Published:Updated:

கொரோனா: `நோய் எதிர்ப்பு சக்தி; மாஸ்க் பயன்பாடு’ - வியக்கவைக்கும் ஜப்பான்

ஜப்பான்
ஜப்பான் ( AP )

ஜப்பான் அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இடையே இருந்த புரிதலே அங்கு கொரோனா பரவல் குறைவாக உள்ளதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

உலகை மிரளவைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் பிடியில் பல நாடுகளும் சிக்கி, அதிலிருந்து மீள முடியாமல் தவித்துவருகின்றன. தற்போது, சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ளது. ஆனால், இந்தக் கடுமையான நேரத்தில் திறம்படச் செயல்பட்டு, பல நாட்டு அரசுகள் தங்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் காத்துள்ளன. கடுமையான கட்டுப்பாடுகள், துரித நடவடிக்கைகள், எல்லைகள் மூடல், மக்களுக்கான விழிப்புணர்வு என அனைத்தையும் முறையாக மேற்கொண்டு நியூஸிலாந்து, தென் கொரியா, வியட்நாம் போன்ற பல நாடுகள் கொரோனாவை கட்டுக்குள் வைத்துள்ளன.

ஜப்பான்
ஜப்பான்
AP

ஆனால், இதுபோன்ற எந்தக் கடுமையான கட்டுப்பாடுகளும் இல்லாமல், ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருப்பது, உலக நாடுகளையும் ஆராய்ச்சியாளர்களையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் அதிக கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில்தான் மிகவும் வேகமாகப் பரவும், வயதானவர்களைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் எனப் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. ஜப்பானைப் பொறுத்தவரையில் உலகிலேயே அதிக முதியவர்களைக் கொண்ட நாடு. அங்கு இருக்கும் பெரும் நகரங்களில், மக்கள்தொகை அதிகம். அப்படி இருக்கும்போது, உலகில் வைரஸ் பரவத்தொடங்கி 5 மாதங்கள் கடந்த நிலையிலும் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000-த்தை தாண்டவில்லை. அதேபோல், வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 1000-த்தைக் கடக்கவில்லை என்பதுதான் பலரின் ஆச்சரியத்துக்கான காரணம்.

ஜப்பானின் நடவடிக்கைகள்!

ஜனவரி மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உறுதியானதும், அனைத்து நாடுகளும் சீனாவுடனான எல்லையை மூடி, அங்கிருந்து வருபவர்களுக்குத் தடை விதித்தன. ஆனால், ஜப்பான் மட்டும் சீனாவின் எல்லையை மூடவில்லை. அதேபோல், மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்து, அனைத்து நாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகள், ஊரடங்கு, சமூக இடைவெளி எனப் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருந்த வேளையில், ஜப்பானில் மக்கள் மாஸ்க்கூட அணியாமல் இயல்பு வாழ்க்கையிலிருந்தனர்.

ஜப்பான்
ஜப்பான்
AP

ஏப்ரல் மாதம் தொடக்கத்தில்தான், அங்கு நாடு தழுவிய அவசர நிலை அறிவிக்கப்பட்டது, அப்போதும், மக்கள் தன்னார்வமாக வீட்டில் இருக்கலாம் என்றும் அத்தியாவசியமற்ற கடைகள் மட்டுமே மூடினால் போதும் எனக் கூறியது அந்நாட்டு அரசு. மேலும், அரசின் உத்தரவை மீறி கடை திறந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நியூஸிலாந்து போன்ற பல நாடுகள் எல்லைகளைப் பூட்டி, கொரோனா சோதனைகளை அதிகரித்து, ஊரடங்கை கடுமையாகக் கடைப்பிடித்தது , ஆனால், இது எதுவுமே இல்லாமல் மிகவும் இயல்பாகவே இருந்தது ஜப்பான். அங்கு, இதுவரையில் வெறும் 3,48,000 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் 0.27% பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் பற்றிய ஆராய்ச்சியாளர் விளக்கம்:

ஜப்பானில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைவாக உள்ளதற்கு, அந்நாடு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியே காரணம் என டோக்கியோ பல்கலைகழகத்தின் பேராசிரியர் தட்சுஹிகோ கோடாமா (Tatsuhiko Kodama) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபிசி-யிடம் விளக்கமளித்துள்ள அவர், ‘ஒரு வைரஸ் மனிதனின் உடலுக்குள் நுழையும்போது அதை எதிர்க்கும் எதிர்ப்பு சக்திகள் தானாக மனித உடலில் உருவாகின்றன. கொரோனா பரவலுக்குப் பிறகு, பல ஜப்பான் மக்களிடம் நடந்த சோதனை எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஜப்பான் மக்களுக்கு ஏற்கெனவே கோவிட் தாக்குதல் இருந்தது தெரியவந்தது. கோவிட் - 19 இல்லை, வேறுவகையான கோவிட். அதனால்தான், கோவிட் -19 வைரஸை எதிர்க்கும் சக்திகள் ஜப்பான் மக்களிடம் இருந்துள்ளன.

