Published:Updated:

`பெய்ஜிங்கிலிருந்து வடகொரியா பறந்த மருத்துவர் குழு?’ - கிம்மின் உடல் நிலையில் வலுக்கும் சந்தேகம்

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன் ( AP )

வட கொரிய அதிபரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், சீன மருத்துவர் குழு கொரியா சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரும்புத்திரை என அறியப்படும் வட கொரியாவில், என்ன நடக்கிறது என்பது அருகில் இருக்கும் சீனா, தென் கொரியாவுக்குக்கூட தெரியாது. அந்த அளவுக்கு அங்கிருந்து காற்றுகூட வெளியேறாதபடி பாதுகாத்துவருகிறார்கள், அந்நாட்டின் அதிபர்கள். மொத்த உலகத்தையும் திணறடித்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், வட கொரியாவில் பரவவில்லை என அந்நாடு கூறுகிறது. இருந்தும், இதை இதுவரை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

இப்படியான நேரத்தில்தான், வட கொரியாவிலிருந்து சமீபத்தில் ஒரு செய்தி வெளிவந்தது. ஏவுகணைச் சோதனை, அணு ஆயுதச் சோதனை என்று அமெரிக்காவையே கலங்கடித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது. வட கொரிய அதிபர்கள், மதுவை அதிகம் விரும்பக் கூடியவர்கள். அதன்படி, அதீத புகை மற்றும் மதுப்பழக்கம், உடல் பருமன், தொடர் பணிகளால் ஏற்பட்ட மன அழுத்தம் ஆகியவற்றால் கிம்முக்கு இதய நோய் ஏற்பட்டதாகவும், அதற்கான அறுவைசிகிச்சை முடிந்ததும், தற்போது அவர் உயிருக்குப் போராடி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்தச் செய்தியையும் இதுவரை யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், இப்படி எதுவுமே நடக்கவில்லை என்று மறுத்துள்ளது அந்நாட்டு அரசு.

ஏப்ரல் 15-ம் தேதி நடந்த கிம்மின் தாத்தா (வடகொரியாவை உருவாக்கியவர்) பிறந்தநாள் விழாவில் அதிபர் கலந்துகொள்ளவில்லை. இதுவே, அவர் உடல்நலம் தொடர்பான சந்தேகங்களை அதிகரிக்கச்செய்தது. இந்தக் குழப்பங்களுக்கே இன்னும் உறுதியான விடை கிடைக்காத நிலையில், தற்போதும் வட கொரிய அதிபர் பற்றி மேலும் ஒரு தகவல் கசிந்துள்ளது. கிம் ஜாங் உன்னின் உடல்நிலையைப் பரிசோதிக்க, திறமை வாய்ந்த ஒரு மருத்துவ நிபுணர் குழுவை சீனா, வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரைபடம்
வரைபடம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரியின் தலைமையில், கடந்த வியாழக்கிழமை, சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து வடகொரியாவுக்கு இந்த மருத்துவர் குழு புறப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத 2 அதிகாரிகள், 'ராயட்டர்ஸ்' ஊடகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சீன வெளியுறவுத் துறை, வடகொரியாவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், அதனால் இந்த விஷயத்தின் உண்மைத்தன்மை மற்றும் ஆதாரங்களைக் கண்டறிவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதய நோய்... தனி வில்லாவில் ட்ரீட்மென்ட்... ஆபத்தான நிலையில் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை?!

வட கொரியாவில் அசாதாரண சூழல் நிலவுவதற்கான எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கிம் ஜாங் உன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் தோற்றமளிப்பார் என்றும் தென் கொரிய உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். கிம்மின் உடல்நிலை தொடர்பான விவகாரத்தில் சீனாவின் ஈடுபாடு குறித்து இதுவரை தங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

கடந்த இரு நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ’வட கொரிய அதிபரின் உடல்நிலை பற்றிய தகவல்கள் தவறானவை’ என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், வட கொரிய அதிகாரிகளுடனான ட்ரம்ப்பின் தொடர்பு குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

`கிம் ஜாங் உன்’ என்னவானார்? வடகொரியாவின் அடுத்த அதிபர் ஆவாரா சகோதரி கிம் யோ?

2008-ம் ஆண்டு, வட கொரியாவின் முன்னாள் அதிபரும் கிம் ஜாங் உன்னின் தந்தையுமான கிம் ஜாங் இல், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டபோதும், சீனா மற்றும் பிரெஞ்சு மருத்துவர்களே அவருக்கு சிகிச்சையளித்ததாக தென்கொரியா கூறியது. தற்போது கிம் ஜாங் உன்னின் உடல் நிலை தொடர்பான தகவல் வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில், அதில் சீனாவின் ஈடுபாடு குறித்த செய்தி வெளியாகியுள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு