Published:Updated:

வேட்டையாடப்பட்ட பாக்தாதி... ‘லைவ்’வில் ரசித்த ட்ரம்ப்!

பாக்தாதி
பிரீமியம் ஸ்டோரி
News
பாக்தாதி

தன் கதை ஒரே இரவில் இப்படி முடியும் என, பயங்கரவாதி பாக்தாதி கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ‘பாக்தாதி கொல்லப்பட்டுவிட்டார்’ என்ற செய்தி, பலமுறை பரவியிருக்கிறது.

அப்போதெல்லாம் சிரியாவுக்குள் ஏதோ ஒரு பகுதியில் பாக்தாதி ஆக்ரோஷமாக உரையாற்றிக்கொண்டிருப்பார். ஆனால், இந்த முறை பாக்தாதியின் கதையை அமெரிக்கா திட்டமிட்டு கனகச்சிதமாக முடித்திருக்கிறது.

கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.எஸ் (இஸ்லாமிக் ஸ்டேட்) அமைப்பு, ‘தூய்மையான இஸ்லாம்’ என்ற பெயரில் உலகம் முழுக்க இஸ்லாமிய இளைஞர்களை வசியப்படுத்தியது. இதனால், ஏராளமானோர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்தனர். பழைமைவாதிகள் நிறைந்த ஐ.எஸ் அமைப்பு, தன் கட்டுப்பாட்டில் வசித்த மக்களை எந்தளவுக்கு வதைக்க முடியுமோ அந்தளவுக்கு வதைத்தது. சிரியாவில் 34,000 சதுர கி.மீ பரப்பள வையும் கைப்பற்றியது. பத்திரிகையாளர்களின் தலைகளைக் கொய்வது, மக்கள் தலையைத் துண்டிப்பதெல்லாம் ஐ.எஸ்–க்கு ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போன்றது. இந்தக் கொடூர அமைப்பின் குரூரத் தலைவர்தான் அபுபக்கர் அல் பாக்தாதி. இஸ்லாமிய மக்களைக் காக்க வந்த ‘கலிபா’ என்றும் தன்னை அறிவித்துக்கொண்டவர் இவர். பின்லேடனுக்குப் பிறகு, அமெரிக்காவால் அதிகமாகத் தேடப்பட்டவர்.

ஒபாமாவுக்கு பின்லேடன் என்றால், டொனால்டு ட்ரம்புக்கு பாக்தாதி எனலாம். பாக்தாதியின் உயிருக்கு இந்திய மதிப்பில் 178 கோடி ரூபாய் விலை அறிவிக்கப்பட்டது. குர்து ஆதரவு, சிரியப்படைகளுக்கும் பாக்தாதிக்கும் ஆகவே ஆகாது. குர்துக்களுடன் அமெரிக்கா கைகோத்தது. எப்படியாவது பாக்தாதியின் கதையை முடித்துவிட வேண்டும் என்று குர்துக்கள் கங்கணம்கட்டிக்கொண்டிருந்தனர். குர்து ஒற்றர்கள்தான் பாக்தாதியின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிரியாவில் இட்லிப் மான்காணத்தில் பரிஷா என்கிற கிராமத்தில் உள்ள வீட்டில் சந்தேகத்துக் கிடமான நடவடிக்கைகள் இருப்பதை குர்து ஒற்றர்கள் அறிந்தனர். வீட்டை தீவிரமாக நோட்டமிட்டனர். அந்த வீட்டில் ஐ.எஸ் இயக்கத் தலைவர் பாக்தாதி வசிப்பதாக உறுதியான தகவல் கிடைத்தது. உடனடியாக, சி.ஐ.ஏ–வுக்குத் தகவல் பறந்தது. சுறுசுறுப்பானார் ட்ரம்ப். ஏற்கெனவே பல பிரச்னைகளில் பெயர் கெட்டுப்போயிருந்த ட்ரம்ப்புக்கு, பாக்தாதி கிடைத்த விஷயம் அல்வா சாப்பிடுவதுபோலாயிற்று.

