை வழிநடத்துகிறார் என்று எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் இணையத்தை பாக்தாதி கிட்டத்தட்ட முற்றாகப் புறக்கணித்ததுதான். பழங்கால முறைகளிலேயே தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன. உலகுக்குச் சொல்ல அவரிடம் ஏதேனும் செய்தி இருந்தால் அல்லது அதிர்ச்சி மதிப்பீடு தேவை என்று கருதினால் வீடியோ அனுப்புவார்.

இந்நிலையில், ஒரு நாள் கனவு கலைய ஆரம்பித்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு மத்தியிலிருந்து பாக்தாதியின் கரங்களில் பதுங்கியிருந்த பூனைகள் ஒவ்வொன்றாக வெளியில் குதித்து ஓடத்தொடங்கின.

சிரியாவும் இராக்கும் புது வேகத்தோடு ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளை ஒவ்வொன்றாக மீட்க ஆரம்பித்தன. அமெரிக்காவின் ஆதரவும் உளவு உதவிகளும் ஆயுதங்களும் கிடைத்தது ஒரு காரணம். சிரியாவில் அமெரிக்க ஆதரவோடு குர்திஷ் போராளிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராகக் களத்தில் குதித்தனர். செல்வாக்கோடு இருந்த ஐந்தாண்டுகளில் ஐஎஸ்ஐஎஸ்ஸிடம் கட்டுப்பாட்டில் கிட்டத்தட்ட பிரிட்டனின் பரப்பளவுக்கான பிரதேசங்கள் இருந்தன. அனைத்தும் சிறிது சிறிதாகக் கைவிட்டுப் போவதை பாக்தாதி ஏமாற்றத்தோடு பார்க்க நேர்ந்தது. அவர் ஒழிக்க நினைத்த எதிரிகள் அனைவரும் ஓரணியில் திரண்டு நின்றபோது பாக்தாதியால் அவர்களுக்குச் சமமாகத் தன் படைவலிமையை உயர்த்திக் கொள்ள முடியவில்லை. ஆள்பலமும் ஆயுதபலமும் சரிய ஆரம்பித்தன. கடைசியில் ஹிட்லருக்கு என்ன நடந்ததோ அதுவேதான் பாக்தாதிக்கும் நடந்திருக்கிறது.

ஜெர்மனியை நோக்கி நேச நாடுகளின் படைகள் விரைந்து வருவதை உணர்ந்ததும் ஹிட்லர் துப்பாக்கியைத் தன் நெற்றிப் பொட்டுக்குத் திருப்பினார். சிரியாவில் ஒரு சுரங்கக்குழிக்குள் சுண்டெலியைப்போல் வெடவெடத்தபடி சுருண்டு கிடந்த பாக்தாதிக்கு அமெரிக்கப் படைகள் நெருங்கி வருவது தெரிந்துவிட்டது. எதிரிகளின் கரங்களில் சிக்கக்கூடாது என்று அஞ்சிய பாக்தாதி அக்டோபர் 26ஆம் தேதி வெடிகுண்டை இயக்கித் தன் குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் இறந்துபோனார்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால் சிறை பிடிக்கப்பட்டுப் பாலியல் தொழிலாளியாக மாற்றப்பட்டு, பின்னர் அவர்களிடமிருந்து தப்பியோடி வந்ததோடு, பாலியல் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக நோபல் அமைதி விருதையும் பெற்றவர் நதியா முராட்.

பாக்தாதியின் மரணத்தைப் பற்றி, ‘ஒரு கோழையைப்போல் வாழ்ந்தார், ஒரு கோழையைப் போல் இறந்தும்போயிருக்கிறார்’ என்கிறார் நதியா முராட். ‘குழந்தைகளைக் கேடயங்களாகப் பயன்படுத்தியவர் பாக்தாதி. நாஜிகள் எவ்வாறு விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனரோ அவ்வாறே ஐஎஸ்ஐஎஸ் ஆட்களும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்’ என்கிறார் நதியா.

மீட்சி?

அல் பாக்தாதியின் மறைவு இப்படியென்றால், ஐஎஸ்ஐஎஸ்ஸின் அடுத்த தலைவரென ஆரூடம் சொல்லப்பட்ட அதன் செய்தித் தொடர் பாளரையும் வெடி வைத்துத் தகர்த்திருக்கிறது அமெரிக்கா. ஆரம்பித்த இடத்துக்கே வந்து சேர்ந்திருக்கிறது ஐஎஸ்ஐஎஸ். செல்வாக்கு சரிந்துவிட்டது. கைப்பற்றிய அனைத்தும் கைவிட்டுப் போய்விட்டன. தலை துண்டிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் எங்கள் கதை முடிந்துவிடவில்லை என்கிறது அமைப்பு. பாக்தாதியின் இடத்துக்கு அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி என்றொருவரை அடுத்த தலைவராய் டெலிகிராம் ஆப்பின் மூலம் செய்தி சொல்லியிருக்கிறது ஐஎஸ்ஐஎஸ். பயங்கர வாதத்தின் முடிவு முற்றாக எழுதப்படவில்லை என்பதைத்தான் இந்தச் செய்தி தெரிவிக்கிறது.

அல் பாக்தாதி
அல் பாக்தாதி

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு என்னென்ன காரணங்களுக்காகத் தோன்றியதோ அந்தக் காரணங்கள் அனைத்தும் இன்னமும் உயிர்ப்போடு இருக்கின்றன. ஐஎஸ்ஐஎஸ்ஸை வீழ்த்த ஒன்று திரண்ட கரங்கள் அனைத்துமே உத்தமமானவை அல்ல, அவையும் தங்கள் நலனுக்காகப் பயங்கரவாதத்துக்குத் தீனி போட்டு வளர்த்துவிட்டப்பட்ட கரங்கள்தாம்.

பாக்தாதியைக் கொல்லும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கைலா முய்லர்’ எனப் பெயரிட்டது அமெரிக்கா. 2013ஆம் ஆண்டு சிரியாவுக்கு வந்த அமெரிக்க மனித உரிமைச் செயற்பாட்டாளர்தான் முய்லர். அவரைச் சிறைபிடித்த ஐஎஸ்ஐஎஸ், தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை களுக்குப் பிறகு, 2015ஆம் ஆண்டு அவரைக் கொன்றது. அவரை நினைவுகூரும்விதமாகத்தான் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா பெயர் சூட்டியது.

அடுத்த அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அல் பாக்தாதி கொல்லப்பட்டிருப்பது நிச்சயம் தற்செயலானதாக இருக்க முடியாது என்னும் சந்தேகமும் எழுப்பப்படுகிறது. இரண்டாவது முறை அதிபராவதற்கு ஓராண்டுக்கு முன்பு ஒபாமா அரசு பின்லேடனை அழித்ததை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். பாக்தாதியின் மரணம், டிரம்பின் வெற்றிக்கு உதவுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால் அமெரிக்கத் தேர்தலைத் தாண்டி பயங்கரவாதம் இத்துடன் முடிந்துவிட்டதா என்பதுதான் வரலாற்றின் கேள்வி.

பயங்கரவாதம், வெட்ட வெட்ட வளரும் கொடுங்கனவு. அழிக்க அழிக்கச் செழிக்கும் காட்டுச்செடி. தலையைக் கிள்ளியெறிவதன்மூலம் மட்டும் அதைக் கொல்லமுடியாது என்பதைத் தான் இதுவரை வரலாறு உணர்த்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism