Published:Updated:

`எங்கள் கலீஃப் மரணத்துக்கு இது பதிலடி!'- மேற்கு ஆப்பிரிக்கா, கிறிஸ்தவர்களை மிரட்டும் `ISWAP' யார்?

ISWAP
ISWAP ( mailone )

11 பேரை கொடூரமாகக் கொன்ற `ISWAP'!

பிணைக் கைதிகளை கழுத்தறுத்துக் கொல்லுதல், சிரியாவில் சட்டத்தை மீறுபவர்களுக்கு மன்னிப்பில்லாத மரண தண்டனை, பெண்களுக்கு பாலியல் சித்ரவதை மற்றும் அதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவவிடுவது என உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருந்தவர், ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி.

இவர், கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டார். மோப்ப நாய் உதவியுடன் அவர் தங்கியிருந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்தபோது, தற்கொலைப்படை குண்டை வெடிக்க வைத்து பக்தாதி கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட ஐ.எஸ் தலைவர் பக்தாதி
கொல்லப்பட்ட ஐ.எஸ் தலைவர் பக்தாதி
twitter

இவர் இறப்புக்குப் பின், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸின் செயல்பாடுகள் அவ்வளவு வீரியமாக இல்லை. ஆனால், பக்தாதி இறப்புக்குப் பழி தீர்க்கப்படும் என்று ஐ.எஸ் அமைப்பு பகிரங்கமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், பக்தாதி உயிரிழப்புக்கு பழி தீர்க்கும் விதமாக, 11 கிறிஸ்தவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

அதுவும், கிறிஸ்துமஸ் மறுநாளில் அவர்கள் கொல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நைஜீரியாவில், இந்தக் கொடூர சம்பவத்தைச் செய்துள்ளனர் தீவிரவாதிகள்.

குகையில் துரத்திய மோப்ப நாய்; கண்ணீர்விட்டு கதறல்; சிதறிய குண்டுகள்!- பக்தாதியின் கடைசி நிமிடங்கள்

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ், ``எங்களுக்கு முன் நீங்கள் காண்பவர்கள், கிறிஸ்தவர்கள். முஸ்லிம்களின் கலீஃப் அபுபக்கர் அல்-பாக்தாதி மற்றும் ஐ.எஸ் அரசின் செய்தித் தொடர்பாளர் அபுல்-ஹசன் அல் முஹாஜிர் ஆகிய இரு கண்ணியமான எங்கள் தலைவர்களைக் கொன்றதற்குப் பழிவாங்குவதற்காக நாங்கள் இவர்களைக் கொன்றோம். பழிவாங்குவதற்காக நாங்கள் அவர்களின் ரத்தத்தைச் சிந்துவோம்" என்று கூறியுள்ளனர்.

பிணைக் கைதிகளாக 13 பேர்
பிணைக் கைதிகளாக 13 பேர்
mailone

அந்த வீடியோவில், 13 பேர் பிணைக் கைதிகளாக இருந்தாலும் முதலில் ஒருவரை தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்ல, மற்ற 10 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். 13 பேரில் 3 பேர் இஸ்லாமியர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. 56 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில், முகமூடி அணிந்த தீவிரவாதி ஒருவன், "இது உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களுக்கு ஒரு செய்தி. அல்-பாக்தாதி மற்றும் அல் முஹாஜிர் மரணத்திற்கு இது பதிலடி ஆகும்'' என்று கூறுகிறான். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு நேரடியாக இந்தக் கொலைகளைச் செய்யவில்லை. மாறாக, ISWAP என்னும் அமைப்பு, இந்த மனிதாபிமானற்ற செயலைச் செய்துள்ளது.

3 ஆண்டு தேடுதல்.. ஒருவழிப்பாதை குகை.. ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்டது எப்படி?

யார் இந்த ISWAP?

மேற்கு ஆப்பிரிக்காவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் இணை இயக்கமாக போகோ ஹராம் என்ற நைஜீரிய ஆயுதக் குழு நீண்ட காலமாகச் செயல்பட்டுவருகிறது. மேற்கு ஆப்பிரிக்காவான நைஜீரியாவில், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஒரு தனி நாட்டை அமைக்க வேண்டும் என இந்தக் குழு பல ஆண்டுகளாக முயற்சித்துவருகிறது.

இதற்காக, தீவிரமாகப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. இந்தக் குழுவிலிருந்து தனியாகப் பிரிந்ததுதான் ISWAP என சுருக்கமாக அழைக்கப்படும் Islamic State West Africa Province.

ISWAP
ISWAP
twitter

போகோ ஹராம் குழு, இஸ்லாமியர்களுக்கும் கொடுமையான தண்டனைகளைக் கொடுத்துவந்ததால், அந்த இயக்கத்திலிருந்து பிரிந்து, ISWAP குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு, சமீபகாலமாக மேற்கு ஆப்பிரிக்காவை அச்சுறுத்தும் வகையில் வளர்ந்துவருகிறது. தொடர்ந்து, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கிறிஸ்துவர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் மீதான தாக்குதல்களை சமீபகாலமாக தீவிரப்படுத்தியுள்ளது என்கின்றன அந்நாட்டு ஊடகங்கள்.

வேட்டையாடப்பட்ட பாக்தாதி...     ‘லைவ்’வில் ரசித்த ட்ரம்ப்!

நெடுஞ்சாலைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து, அந்த வழியாக வருபவர்களை பிணைக் கைதிகளாக கடத்திச்செல்வது, அவர்களை வைத்து தங்கள் குழுவைச் சேர்ந்தவர்களை விடுவிக்கக் கோரி பேரம் பேசுவது, கொலை செய்வது, ராணுவக் கிடங்குக்குள் அதிரடியாக நுழைந்து ஆயுதங்களைக் கைப்பற்றுவது என இந்தக் குழு செய்யும் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ISWAP
ISWAP
twitter

கடந்த ஞாயிறு அன்று, போர்னோ மாநில தலைநகர் மைடுகுரி அருகே உள்ள நெடுஞ்சாலையில் வாகனங்களைத் தடுத்து நிறுத்தியபோது, 6 பேரைக் கொன்றதுடன் 5 பேரைக் கடத்திச் சென்றுள்ளனர். மேலும், தற்போது 11 பேரைக் கொன்றதுபோல் சில மாதங்களுக்கு முன்புதான் நான்கு பேரை இதேமுறையில் கொலை செய்தனர். இந்தக் குழுவில் 3,500 முதல் 5,000 பேர் வரை போராளிகளாக இருக்கிறார்கள் என்று சர்வேதேச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஐ.எஸ். அமைப்பின் அல் பக்தாதி காலூன்றிய மொசூல் நகரம் இன்று எப்படி இருக்கிறது தெரியுமா?
அடுத்த கட்டுரைக்கு