Published:Updated:

3 ஆண்டு தேடுதல்.. ஒருவழிப்பாதை குகை.. ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டது எப்படி?

அல் பக்தாதி
அல் பக்தாதி

இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டபோது, நீண்ட இடைவெளிக்குப்பின் விடியோவில் தோன்றிய அல்-பக்தாதி சுமார் 18 நிமிடங்கள் பேசினார்.

2013-ன் இறுதிக்கட்டம்... மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப் படைகளை எதிர்த்துப் போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணி என்கிற அமைப்பும், அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்கிற புதிய அமைப்பை உருவாக்கின. பேய் வேகத்தில் பரவிய இந்த அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2014 தொடக்கத்தில் இருந்து இராக்குக்குள் நுழைந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் பலுஜா, மொசூல் ஆகிய நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பிணைக்கைதிகள், அரசின் ஆதரவாளர்களைக் கழுத்தறுத்து, அதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவவிடுவதைத் தொடர்ச்சியாகச் செய்துவந்தனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ்
ஐ.எஸ்.ஐ.எஸ்

அல்கொய்தா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப, தங்களை ஒரு இஸ்லாமிய அரசாக பிரகடனப்படுத்திக் கொண்டனர். அரசின் கலிபா எனப்படும் தலைவராக ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி அறிவிக்கப்பட்டார். அல்கொய்தாவும் ஒசாமா பின்லேடனும் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப ஐ.எஸ் அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் சிரியாவிலும் இராக்கிலும் மிகப்பெரிய நிலப்பரப்பைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தார்கள். 2015 தொடக்கத்தில், 7,000 கோடி ரூபாய் அளவுக்கு பட்ஜெட் போடும் நிலையில் அவர்களின் நிதிநிலை இருந்தது. சுமார் 30,000 வீரர்கள் அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.

Vikatan

2015-ம் ஆண்டு மத்தியில் இராக்கிலும் சிரியாவிலும் அரசுப்படைகள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, ஐ.எஸ் அமைப்பின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இருந்தாலும், அவர்களின் அனுதாபிகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் செயல்படுகின்றனர். நிலங்களில் உள்ள தங்களது ஆளுமை கட்டுப்படுத்தப்பட்டதால், தங்களது இருப்பை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஐ.எஸ் அமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவ்வப்போது பல்வேறு நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல்களை அரங்கேற்றி வந்தனர். இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் நடந்த விமானத்தாக்குதலில் பக்தாதி காயமடைந்ததாகவும், இதன்காரணமாக தீவிரவாத இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பை 5 மாதங்கள்வரை அவர் கைவிட்டதாகவும், அப்போது அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி பக்தாதி இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டபோது, நீண்ட இடைவெளிக்குப்பின் விடியோவில் தோன்றிய அல்-பக்தாதி சுமார் 18 நிமிடங்கள் பேசினார்.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

இதன்பின் பாக்தாதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 25 மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்த அமெரிக்கா நேற்று ஒரு முக்கிய தகவலை வெளியிட்டது. அது அவரது இறப்புதான். சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ சிறப்புப்பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை இரவு அல் பாக்தாதி அவரின் 3 மகன்கள், கூட்டாளிகள் பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், ``அமெரிக்காவின் 3 ஆண்டுகள் தேடுதலுக்கு வெற்றிகிடைத்துள்ளது. ஆம், உலகை அச்சுறுத்திவந்த ஐஎஸ். தீவிரவாதக்குழு தலைவர் அல் பாக்தாதியை கே-9 டாக்ஸ் ராணுவப் பிரிவு சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு குகையில் வைத்து கொலை செய்துள்ளது.

Vikatan

கே-9 டாக்ஸ் ராணுவப் பிரிவு சனிக்கிழமை இரவு மிகவும் ஆபத்தான முறையில் பாக்தாதி இருந்த இடத்தில் ரெய்டு நடத்தியது. நமது படையினரிடம் இருந்து தப்பிக்க பாக்தாதி ஒருவழிப்பாதை உள்ள குகைக்குள் ஓடினார். தப்பிச்செல்ல முடியாத ஒற்றைவழிப் பாதை உள்ள அந்த குகைக்குள் அல் பாக்தாதி, அவரின் 3 மகன்கள் தாங்கள் அணிந்திருந்த தற்கொலை உடையை வெடிக்கச்செய்து உயிரிழந்தனர். பாக்தாதி உயிரிழக்கும் முன் நோய்வாய்ப்பட்டு பலவீனமாக இருந்தார். ஆனால் படைகள் துரத்தும்போது, கோழையைப் போன்று குகைக்குள் ஓடி ஒளிந்து, கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். அல் பாக்தாதி, குகைக்குள் உயிரைக் காத்துக்கொள்ளத் தப்பி ஓடியதும், அச்சத்தால் கூனி குறுகி படை வீரர்களைப் பார்த்து அஞ்சி அழுததும் வித்தியாசமாக இருந்தது. அதற்கான வீடியோ ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

பாக்தாதி கொல்லப்பட்ட இரவு அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே சிறப்பான ஓர் இரவு. உலகில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த கொடூரமான கொலைகாரர் அழித்தொழிக்கப்பட்டார். இனி எந்த அப்பாவி மக்களுக்கும் அவரால் துன்பம் வராது. ஒரு நாயைப் போன்று, கோழையைப் போன்று அல் பாக்தாதி உயிரிழந்தார். இனி இந்த உலகம் பாதுகாப்பானதாக இருக்கும். பாக்தாதி வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தது உயிரிழந்தபோது அங்கிருந்த சுவர் இடித்து விழுந்தது. அவரின் உடலை டிஎன்ஐ ஆய்வுக்கு உட்படுத்திக் கொல்லப்பட்டது பாக்தாதி என்று உறுதி செய்தபின்னரே அறிவிக்கிறேன். பல ஆண்டுகளாக பாக்தாதியை தேடிவந்தோம். கடந்த சில வருடங்களாக அவரின் இருப்பிடத்தை நெருங்கி தீவிர கண்காணிப்பில் கொண்டுவந்தோம். பாக்தாதியை உயிருடன், அல்லது கொலை செய்வதுதான் எங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதன்படி இப்போது செய்துள்ளோம். கடந்த மாதம் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன், இப்போது பாக்தாதி கொன்றுவிட்டோம். இனிமேல் உலகம் அமைதியானதாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு