Published:Updated:

36 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை!- இந்திய விமானத்துக்கு உற்சாக வரவேற்பு

இலங்கை, யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமானநிலையத்தை அதிபர் சிறிசேனா இன்று திறந்துவைத்தார்.

யாழ்ப்பாணம் விமானநிலையம்
யாழ்ப்பாணம் விமானநிலையம் ( Twitter/ @IndiainSL )

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் என்றால் இங்கிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்று சாலை அல்லது ரயில் மூலம் மட்டுமே யாழ்ப்பாணத்தை அடைய முடியும். யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது அந்நாட்டு அரசின் நீண்ட கால திட்டமாக இருந்து வருகிறது.

யாழ்ப்பாணம் விமானநிலையம்
யாழ்ப்பாணம் விமானநிலையம்
Twitter/ @IndiainSL

1940-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியா மற்றும் இலங்கையை ஆட்சி செய்த போது இரண்டாம் உலகப்போரில் தங்கள் தேவைக்காக யாழ்ப்பாணம், பலாலியில் சிறிய விமான தளம் அமைத்திருந்தனர். பின்னர் இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு அந்நாட்டு ராணுவக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது யாழ்ப்பாணம் விமானத் தளம்.

ராணுவ விமானங்கள், பயணிகள் விமானங்கள் போன்றவை அங்கு இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து கடந்த 1983-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரினால் தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் விமான சேவை துண்டிக்கப்பட்டது. பின்னர் 2009-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பிறகு, இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழ்ப்பாணம் விமான தளத்தைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

விமானநிலையம் திறப்பு விழா
விமானநிலையம் திறப்பு விழா
Twitter/ @IndiainSL

இதற்கிடையில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மற்றும் அதிபர்கள் மாற்றங்களினால் சீரமைப்புப் பணிகளில் கவனம் செலுத்தமுடியாமல் தடைப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் யாழ்ப்பாணம் விமான தளத்தைச் சீரமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டினார் அந்நாட்டின் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கா.

Vikatan

கடந்த சில மாதங்களாக இரவு பகலாக நடைபெற்ற பணிகள் நிறைவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது. யாழ்ப்பாணம் பலாலி விமான தளமாக இருந்தது தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையமாகப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மைத்திரிய பால சிறிசேனா இன்று யாழ்ப்பாணம் விமான நிலையத்தைத் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கா போன்ற பலரும் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணம் நகரிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த விமானநிலையம். இங்கு சுமார் 2.3 கி.மீ தூரத்துக்கு ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 3-வது சர்வதேச விமானநிலையமாக இது அமைந்துள்ளது. சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று யாழ்ப்பாணத்தில் விமான சேவை தொடங்கியது. முதல் விமானம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இயக்கப்பட்டது.