Election bannerElection banner
Published:Updated:

ஜமால் கஷோகி கொலைக்கு ஒப்புதல் வழங்கினாரா சவுதி இளவரசர்?! -என்ன சொல்கிறது அமெரிக்க உளவு அறிக்கை?

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி

அமெரிக்க காங்கிரஸில் 2019-ம் ஆண்டு கஷோகி கொலை தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்ட பின்னும் ட்ரம்ப் நிர்வாகம் இதை வெளியிடவில்லை.

சவுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கொலை செய்யும் திட்டம் சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மானின் அனுமதியிலேயே நடந்திருக்கிறது என அமெரிக்க உளவு அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது.

நீண்ட நாள்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பான இந்த அறிக்கை தற்போது பைடன் நிர்வாகத்தில் வெளியாகியிருக்கிறது.

யார் இந்த ஜமால் கஷோகி?

அமெரிக்காவில் செயல்பட்டுவரும் வாஷிங்டன் போஸ்ட்டில் காலம்னிஸ்டாக இருந்த ஜமால் கஷோகி, தனது திருமணத்துக்குத் தேவையான ஆவணங்களைப் பெறுவதற்காக 2018-ம் ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி இஸ்தான்புல்லில் இருக்கும் சவுதி தூதரகத்துக்குச் சென்றபோது சவுதி முகவர்களால் கொலைசெய்யப்பட்டார்.

சவுதியைச் சேர்ந்த இவர், ஒருகாலத்தில் சவுதி அரச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார். சவுதி அரசின் ஆலோசகராகவும் இருந்துவந்தார். ஆனால், அதன் பின் சவுதி அரசையும், இளவரசர் முகமது பின் சல்மானின் கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்துவந்தார். தனது விருப்பத்தில் நாட்டைவிட்டுச் சென்று அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்டில் பணியாற்றிவந்தார். அதில் சவுதி அரசை விமர்சித்துக் கட்டுரைகளை எழுதினார்.

ஜமால்
ஜமால்

கஷோகி திருமணம் செய்துகொள்ளவிருந்த ஹாட்டிஸ் சென்கிஸ் என்ற பெண், துருக்கியைச் சேர்ந்தவர். கஷோகி கொலை செய்யப்பட்ட தினத்தன்று இவரும் அவருடன் இஸ்தான்புல்லில் இருக்கும் தூதரகத்துக்குச் சென்றிருந்தார். ஆனால், ஆவணங்களைப் பெற்று வர கஷோகி உள்ளே செல்ல இவர் வெளியே காத்திருந்தார்.

கஷோகியைக் கொலை செய்ய சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டதாகக் கூறி ஹாட்டிஸ் சென்கிஸ், அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.

ட்ரப்ம்பின் சவுதி உறவு!

கஷோகியின் கொலையில் சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்புள்ளது என்று கூறப்பட்டது. இருப்பினும் சவுதி அரசு, இளவரசர் சல்மான் அதை மறுத்துவந்தனர்

அமெரிக்க காங்கிரஸில் 201-ம் ஆண்டு கஷோகி கொலை தொடர்பான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்ட பிறகும் ட்ரம்ப் நிர்வாகம் இதை வெளியிடவில்லை. பில்லியன் டாலர் கணக்கில் சவுதிக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்துவருகிறது. கஷோகியின் விஷயத்துக்காக அதை விட்டுக் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார் ட்ரம்ப்.

கஷோகியின் கொலைக்குப் பிறகு சி.ஐ.ஏ., இந்தக் கொலையை இளவரசர் சல்மான் ஆணையிட்டிருக்கலாம் எனத் தெரிவித்தது. ஆனால், இது குறித்து அமெரிக்காவோ, சி.ஐ.ஏ அதிகாரிகளோ வெளிப்படையாகப் பேசவில்லை. ட்ரம்ப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐ.நா-வின் விசாரணையாளர் ஒருவர் முகமது பின் சல்மானின் உத்தரவு இல்லாமல் இந்தக் கொலை நடந்திருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

கஷோகி - முகமது பின் சல்மான்
கஷோகி - முகமது பின் சல்மான்

மேலும், சவுதி அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு கஷோகியை கொலை செய்திருக்கிறது என்றும், கஷோகி கொலை குறித்தான வழக்காடல் நீதிக்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா உட்பட பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் கஷோகியின் கொலையில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த நபர்கள் மீது தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இளவரசர் முகமது பின் சல்மான் மீது எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

என்ன செய்யப்போகிறார் பைடன்?

தனது தேர்தல் பிரசாரத்தின்போது பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலைக்கு சவுதிதான் ஆணையிட்டது என்றும், அதேபோல சவுதிக்கு ஆயுதங்கள் விற்பதை நிறுத்தப்போவதாகவும் பைடன் தெரிவித்திருந்தார்.