ஜப்பான் கொரோனா
ஜப்பான் கொரோனா
AP

கொரோனாவுக்கு மிக நெருக்கமான சார்ஸ் போன்ற ஒரு வைரஸ் ஏற்கெனவே ஜப்பானில் பரவியிருக்க வேண்டும். அதுதான் உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைத்துள்ளது. ஜப்பான் மட்டும் இல்லாமல் சீனா, தென் கொரியா, தைவான், ஹாங்காங், தென் கிழக்கு ஆசிய போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியிருந்துள்ளது. அதனால்தான் அங்கும் உயிரிழப்புகள் குறைவாக உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்!- ஜப்பான் முதலிடம்; இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா?

இவரின் கருத்தை ஆதரித்துள்ள லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பொதுச் சுகாதார இயக்குநரும், அரசாங்கத்தின் முன்னாள் மூத்த ஆலோசகருமான பேராசிரியர் கென்ஜி ஷிபூயா, ‘ஜப்பான் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான கருத்துகளை மறுக்கவில்லை. ஆனால், இறப்புகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. இருந்தும், ஜப்பான் மக்களின் மற்றொரு செயல்முறை இறப்பு விகிதத்தைக் குறைத்திருக்கலாம். 1919-ம் ஆண்டு ஃபுளூ பரவியதிலிருந்து மாஸ்க் அணிவதை அத்தியாவசியமான ஒன்றாகக் கடைப்பிடித்துவருகின்றனர் ஜப்பான் மக்கள். மாஸ்க் அணிவதை அவர்கள் தற்போது வரை நிறுத்தவில்லை. ஜப்பான் மக்களுக்கு சளி, இருமல் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மாஸ்க் அணிந்துகொள்வார்கள். அந்நாட்டு மக்களின் மாஸ்க் பழக்கம்தான் கொரோனா பரவலையும் உயிரிழப்பையும் தடுத்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

ஜப்பான்
ஜப்பான்
AP

இவை அனைத்தையும் தாண்டி, கொரோனா தொடர்பான ஜப்பான் அரசின் தெளிவான விழிப்புணர்வு, மக்களிடம் இருந்த பயத்தைப் போக்கி சமூக இடைவெளி, கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பது ஆகியவற்றுக்கு வழி வகுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கு இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களில் 80% பேர் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை, 20% பேரினரால் மட்டுமே நோய் பரவல் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் முன்னதாகப் பரவிய வைரஸால் அந்நாட்டின் பொதுச்சுகாதாரத் துறை விரிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் பரவலின் பாதையை எளிதாகக் கண்டுபிடித்து, மேலும் பரவலைத் தடுக்க உதவியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

`பெரிய தவறு...ஓராண்டு ஏமாற்றம்... வேலைக்குப் போகும் மக்கள்!’ - ஜப்பான் நிலவரம் சொல்லும் தமிழ்ப் பெண்

அந்நாட்டு அரசுக்கும் மக்களுக்கும் இடையே இருந்த புரிதலே நோய் பரவல் குறைவாக உள்ளதற்கு மற்றொரு காரணமாகக் கூறபடுகிறது. ஜப்பான் அதிபர் சின் சோ அபே, நாடு தழுவிய அவசர நிலை அறிவித்தபோது, விருப்பப்பட்டவர்கள் வீட்டில் இருக்கலாம் எனக் கூறினார். ஆனால், அந்நாட்டு மக்கள் அனைவருமே அதைக் கடைப்பிடித்து வீட்டிலிருந்துள்ளனர். ஜப்பான் மக்களின் செயலும் அந்நாட்டில் வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதையும் பல ஆராய்ச்சியாளர்கள் வியந்து பாராட்டியுள்ளனர். தற்போது வரை ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,068 - ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 976- ஆகவும் உள்ளது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை காரணமாக, தற்போது அங்கு அவசரநிலை திரும்பப் பெறப்பட்டுள்ளது. மக்கள், தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர். இதை ஜப்பானின் அதிர்ஷ்டம் என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

News Credits : BBC

அடுத்த கட்டுரைக்கு