Published:Updated:

` இஸ்ரேல் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்!' -மோடி அரசை முன்வைத்து நடக்கும் ட்விட்டர் அரசியல்

பி.ஐ.ஜெ தலைவரும், இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளால் தேடப்பட்டுவந்த பாஹா அபு அல்அதா இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் அவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் அவரது தளபதி ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் காஸா போர்
இஸ்ரேல் காஸா போர் ( AP )

காஸா... உலகநாடுகளின் செய்திகளில் அன்றாடம் இடம்பெறும் ஒரு பெயர். அதற்கு காரணம் இஸ்ரேல் - பாலஸ்தீன இடையே அடிக்கடி நடக்கும் அறிவிக்கப்படாத போர்தான். 1948-ல் பாலஸ்தீன போரில் அந்நாட்டு மக்கள் அகதிகளாகச் சிதறிச் சென்றனர். இஸ்ரேல் என்னும் சுதந்திர நாடு நிர்மாணிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அகதிகளாகப் பிற பகுதிகளுக்குத் துரத்தப்பட்ட பாலஸ்தீனியர்களின் உரிமைகளை மீட்பதற்காகத்தான் காஸா-இஸ்ரேல் எல்லையில் இன்றுவரை போராட்டம் தொடர்கிறது.

இதனால் உலகின் மிக ஆபத்தான போர்முனை என இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லை கருதப்படுகிறது. அடிக்கடி நடக்கும் சண்டைகளால் காஸாவின் எல்லைப் பகுதியில் நாள்தோறும் துப்பாக்கிச்சூடு சத்தங்கள் ஒலிக்கத் தவறுவதில்லை.

இஸ்ரேல் காஸா போர்
இஸ்ரேல் காஸா போர்
AP

2014-ல் காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அந்தப் போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அந்தப் போருக்குப் பிறகு காஸாவில் இயங்கும் ஹமாஸ் தீவிரவாதக் குழுவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையேயான மோதல் உக்கிரமானது.

இது ஒருபுறம் இருக்க காஸா மக்களும் தங்கள் முன்னோர்களின் உரிமைகளை மீட்க, அதாவது, இஸ்ரேலின் எல்லையில் உள்ள நிலங்களை மீட்கப் போராட்டத்தில் குதித்துவிட்டனர். இதனால் ஒவ்வொரு வருடமும் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்துகொண்டே வருகிறது. இஸ்ரேல் ராணுவமும் வான்வழித் தாக்குதல்களை அடிக்கடி நிகழ்த்தி உயிர்களைப் பலிகொண்டு வருகிறது.

`மிஸ்டு கால்' ஊடுருவல்; இந்தியர்களைக் குறிவைத்த இஸ்ரேல் நிறுவனம்! - வாட்ஸ்அப் வெளியிட்ட அதிர்ச்சி

`காஸா எல்லைப் பகுதியில் தற்போது இஸ்ரேலாக இருக்கும் பகுதியில் உள்ள தங்கள் முன்னோர்களின் நிலங்களைத் திரும்பத் தர வேண்டும். அந்தப் பகுதிகளுக்குள் செல்ல மூதாதையர்களை அனுமதிக்க வேண்டும்’ என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக வைக்கப்படுகிறது. காஸா மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தரப்பில் கூறப்படும் காரணம் ஒன்றே ஒன்றுதான். `நாங்கள் தீவிரவாதத்துக்கு எதிராகத்தான் தாக்குதல் நடத்துகிறோம்.’

இஸ்ரேல் காஸா போர்
இஸ்ரேல் காஸா போர்
AP

ஆம்.. இஸ்ரேலுக்கு எதிராக காஸாவில் செயல்படுவது ஹமாஸ் போராளிகள் குழு. `உரிமைக்காகப் போராடுகிறோம்' எனக் கூறும் இவர்களைத்தான் தீவிரவாதக் குழுக்கள் எனக் கூறி இஸ்ரேல் ஒவ்வொரு முறையும் போர் தொடுத்துவருகிறது.

2007-ல் ஹமாஸ் போராளிகள் அமைப்பு காஸாவில் ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல் இப்போதுவரை, `இந்தப் பகுதி தீவிரவாதிகள் கைக்குப் போய்விட்டது’ என்று சொல்லி அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ராணுவ நடவடிக்கைகளையும் அமெரிக்க ஆதரவோடு அரங்கேற்றியது இஸ்ரேல்.

