Published:Updated:

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே... படுகொலை செய்யப்பட்டது எப்படி?

ஷின்சோ அபே
பிரீமியம் ஸ்டோரி
ஷின்சோ அபே

ஷின்சோவைச் சுட்ட அந்த மர்ம நபரின் பெயர் டெட்சுயா யமகாமி என்றும், அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயலவில்லை என்றும் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே... படுகொலை செய்யப்பட்டது எப்படி?

ஷின்சோவைச் சுட்ட அந்த மர்ம நபரின் பெயர் டெட்சுயா யமகாமி என்றும், அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயலவில்லை என்றும் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஷின்சோ அபே
பிரீமியம் ஸ்டோரி
ஷின்சோ அபே

ஜப்பானின் முன்னாள் பிரதமரும், உலக அரங்கில் அந்த நாட்டின் முகமாக விளங்கியவருமான ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். பிரசாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, ஷின்சோவின் பின்புறத்திலிருந்து வந்த இரண்டு துப்பாக்கி குண்டுகள் அவரது உயிரைப் பறித்துவிட்டன. ஷின்சோ ஏன், எப்படிக் கொலை செய்யப்பட்டார்..?

படுகொலை எப்படி நடந்தது?

ஜப்பானின் ஆளுங்கட்சியான லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியைச் சேர்ந்த ஷின்சோ அபே, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 8) அன்று, ஜப்பானின் நாரா நகரில், நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். காலை 11:30 மணி அளவில், தன் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தவரை, அவரின் பின்புறத்திலிருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அந்த மர்ம நபரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய இரண்டு குண்டுகள், ஷின்சோவின் கழுத்தையும், இடதுபுற மார்பையும் பதம் பார்த்தன. குண்டுச் சத்தம் கேட்டதும் ஷின்சோவின் அருகிலிருந்தவர்கள் சிதறி ஓடினர். பதறிப்போன பாதுகாவலர்கள் அவருக்கு அருகில் சென்றனர். அதற்குள்ளாக நெஞ்சில் கைவைத்துக் கொண்டு தரையில் சுருண்டு விழுந்தார் ஷின்சோ. அவரது வெள்ளை நிறச் சட்டை முழுவதும் ரத்தக்கறையால் சிவப்பானது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே... படுகொலை செய்யப்பட்டது எப்படி?

இதற்கிடையில், ஷின்சோவைத் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரைப் பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தனர். உடனடியாக அவரைக் கைதுசெய்தது ஜப்பான் காவல்துறை. அதற்குள்ளாகச் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவக்குழு, ஷின்சோவை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு விரைந்தது. அங்கிருந்து ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஷின்சோ. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இதயப் பகுதியில் குண்டு ஆழமாகப் பாய்ந்திருந்ததால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 67 வயது ஷின்சோ அபேவின் உடல், டோக்கியோவிலுள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஜூலை 12 அன்று அவரது உடல் சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கொன்றவர் யார்?

ஷின்சோவைச் சுட்ட அந்த மர்ம நபரின் பெயர் டெட்சுயா யமகாமி என்றும், அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயலவில்லை என்றும் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. 41 வயதுடைய யமகாமி, மேற்கு ஜப்பானிலுள்ள நாரா பகுதியைச் சேர்ந்தவர். 2002 முதல் 2005-ம் ஆண்டு வரை, கடல்சார் தற்காப்புப்படையில் பணியாற்றியிருக்கிறார்.

`பிரசாரத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு வீடியோக்களை ஆராய்ந்ததில், நடைபாதையில் நிற்கும் யமகாமி, அருகிலிருப்பவர்களை நோட்டம் விடுகிறார். பின்னர், தனது பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து ஷின்சோவைச் சுடுகிறார். அந்தத் துப்பாக்கியிலிருந்து குண்டுகள் வெளியேறியபோது வந்த சத்தம், வெடிகுண்டு சத்தத்தை ஒத்திருந்தது. குண்டுகள் வெளியேறியதும் துப்பாக்கியிலிருந்து வந்த வெள்ளைப்புகை அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தது’ என்று குறிப்பிட்டிருக்கின்றன ஜப்பான் ஊடகம். மேலும், இந்த விவகாரத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறது ஜப்பான் காவல்துறை. பாதுகாப்புக் குளறுபடிகள் குறித்து, தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அரசு தெரிவித்திருக்கிறது.

