முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்த தற்கொலைகள்... தனி அமைச்சரே நியமனம்... என்ன நடக்கிறது ஜப்பானில்?

வாழ்க்கை எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது' என யோசிக்கும்போது ஒரு வெறுமை உணர்வு ஏற்படும். ஜப்பான் மாதிரியான தொழில்துறையில் வளர்ந்த நாட்டில் அந்த வெறுமை உணர்வு அதிகமாகவே ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
ஜப்பானில் கொரோனா காலத்தில் தற்கொலைகள் அதிகரித்ததையடுத்து, தனிமையில் தவிப்பவர்களுக்கென தனி அமைச்சரை (Minister for Loneliness) நியமித்துள்ளது ஜப்பான் அரசு.
பொதுவாகவே, தற்கொலைகள் அதிகம் நிகழும் நாடாக அறியப்படும் ஜப்பானில் கொரோனா காலத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் அங்கு நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களுக்கு இல்லாத அளவில் அதிகரித்திருந்தது. குறிப்பாக, கடந்த அக்டோபர் மாதம் மட்டும் அந்நாட்டில் 2,158 தற்கொலைகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதில் அதிகமானோர் இளைஞர்கள் என்பதும் அதிலும் பெண்கள் அதிக அளவில் இருந்ததும் அந்நாட்டு அரசை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

உலக நாடுகளே கொரோனாவை எதிர்த்துப் போரிடுவது குறித்துச் சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதுடன் நாட்டில் நிகழும் தற்கொலையை உடனடியாகத் தடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தமும் ஜப்பான் அரசுக்கு ஏற்பட்டது. இதையடுத்துதான், தனது அமைச்சரவையில் தனிமையில் தவிப்பவர்களுக்கான அமைச்சராக டெட்சுஷி சகமோட்டோவைச் சேர்த்துள்ளார் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா. 2018-ம் ஆண்டு இங்கிலாந்து அரசும் தனிமையில் வாடுவோருக்கான அமைச்சரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய புதிய அமைச்சர் (Minister for Loneliness) டெட்சுஷி சகமோட்டோ "மக்கள் சமூக தனிமைக்குள்ளாவதைத் தடுத்து உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடம் பேசினோம், "பொதுவாகவே, ஜப்பானில் தற்கொலைகள் அதிகமாக இருக்கும். காரணம், தற்கொலைகளை புனிதப்படுத்தும் சமூகமாக இருக்கிறது ஜப்பான். எதிரியிடம் தோற்றுவிட்டால் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ளும் சாமுராய்களை அங்குள்ள இளைஞர் இப்போதும் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்வதை ஒருவகை வீரமாகக் கருதுகின்றனர். இப்போதுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில், தனிமனிதனுக்கான நேரம் என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு வேலையை பிடித்துச் செய்வோம்.

அதில் அர்ப்பணிப்பும் ஆத்ம திருப்தியும் கிடைக்கும். ஆனால், இப்போது அப்படி இல்லை. இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், பிடிக்காத வேலையாக இருந்தாலும் அதைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிர்ப்பந்தத்தின் காரணமாகப் பிடிக்காத வேலையை ஒருவர் தொடர்ச்சியாகச் செய்தாக வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இப்படி ஓடிக்கொண்டிருக்கும் ஒருவர், 'நாம் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கை எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது' என யோசிக்கும்போது ஒரு வெறுமை உணர்வு ஏற்படும்.
ஜப்பான் மாதிரியான தொழில்துறையில் வளர்ந்த நாட்டில் அந்த வெறுமை உணர்வு அதிகமாகவே ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கூடவே ஜப்பான் தற்கொலையைப் புனிதப்படுத்தும் சமூகமாக இருப்பதால், அங்கு அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன. இப்படியான சூழலில் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை உளவியல் ரீதியாக உயர்த்துவது அவசியமாகிறது.

ஒரு நாட்டின் சுகாதாரத்துறைக்கு பல்வேறு வேலைகள் இருப்பதால் ஒருவரின் தனிமைக்குத் தீர்வு காண்பதில் தனிக் கவனம் செலுத்துவது சிரமான விஷயம். ஜப்பான் மாதிரியான தற்கொலைகள் அதிகம் நிகழும் நாடுகளில் இன்னும் கூடுதல் கவனம் தேவைப்படும். ஆகையால், தனிமனிதனின் தனிமைக்கு தீர்வுகாணும் வகையில் மனநல மருத்துவத்துக்குத் தனி துறையை ஜப்பான் உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம் தனி நிதி ஒதுக்கீடு கிடைக்கும் சுதந்திரமாகச் சில முன்னெடுப்புகளைச் செய்ய முடியும். ஜப்பான் அரசின் இந்த முடிவு பாராட்டத்தக்கது" என்றார்.