சவுதியுடனான அமெரிக்காவின் உறவில் கடுமை காட்டப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அவர் கூறியதைப்போல, பதவியேற்ற சில தினங்களில் ஏமன் போரில் சவுதி தலைமையிலான கூட்டணிக்கு அளித்துவந்த ஆதரவை நிறுத்துவதாகத் தெரிவித்தார். அதேபோல ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதிக்கு அமெரிக்க ஆயுதங்களை விற்பதற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறார். இந்தநிலையில்தான் அமெரிக்கா உலக அளவில் மனித உரிமைகள் காக்கப்படுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது எனச் சில தினங்களுக்கு முன் சவுதி அரசரிடம் தொலைபேசியில் உரையாடியபோது தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Evan Vucci

இருப்பினும், சவுதி அரசர் சல்மானுடனான தனது தொலைபேசி உரையாடலில் பைடன், ஜமால் கஷோகியின் கொலை குறித்துப் பேசியதாகத் தகவல் ஏதும் வெளிவரவில்லை. சவுதியில் பல அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்கள் விடுவிக்கப்பட்டதை பைடன் வரவேற்றதாகவும், உலக அளவில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின்பால் நடைபெறும் ஆட்சிக்கு அமெரிக்கா அளிக்கும் முக்கியத்துவம் குறித்து பைடன் பேசியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

சவுதி மீது கடுமை காட்டப்படும் என அமெரிக்காவின் புதிய அதிபரான பைடன் தெரிவித்திருந்தாலும், உலக அளவில் எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பங்குவகிக்கும் சவுதியை சட்டென அமெரிக்கா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதேபோல ஈரானை ஒடுக்க, சவுதியுடனான கூட்டணி அமெரிக்காவுக்குத் தேவைப்படுகிறது. எனவே, பைடன் சவுதியிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டுமென்றால், இதை கவனத்தில் வைத்துக்கொண்டே முடிவுகளை எடுக்க வேண்டும்.

வெளியான அமெரிக்காவின் உளவுத்துறை அறிக்கை!

2017-ம் ஆண்டிலிருந்து சவுதி அரசின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பு இளவரசர் சல்மானின் பொறுப்பில் இருப்பதால் இம்மாதிரியான ஒரு நடவடிக்கையை (கஷோகியின் கொலை) அவரின் அனுமதி இல்லாமல் சவுதி அதிகாரிகளில் செய்திருக்க முடியாது என அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

இஸ்தான்புல்லில் கஷோகியைக் கொல்லவோ, பிடிப்பதற்கான திட்டத்துக்கோ சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்` என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வெளிநாட்டில் தனது அரசை எதிர்ப்பவர்களை ஒடுக்க வன்முறை நடவடிக்கைகளை இளவரசர் மேற்கொண்டுவந்தார் என்பதால், அவர் இந்த கஷோகி குறித்தான திட்டத்துக்கு அனுமதி வழங்கியிருக்கலாம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

என்ன சொல்கிறது சவுதி?

கஷோகியின் கொலையில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனத் தொடர்ந்து மறுத்துவந்திருக்கிறார் சவுதியின் இளவரசர். இருப்பினும், சவுதியில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், குறிப்பாக, பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் மீது அடக்குமுறைகளை அவிழ்த்துவிடுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தற்போது அமெரிக்க உளவு முகமையின் இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என சவுதி தெரிவித்திருக்கிறது. மேலும், `இது தவறான, எதிர்மறையான ஓர் அறிக்கை’ என்றும் சவுதி தெரிவித்திருக்கிறது.

கஷோகி கொலை குறித்த விசாரணைக்குப் பிறகு, ஒரு பெரும் போராட்டத்தில் கஷோகிக்கு மருந்து ஒன்று கொடுக்கப்பட்டது என்றும், அது அதிக `டோஸ்`-ஆகி அவர் உயிரிழந்தார் என்றும் சவுதி தெரிவித்தது. அதன் பிறகு அவரின் உடல்கள் வெட்டப்பட்டு உள்ளூரில் ஒருவரிடம் கொடுக்கப்பட்டது என்றும் சவுதி தெரிவித்திருந்தது.

முன்னதாக கஷோகியின் கொலை திட்டமிடப்பட்ட ஒன்று இல்லை என்று தெரிவித்திருந்தது சவுதி. மேலும், கஷோகியை சவுதிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட குழுவின் தலைவரால் கஷோகி கொல்லப்பட்டார் என்றும் சவுதி அரசு தெரிவித்திருந்தது.

மேலும் 2019-ம் ஆண்டு சவுதி நீதிமன்றம், கஷோகி கொலையில் ஈடுபட்டதாக ஐந்து பேருக்கு மரண தண்டனை வழங்கியது அதன் பிறகு அது இருபது ஆண்டுக்கால சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஜமால் கஷோகி
ஜமால் கஷோகி

துருக்கியின் நிலைப்பாடு என்ன?

சவுதியின் உளவு அதிகாரிகளால் வழிநடத்தப்பட்ட 15 பேர் துருக்கிக்கு வந்ததாகவும், அவர்கள் கஷோகியின் வருகைக்கு முன் பாதுகாப்பு கேமராக்களை அகற்றியதாகவும் துருக்கி தெரிவித்திருந்தது.

தூதரகத்தின் உள்ளே நுழையும்போதே கஷோகி மூச்சுத்திணறி உயிரிழந்ததாகவும் துருக்கியின் விசாரணையாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்தக் கொலை திட்டமிட்ட ஒன்று என்று துருக்கியின் அதிபர் எர்துவான் தெரிவித்திருந்தார்.

மேலும், கஷோகியின் கொலைக்கு சவுதியின் உயர்மட்ட அதிகாரிகளே காரணம் என துருக்கி அதிபர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஜமால் கஷோகியின் விவகாரத்துக்குப் பிறகு துருக்கி மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

சவுதி இளவரசர் சல்மானின் முன்னாள் உதவியாளர்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று அவர்கள் விசாரிக்கப்பட்டிருந்தாலும், தற்போது வெளியாகியிருக்கும் இந்த அமெரிக்க உளவு முகமையின் அறிக்கை இளவரசர் சல்மானே கொலைத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதாகத் தெரிவிக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு