Published:Updated:

புதிய ஆயுதத்துடன் தயாரான இஸ்ரேல்!

இஸ்ரேல்
பிரீமியம் ஸ்டோரி
இஸ்ரேல்

இஸ்ரேலைக் குறிவைத்துத் தாக்க வரும் ராக்கெட்டுகளைக் கண்டுபிடிப்பதற்காக அதிநவீன ரேடார் அயர்ன் டோமில் உண்டு.

புதிய ஆயுதத்துடன் தயாரான இஸ்ரேல்!

இஸ்ரேலைக் குறிவைத்துத் தாக்க வரும் ராக்கெட்டுகளைக் கண்டுபிடிப்பதற்காக அதிநவீன ரேடார் அயர்ன் டோமில் உண்டு.

Published:Updated:
இஸ்ரேல்
பிரீமியம் ஸ்டோரி
இஸ்ரேல்

இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகளைப் போர் மேகம் சூழ்ந்திருக்கிறது. இரு நாடுகளுக்கிடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டே இருக்கிறது. இதில் இஸ்ரேலின் போர்த் தொழில்நுட்பம் ஒன்று உலக கவனத்தைப் பெற்றுவருகிறது. இதை 'அயர்ன் டோம்'(Iron Dome) என்று அழைக்கிறது இஸ்ரேல்.

தற்போது நடந்துகொண்டிருக்கும் போரில் தினமும் இஸ்ரேலை நோக்கி பல நூறு ராக்கெட்டுகள்/ஏவுகணைகள் இஸ்ரேலின் மக்கள் தொகை அதிகம் இருக்கும் நகரங்களை நோக்கி ஏவப்படுகின்றன. ஆனால், இதில் இஸ்ரேல் பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவது வெகுசிலதான். காஸாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள்/ஏவுகணைகள் அனைத்தையும் வானிலேயே துவம்சம் செய்துவிடுகிறது `அயர்ன் டோம்' அமைப்பு.

இஸ்ரேலைக் குறிவைத்துத் தாக்க வரும் ராக்கெட்டுகளைக் கண்டுபிடிப்பதற்காக அதிநவீன ரேடார் அயர்ன் டோமில் உண்டு. வரும் ராக்கெட்டுகளை ரேடார்கள் கண்டறிந்ததும் அதை அழிக்க இரண்டு இடைமறிப்பு ஏவுகணைகளை ஏவும் இந்த அமைப்பு. இது மட்டுமல்ல, வரும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளில் எது மக்கள் வாழும் பகுதிகளைத் தாக்க வருகிறது என்பதைப் பிரித்தறிந்து அதை மட்டும் தாக்கும் திறன் அயர்ன் டோமுக்கு உண்டு. தேவையில்லாமல் ஏவுகணைகள் வீணாவதை இது குறைக்கும். இரவு, பகல் என எந்த நேரத்திலும்; எந்த இடத்திலும்; எந்த வானிலையிலும் இது இயங்கவல்லது. பெயருக்கு ஏற்றாற்போல் கண்ணுக்குத் தெரியாத ஒரு இரும்புக்கேடயத்தை இது உருவாக்குகிறது. இந்தப் போரில் பேரளவு உயிர்ச்சேதங்களைத் தவிர்த்திருக்கிறது அயர்ன் டோம். நம்மூர் தீபாவளி வானம் போல வானில் ராக்கெட்டுகளை இடைமறித்து அவற்றை அயர்ன் டோம் அழிக்கும் காட்சிகள் இன்று இஸ்ரேலில் சர்வ சாதாரண ஒன்றாகவே மாறிவிட்டன.

புதிய ஆயுதத்துடன் தயாரான இஸ்ரேல்!


அதற்காகக் குறைகளே இல்லை என்றில்லை. இன்னும் 90%தான் ராக்கெட்டுகளைத் தடுக்கிறது அயர்ன் டோம். இன்னும் பலம்பொருந்திய நாட்டின் தாக்குதல்களை சமாளிக்குமா என்பது கேள்விக்குறிதான் என்கிறார்கள்.

இந்த அதிநவீனப் போர் இயந்திரம் அவ்வளவு எளிதில் தயாராகிவிடவில்லை. இந்த ரக தளவாடத்தை மேம்படுத்த இஸ்ரேலுக்குப் பல ஆண்டுகள் தேவைப்பட்டன. 2006-ல் தெற்கு லெபனானில் செயல்படும் ஹெஸ்புல்லா என்கிற அமைப்புடன் இஸ்ரேலுக்கு மோதல் ஏற்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக ஏவியது அந்த அமைப்பு. இதனால் பெருஞ்சேதத்தைச் சந்தித்தது இஸ்ரேல். தாக்குதலில் மக்கள் பலரும் பலியாகினர். இதன் விளைவாக ராக்கெட்டுகளிலிருந்தும், ஏவு கணை களிலிருந்தும் தற்காத்துக்கொள்ள அதிநவீனப் பாதுகாப்பு அரண் ஒன்று அமைக்கப்படும் என்றது இஸ்ரேல். அதன்பின் இஸ்ரேலின் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து தயார்செய்ததுதான் இந்த அயர்ன் டோம். இந்தத் திட்டத்திற்காக அமெரிக்காவிடமிருந்து 200 மில்லியன் டாலர் நிதியைப் பெற்றது. பல வித ஆராய்ச்சிகளும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு 2011-ல் செயல்பாட்டுக்கு வந்தது முதல் அயர்ன் டோம் அமைப்பு.

இப்படியான ஒரு பலம் பொருந்திய அமைப்பு தன்னிடம் இருக்கிறது என்பதால்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண மறுக்கிறது இஸ்ரேல் என்பதுதான் அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

வெறுமனே போர்த் தொழில் நுட்பத்தைப் புகழ்வதால் எந்தப் பயனுமில்லை. போர் இல்லாத உலகம் தான் நாகரிகமான உலகம். அதுவும் உலகமே ஒரு பெருந்தொற்றைச் சந்தித்துத் துயரத்தில் மூழ்கியிருக்கும் வேளையில் எந்த வடிவிலான போரும், என்ன புதிய தொழில்நுட்ப ஆயுதமும் மானுடத்தின் அவமானச் சின்னமே.