Published:Updated:

`நான் செய்திருக்கக் கூடாது!' - 18 வருடங்களுக்குப் பிறகு இனவெறிக்கு மன்னிப்பு கேட்ட ட்ரூடோ

18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தால்தான் அந்தச் சர்ச்சை வெடித்துள்ளது.

Justin Trudeau
Justin Trudeau ( twitter )

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2015-ல் வெற்றிபெற்று பிரதமராகப் பதவியேற்றவர். இப்போது, அடுத்த தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாகியுள்ளார். ஆம், ஆட்சிக்காலம் முடிவதற்கு சில மாதங்கள் முன்பே அமைச்சரவையைக் கலைத்தவர், இப்போது பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளார். இதற்கான பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்க உள்ளார். ஆனால், அதற்குள் ஒரு சர்ச்சையைச் சந்தித்துள்ளார் ட்ரூடோ. அதுவும் 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தால்தான் அந்தச் சர்ச்சை வெடித்துள்ளது.

Justin Trudeau
Justin Trudeau

பாரம்பர்யமிக்க அரசியல் குடும்பத்திலிருந்து வந்த ட்ரூடோ முன்னாள் டீச்சரும்கூட. திருமணத்துக்கு முன்னர் தனது 29-வது வயதில் ஆசிரியராகப் பணியாற்றியபோது `அரேபிய நைட்ஸ்' என்னும் நிகழ்ச்சி ஒன்றில் உடல் முழுவதும் கறுப்பு கலரைப் பூசிக்கொண்டு டர்பன் அணிந்துகொண்டு மாறுவேடத்தில் பங்கேற்றார். நான்கு பெண்களுடன் மாறுவேடம் அணிந்து ட்ரூடோ இருந்த புகைப்படத்தை சமீபத்தில் டைம்ஸ் இதழ் வெளியிட பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஆதரவற்றவர்களுக்குத் தாராளமாக இடம் கொடுக்கும் கருணைமிக்க நாடான கனடாவில் இன, மொழி போன்ற பேதங்களுக்கு இடமில்லை என்பது தெரிந்த விஷயம்.

Vikatan

இப்படி பன்முகக் கலாசாரம் கொண்ட நாட்டில் இருந்துகொண்டு நிற, இனவெறிகளைத் தூண்டும் வகையில் ட்ரூடோ பழைய புகைப்படத்தில் இருந்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்தன. தேர்தல் பிரசாரத்தை கலகலப்பாகத் தொடங்க நினைத்த ட்ரூடோவுக்கு இந்தச் சம்பவம் கறுப்புப் புள்ளியாக அமைந்துவிட, தற்போது தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது

தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``அந்த நேரத்தில் நான் அதை இனவெறி என்று கருதவில்லை. ஆனால், இப்போது அதைப் பற்றி நன்கு தெரிந்துள்ளேன். இந்தச் செயலுக்கு முழுப்பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்.

Justin Trudeau
Justin Trudeau
Vikatan

இத்தகைய செயலை நான் செய்திருக்கக் கூடாது. இதற்காக எனது ஆழ்மனதிலிருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறும் ட்ரூடோ 2001-ல் பள்ளியில் நடந்த டேலண்ட் ஷோவில் ஆப்பிரிக்கன் - அமெரிக்கன் பாடகராகத் தோன்றி நடித்துள்ளார். ட்ரூடோ விளக்கம் கொடுத்த பின்பும் இந்த விவகாரம் முடியவில்லை. தேர்தல் சமயம் என்பதால் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதாக்கி வருகின்றன.