இத்தாலியில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பெயருக்குப் பின் தந்தையின் குடும்பப் பெயரை மட்டுமே சேர்த்துக்கொள்ளும் பாரம்பர்யத்தை நீக்கியுள்ள அரசியலமைப்பு நீதிமன்றம், பெற்றோர் இருவரின் குடும்பப் பெயர்களை குழந்தை பெயருக்குப் பின் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இத்தாலிய உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கின் முடிவில், இத்தாலியில் பிறக்கும் குழந்தைகளுடைய பெயருக்குப் பின் தந்தையின் குடும்ப பெயரை மட்டும் சேர்த்துக்கொள்வது பாலின பாகுபாட்டை காட்டுவதுடன், அரசியலமைப்புக்குப் புறம்பாகவும் உள்ளதாகக் கூறியுள்ளதுடன், பெற்றோர் இருவரின் குடும்பப் பெயரையும் குழந்தையின் பெயருடன் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
மேலும், சில சூழ்நிலைகளைத் தவிர, இத்தாலியக் குடும்பங்களால் தங்கள் குழந்தைகளுக்கு தாயின் குடும்பப் பெயரை குழந்தைகளின் பெயருடன் இணைத்துக் கொடுக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது இத்தாலியின் அரசியலமைப்பு நீதிமன்றம். அத்துடன் தீர்ப்பின் மீதான அறிக்கையை, சமத்துவம் மற்றும் குழந்தைகள் நலனுக்கான கொள்கைகளை மேற்கோள் காட்டிக் கூறியதுடன், பெற்றோர்கள் குடும்பப் பெயர்களின் வரிசையைத் தேர்வு செய்யலாம் அல்லது ஒன்றை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்தது. ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்துக்கான அடிப்படையான குடும்பப் பெயரின் தேர்வை பெற்றோர் இருவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது.

ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் போன்ற, பெற்றோர் இருவரின் குடும்பப் பெயர்களையும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், தாயின் குடும்பப் பெயரை அங்கீகரிப்பதில் இத்தாலி செயல்பாட்டுக் குறைவுடன் உள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள மக்கள், இது குறித்து சமூக வலைதளங்களில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
இந்தத் தீர்ப்பு, பார்லிமென்ட் ஒப்புதல் கொடுத்த பின் சட்டமாக நடைமுறைக்கு வரும். இது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ள இத்தாலியின் குடும்பநல அமைச்சரான எலினா பொன்னாட்டி, `ஒரு குழந்தையை வளர்ப்பதில் பெற்றோர்கள் சமமான பொறுப்பை ஏற்க வேண்டும். இந்த தீர்ப்பு ஏற்கப்படுவதும், உடனடியாக செய்து முடிக்க வேண்டிய ஒரு பணியாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.