Published:Updated:

அமெரிக்கா: `சர்வதேச கவனம்; பெண்கள், இளம் வாக்காளர்கள்!' - கமலா ஹாரிஸூக்கு குவியும் ஆதரவு

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்

``ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸூக்கு 46 சதவிகிதம் பேர் வாக்களிக்க இருப்பதாகவும் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸூக்கு 38 சதவிகிதம் பேர் வாக்களிக்க இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன"

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக அதிபர் டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயகக் கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடெனும் போட்டியிடுகின்றனர். அதேபோல துணை அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சியின் சார்பாக மைக் பென்ஸூம் ஜனநாயகக் கட்சியின் சார்பாக கமலா ஹாரிஸூம் போட்டியிடுகின்றனர். அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கான தேர்தல் பிரசாரங்கள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் உலக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறார். அவருக்கான அதரவும் அதிக அளவில் பெருகி வருவதாக கூறப்படுகிறது.

ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ்
ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸ்

ஜனநாயகக் கட்சியில் உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்களின் ஆதரவுடன் கமலா ஹாரிஸ் அக்கட்சியின் சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார். அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து மக்கள் பலரும் அவருக்கு அதிக ஆதரவை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பிடெனை விட அதிகளவில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸூக்கு ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அந்நாட்டில் உள்ள பெண்கள், இளம் வாக்காளர்கள் மற்றும் சில குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில்கூட அவர் மிகவும் பிரபலமாக இருப்பதாக ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சோஸ் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா:`ஹெச் 1-பி விசா நடைமுறைகளில் தளர்வு!' - ட்ரம்பின் தேர்தல் நகர்வு?

தேர்தல் தொடர்பாக ஆகஸ்ட் 11 மற்றும் 12-ல் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, மொத்தம் 60 சதவிகிதம் அமெரிக்கர்கள் கமலா ஹாரிஸ் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக தேர்ந்தெடுக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த 60 சதவிகிதம் பேரில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 87 சதவிகிதம் பேரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 37 சதவிகிதம் பேரும் அடங்குவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மிகப்பெரிய கட்சியின் சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிட ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தது அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதனால், ஜோ பிடெனைவிட தேர்தல் களத்தில் கமலா ஹாரிஸ் அதிக மக்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் ஜோ பிடெனுக்கும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்

ஜோ பிடென் மற்றும் கமலா ஹாரிஸூக்கு 46 சதவிகிதம் பேர் ஆதரவு அளிப்பதாகவும் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸூக்கு 38 சதவிகிதம் பேர் ஆதரவு அளிப்பதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேபோல, அதிபர் பதவிக்கு மட்டும் வாக்களிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் சுமார் 44 சதவிகிதம் பேர் ஜோ பிடெனுக்கும் 37 சதவிகிதம் பேர் ட்ரம்புக்கும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். கமலா ஹாரிஸ் தேர்தலில் நிற்பது தொடர்பாக மீண்டும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 56 சதவிகித அமெரிக்கர்கள் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். பெண்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் கமலா ஹாரிஸூக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

35 வயதுக்கும் குறைவாக உள்ள வாக்காளர்கள் கமலா ஹாரிஸூக்கு அதிக ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களில் சுமார் 62 சதவிகிதம் பேர் கமலா ஹாரிஸூக்கு ஆதரவாகவும் 60 சதவிகிதம் பேர் ஜோ பிடெனுக்கு ஆதரவாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கமலா ஹாரிஸூக்கு பெண்கள், இளம் வாக்காளர்கள் என ஆதரவு அதிகளவில் குவிந்து வரும் நிலையில் இந்த ஆதரவுகள் ஜோ பிடென் வெற்றிக்கும் அதிகம் உதவும் என அரசியல் ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். மறுபக்கம் குறைந்து வரும் ஆதரவை தன்வசம் இழுக்க அதிபர் ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். கொரோனா நடவடிக்கைகள், வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரா வீழ்ச்சி, இனரீதியிலான போராட்டங்கள் மற்றும் விசா பிரச்னைகள் ஆகியவற்றால் ட்ரம்புக்கு தேர்தல் களத்தில் கடுமையாக பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா: `ட்ரம்ப் மற்றும் கிம்மின் 25 கடிதங்கள்!' - புதிய தகவல்களுடன் வெளியாகும் புத்தகம்
அடுத்த கட்டுரைக்கு