``யமகாமி, குற்றத்தை ஒப்புக்கொண்டார். கேட்கும் கேள்விகளுக்கு அமைதியாக பதில் சொல்கிறார். வீட்டில் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கியைக் கொண்டுதான் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. யமகாமியின் வீட்டிலிருந்து வெடிமருந்துகளும் கம்ப்யூட்டரும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன’’ என்று ஜப்பான் காவல்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், ஷின்சோவைக் கொலை செய்வதற்கு முன்பாக யமகாமி, மத அமைப்பைச் சேர்ந்த தலைவர் ஒருவரைக் கொலை செய்ய முயன்றதாகவும் செய்திகள் வெளியாகின. அந்த மத அமைப்பை ஷின்சோ ஆதரிப்பதாக வந்த வதந்திகளை நம்பித்தான், அவரை யமகாமி சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து சொல்லப்படுவதாக ஜப்பான் ஊடகம் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த மத அமைப்பின் பெயரோ, அமைப்பின் தலைவர் பெயரோ வெளியாகவில்லை.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே... படுகொலை செய்யப்பட்டது எப்படி?

ஜப்பானில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரிதாக நடைபெறுபவை. ஆயுதங்கள் மீதான கடுமையான சட்டங்களால், அங்கு மக்களிடம் ஆயுதப் புழக்கம் கிடையாது. ஒருவர் வேட்டையாடுவதற்குத் துப்பாக்கி பெறுவதே அங்கு கடினம். அப்படியிருக்கையில், பாதுகாப்புப் படையில் பணியாற்றிய ஒருவர், வீட்டிலேயே துப்பாக்கி செய்து முன்னாள் பிரதமரையே சுட்டுக் கொன்றிருப்பது ஜப்பானில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாதுகாப்பு மிகுந்த நாடான ஜப்பானில், அதுவும் பட்டப்பகலில் ஒரு முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டிருப்பது உலக நாடுகளிடத்தில் பதற்றத்தை மட்டுமல்ல, அச்சத்தையும் உண்டாக்கியிருக்கிறது.

அடிக்கடி இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறாததாலோ என்னவோ, மிகவும் அலட்சியமாக இருந்துவிட்டது ஜப்பான் காவல்துறை. பாதுகாப்பு விவகாரங்களில், ஷின்சோவின் படுகொலை ஜப்பானுக்கு மட்டுமல்ல, அனைத்து உலக நாடுகளுக்குமே பாடமாக அமையும்!

****

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே... படுகொலை செய்யப்பட்டது எப்படி?

அக்னிபத்தும் ஷின்சோ படுகொலையும்!

ஷின்சோவின் படுகொலைக்கு திரிணாமுல் காங்கிரஸின் அதிகாரபூர்வ நாளேடான `ஜகோ பங்ளா’வில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது. அதில், `ஷின்சோவைப் படுகொலை செய்தவர் ஜப்பான் கடற்படையில் குறுகியகால சேவையில் பணியாற்றியவர். பணிக்குப் பிறகு ஓய்வூதியம் பெறாதவர். அக்னிபத் திட்டத்தில் இணையும் வீரர்களுக்கும் நான்காண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் கிடையாது. ஜப்பானில் என்ன நடந்தது என்பதைப் பார்த்துவிட்டோம். அக்னிபத் திட்டம் மூலம் நெருப்புடன் விளையாடுகிறது பா.ஜ.க’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தச் செய்திக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன!

ஷின்சோ அபே!

பாரம்பர்ய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஷின்சோ அபே, 2006 முதல் 2007 வரை பிரதமராக இருந்தார். தீவிர குடல்நோய் பாதிப்புகளால் அப்போது பதவியை ராஜினாமா செய்தார். 2011-ல் சுனாமியால் மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்தித்தது ஜப்பான். சிறந்த பொருளாதாரக் கொள்கைகளை வைத்திருந்தவர் என்பதால், 2012-ல் மீண்டும் பிரதமரானார். 2012 முதல் 2020 வரை பிரதமராக இருந்தவர், மீண்டும் உடல்நலப் பிரச்னைகளால் பதவி விலகினார். ஜப்பான் ராணுவத்தை பலப்படுத்தியதில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. தீவிர வலதுசாரியான ஷின்சோ, ஜப்பானின் நீண்டகாலப் பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.