சொல்லப்போனால், ஏதாவது ஓர் அதிரடியைச் செய்து அமெரிக்க மக்களிடம் நன்மதிப்பைப் பெறவேண்டும் என்பதுதான் ட்ரம்பின் திட்டம். பாக்தாதி பற்றிய தகவல் கிடைக்கவும் ‘கதையை முடித்துவிடுங்கள்’ என வாஷிங்டனிலிருந்து கிரீன் சிக்னல் பறந்தது. பாக்தாதி வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், டிரம்ப்புக்கும் லைவ் செய்யப்பட்டது. பின்லேடன் வேட்டையை ஒபாமா பார்த்ததுபோல், பாக்தாதி வேட்டையாடப்படுவதை ட்ரம்ப் ரசித்தார். இப்போது அந்த வீடியோ பகிரங்கமாகவே வெளியிடப்பட்டிருக்கிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அக்டோபர் 26-ம் தேதி இரவு... வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் சுறுசுறுப்பானது. இங்கேயிருந்து அமெரிக்காவின் 70 எலீட் டெல்டா குழுவைச் சேர்ந்த அதிரடிப்படை வீரர்கள், எட்டு ஹெலிகாப்டர்களில் பாக்தாதி இருந்த கிராமத்தை நோக்கிப் பறந்தனர். அதிரடிப்படை வீரர்களுடன் நன்கு பயிற்சி பெற்ற நான்கு ராணுவ நாய்களும் பாக்தாதியை வேட்டையாடச் சென்றன. ரேடார்களில் ஹெலிகாப்டர்கள் சிக்காமல் இருக்க, மிகவும் தாழ்வாகப் பறந்தன. அதிரடிப்படை வீரர்கள், இரவில் நன்றாகப் பார்க்கக்கூடிய கண்ணாடிகள் அணிந்திருந்தனர்.

பாக்தாதி இருந்த வீட்டை அடைந்ததும், நான்கு ஹெலிகாப்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டன. ஒரு ஹெலிகாப்டர் அதிரடியாக குண்டு வீசி, காம்பவுண்டு சுவரைத் தகர்த்தது. அதே வேளையில், வீட்டின் மொட்டைமாடியில் வீரர்கள் கயிறு வழியாகக் குதித்தனர். பாக்தாதியும் அவரின் பாதுகாவலர்களும் பதில் தாக்குதல் நடத்த முயன்றனர். பாக்தாதியைத் தப்பவைக்கும் முயற்சியில், ஒன்பது ஐ.எஸ் பயங்கரவாதிகள் மடிந்துபோக, பாக்தாதி தன் மூன்று குழந்தைகளுடன் அங்கேயும் இங்கேயும் ஓடினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாக்தாதியின் பின்னாடியே அமெரிக்கப் படையினரின் நாய்களும் துரத்திக்கொண்டு ஓட... பாக்தாதியின் கடைசி விநாடிகள் கொடூரமாகவே இருந்தன. நாய்களிடம் கடிபட்டுச் சாவதா... அமெரிக்க வீரர்களின் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாவதா அல்லது உடலில் கட்டியுள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்யவா எனத் தவித்துள்ளார். இறுதியில் தப்பிக்க வழி தெரியாமல், குண்டுகளை வெடிக்கச்செய்து மூன்று குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக்கொண்டார் பாக்தாதி. அந்தச் சமயத்தில் அவர் கதறி அழுதிருக்கிறார். இதைத்தான் டிரம்ப், ‘பாக்தாதி, ஒரு கோழைபோல் செத்தான்’ எனக் குறிப்பிட்டார்.

பாக்தாதியின் சிதறிப்போன உடல் பாகங்களைச் சேகரித்த அமெரிக்கப் படை, அவற்றை கடலில் வீசியது. இஸ்லாமிய முறைப்படி இறுதிச்சடங்கு செய்ததாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

பாக்தாதியின் ஆடைகள், இரண்டு குர்து ஒற்றர்கள் வழியாக அமெரிக்கப் படைகளுக்குக் கிடைத்தன. ஆடைகளேவைத்தே, கொல்லப்பட்டது பாக்தாதிதான் என்பது உறுதியானது. கிழக்கு சிரியாவில் தொடங்கி பாக்தாதியின் ஒவ்வொரு நகர்வையும், அவர் வசித்த வீடு, சுரங்கம் உள்ளிட்ட கட்டமைப்புகளையும் கண்காணித்து சி.ஐ.ஏ-வுக்கு துல்லியத் தகவல் கொடுத்தது குர்து ஒற்றர்கள்தான். இவற்றை வைத்தே உலகின் அதிபயங்கரமான மனிதரின் கதையை முடித்தது அமெரிக்கா.

பாக்தாதிகள் கொல்லப்படுவதைக்காட்டிலும் உருவாகாமல் தடுப்பதே நல்லது!