"இஸ்ரேல், பாலஸ்தீனம், சோவியத் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட சோதனை இப்போது இந்தியாவுக்கு!"- வில்லியம் தால்ரிம்பில்

இப்போது நடக்கும் சம்பவத்துக்கு வருவோம். நேற்று மதியம் இரு எல்லைப் பகுதிகளிலும் ராக்கெட் குண்டு மழை பொழியப்பட்டது. பொதுவாக ஹமாஸ் போராளிகள் குழுதான் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுவந்தது. ஆனால், நேற்று ஹமாஸ் அமைப்பின் இணை அமைப்பாக கருதப்படும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் எனப்படும் பி.ஐ.ஜெ-வுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூண்டது. பி.ஐ.ஜெ தலைவரும் இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளால் தேடப்பட்டுவந்த பாஹா அபு அல்அதா இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் அவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் அவரது தளபதி ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலைக்குப் பழிக்குப் பழிவாங்கும் நோக்கில் பி.ஐ.ஜெ அமைப்புடன் மற்ற அமைப்புகளும் சேர்ந்து நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுவரை 200 ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் செலுத்தியதாகவும், இதில் 12 பேர்வரை உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இருதரப்பில் யார் முதலில் தாக்கினார்கள் என்று இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவராதநிலையில், `இந்தியா - பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது போன்று இஸ்ரேல் காஸா தீவிரவாதக் குழுக்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளது' என்றுகூறி இந்தத் தாக்குதல்களை மையமாக வைத்து தற்போது ட்விட்டரில் #indiawithisrael என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Vikatan

இஸ்ரேல் போரில் இந்தியா யார் பக்கம் நிற்கும் என்ற கேள்வியுடன் இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டுவருகிறது. பா.ஜ.க உறுப்பினர் கபில் மிஸ்ரா மற்றும் அக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர் இந்த ட்வீட்டைப் பதிவிட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கும் தற்போதுள்ள இஸ்ரேல் பிரதமருக்கும் நெருக்கமான உறவுகளைக் குறிப்பிட்டு அதிகளவு ட்வீட்கள் பதியப்பட்டு வருகின்றன.

ஆனால், மத்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, உலகநாடுகளின் போர் விவகாரங்களில் இதுவரை தலையிட்டது கிடையாது. எந்த நாடுகளுக்கும் ஆதரவு அளித்ததும் கிடையாது. மற்ற நாடுகளின் உணர்வுகளில் தலையிடக் கூடாது என்ற எண்ணமே அதற்குக் காரணம்.

` இஸ்ரேல் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்!' -மோடி அரசை முன்வைத்து நடக்கும் ட்விட்டர் அரசியல்

ஆனால், இதுபோன்ற நேரங்களில் அமெரிக்கா வரிந்துகட்டிச் செல்லும். இஸ்ரேல் பிரச்னையில்கூட அந்நாட்டுக்கே ஆதரவு தெரிவித்துவருகிறது அமெரிக்கா. ஜெருசலேமை, இஸ்ரேல் தலைநகராக அறிவித்ததும் அமெரிக்காதான்.

சமீபகாலமாக அமெரிக்காவுடன் அதிக நெருக்கம் காட்டிவரும் பிரதமர் மோடி அந்த நாட்டுக்கு அடுத்தபடியாக, இஸ்ரேலுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். குறிப்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் மோடி காட்டிய நெருக்கம் இருவரும் மற்ற நாடுகளுக்கு விசிட் அடிக்கும்போது அளிக்கப்பட்ட வரவேற்பு, இருநாடுகளும் எதிர்கொள்ளும் ஒரே தீவிரவாதப் பிரச்னை என பல்வேறு முக்கிய விஷயங்களில் நட்பு பாராட்டி வருகிறது. இதனால் மத்திய அரசு இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்குமா என்பதுதான் ஆகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

இஸ்ரேல் - ஜோர்டான் பள்ளத்தாக்கு இணைப்பு திட்டம்! - பதறவைக்கும் நெதன்யாஹு