Published:Updated:

`பசியில் துடித்த குழந்தைகள்; சமைப்பதுபோல் நடித்த தாய்’ -ஊரடங்கிலும் உதவிக்கரம் நீட்டிய கென்யர்கள்

பெனினா
பெனினா ( NTV kenya )

கென்யாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வேலையிழந்த தாய், தன் குழந்தைகளுக்கு உணவு தரமுடியாமல் சமைப்பது போல் நடித்து வந்துள்ளார்.

கென்யாவின் மொம்பாசா நகரில் உள்ள கிசௌனி பகுதியில் வசித்து வருகிறார் பெனினா பஹட்டி கிட்சோ (Peninah Bahati Kitsao) என்ற பெண். 8 குழந்தைகளுடன் வாழும் இவரின் கணவர் உயிரிழந்துவிட்டார். துணி சலவை செய்யும் வேலை செய்து தன் குழந்தைகளைக் காப்பாற்றி வந்துள்ளார் பெனினா. இதற்கிடையில், கென்யாவிலும் கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெனினாவுக்கு தினசரி கிடைக்கும் கூலியும், வேலையும் இல்லாமல் போயுள்ளது.

கென்யா
கென்யா
AP

இதனால் தன் 8 குழந்தைகளுக்கும் உணவு வழங்க முடியாமல் அந்நாளில் தன் கையில் கிடைக்கும் உணவை மட்டும் ஒருவேளைக்குக் கொடுத்து வந்துள்ளார். பசிக்கிறது என குழந்தைகள் உணவு கேட்கும்போதெல்லாம் சமையல் செய்வதாக சமையல் அறைக்குச் சென்று வெறும் தண்ணீரை அடுப்பில் வைத்து காய்ச்சி அதில் கற்களைப் போட்டு சமையல் செய்வது போல நடித்து வந்துள்ளார். அம்மா சமையல் செய்து கொண்டு வருவார் எனக் காத்திருந்து காத்திருந்து அனைத்து குழந்தைகளும் சோர்வில் உறங்கிவிடுவார்களாம். அவர்கள் தூங்கும் வரை சமையல் செய்வதைப் போல நடித்துள்ளார் பெனினா.

``குழந்தை பசியில அழுவுது; பிஸ்கட் மட்டும்தான் சாப்பாடே!” - தவிக்கும் இருளர் மக்களின் நிலை

இவரின் நிலையறிந்த, அண்டை வீட்டில் இருப்பவரான ப்ரிஸ்கா மொமணி என்பவர் விஷயத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டதோடு ஊடகத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் பெனினாவின் நிலையை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது என்.டி.வி கென்யா என்ற தொலைக்காட்சி. இதற்குப் பிறகு பெனினாவின் குடும்பநிலை கென்யா உட்பட பிற நாடுகளுக்கும் தெரியவந்துள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் தொடங்கி பெயர் அடையாளம் தெரியாத பலரும் அவருக்கும் குழந்தைகளுக்கும் பணம் மற்றும் பொருள்களைக் கொடுத்து உதவி வருகின்றனர்.

கென்யா பெனினா
கென்யா பெனினா
NTV Kenya

மேலும் ப்ரிஸ்கா, பெனினாவுக்கு ஒரு வங்கிக் கணக்கையும் தொடங்கிக் கொடுத்துள்ளார், தற்போது அதில் குழந்தைகளின் உணவுக்காக நிதி குவிந்து வருகிறது. ``கென்யாவின் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நான் வேலையிழந்தேன். எனவே, குழந்தைகளுக்குத் தேவையான உணவை என்னால் வழங்க முடியாமல் போனது. அதனால்தான் குழந்தைகள் பசியில் அழும்போது நான் சமைப்பதாக நடித்தேன்.

ஒரு கட்டத்தில் நான் பொய்யாகத்தான் உணவு சமைக்கிறேன் என குழந்தைகள் கண்டுபிடித்துவிட்டனர். இருந்தும் என்னால் வேறு எதுவும் செய்யமுடியவில்லை. என் குழந்தைகள் பசியால் அழும்போதெல்லாம் அக்கம்பக்கத்தினர் என்ன நடக்கிறது எனக் கேட்டனர். அவர்களிடம் என்னால் உண்மையைக் கூறமுடியவில்லை.

அனைவரும் எனக்கு எவ்வாறு உதவி தேவைப்படுகிறது என்றே கேட்கிறார்கள். கென்யர்கள் இவ்வளவு அன்பானவர்கள் என்று இதற்கு முன் நான் நம்பவில்லை. அது எனக்குத் தெரியாமலே இருந்துள்ளது.
பெனினா

தற்போது என் குடும்ப நிலை பற்றி அறிந்ததும் கென்யா முழுவதிலும் பல்வேறு இடங்களிலிருந்து நிறைய போன் அழைப்புகள் வருகின்றன. அனைவரும் எனக்கு எவ்வாறு உதவி தேவைப்படுகிறது என்றே கேட்கிறார்கள். கென்யர்கள் இவ்வளவு அன்பானவர்கள் என்று இதற்கு முன் நான் நம்பவில்லை. அது எனக்குத் தெரியாமலே இருந்துள்ளது. உதவி செய்த அனைவருக்கும் மிக்க நன்றி” என உணர்ச்சி பொங்க tuko news என்ற ஊடகத்திடம் பேசியுள்ளார்.

கென்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 - ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு