Published:Updated:

`இப்போது நாங்கள் எங்கே செல்வது?!' -மத்திய அரசின் உத்தரவால் இத்தாலியில் தவிக்கும் இந்தியர்கள் #Corona

இந்தியர்கள்
இந்தியர்கள்

``நாங்கள் ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்துதான் விமான நிலையம் வந்தோம். இங்கு வந்தபிறகுதான் இந்திய அரசு சம்மதிக்காது என்றுகூறி இங்குள்ள அதிகாரிகள் எங்களை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.''

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அண்டை மாநிலமான கேரளத்தில் 12 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே மூன்றுபேர் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டபோது அவர்களுக்கு சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தமுறை கொரோனா பரவியதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது இத்தாலியிலிருந்து திரும்பிவந்த ஒரு குடும்பம், தங்கள் பயணத்தை மறைத்து பாதுகாப்பற்ற முறையில் வெளியுலகில் சுற்றித் திரிந்ததுதான் என்கிறார்கள். இவர்கள் மூலமாக 11 பேருக்குத் தொற்று பரவியிருக்கிறது.

இந்நிலையில் இத்தாலியில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப இந்திய அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலியில் வேலை பார்க்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர் நேற்று நாடு திரும்புவதற்காக இத்தாலியின் மிலன் விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். தனியார் விமான நிலையத்தில் இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்த அவர்கள் விமான நிலையத்துக்குள் சென்று விமானத்தில் ஏறுவதற்காகக் காத்திருந்துள்ளனர்.

இந்தியர்கள்
இந்தியர்கள்

ஆனால், அவர்களைத் தடுத்த அதிகாரிகள், `விமானத்தில் செல்ல முடியாது. இத்தாலியிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளதாக மெயில் வந்துள்ளது. அதனால் உங்களை அனுப்ப முடியாது' என்று கூறியுள்ளனர். சீனா, இத்தாலி, கொரியா போன்ற நாடுகள்தான் கொரோனா பாதிக்கப்பட்ட முக்கிய நகரங்களாகும். இதில் சீனாவில் தற்போது பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வரும்வேளையில் இத்தாலியில் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதன்காரணமாக இந்திய அரசு வெளியிட்டுள்ள பயண ஆலோசனை சுற்றறிக்கையில், ``இத்தாலி, கொரியா போன்ற நாடுகளிலிருந்து வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்றால் தங்களுக்குக் கொரோனா இல்லை என்று மருத்துவர்கள் சான்றிதழ் அளித்ததைக் காண்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு நேற்று இரவு முதல் அமலாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே கேரளாவைச் சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் எனப் பலர் தடை உத்தரவால் நேற்று இரவு முழுவதும், விமான நிலையத்திலேயே தங்கியுள்ளனர்.

`மீண்டு வரும் சீனா... பிடியில் சிக்கிய இத்தாலி' - அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் #Corona

மேலும் தடை உத்தரவைக் கடுமையாக விமர்சித்து, அவர்கள் ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளனர். ``நாங்கள் ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்துதான் விமான நிலையம் வந்தோம். இங்கு வந்தபிறகுதான் இந்திய அரசு சம்மதிக்காது என்றுகூறி இங்குள்ள அதிகாரிகள் எங்களைத் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். செக் இன் செய்வதற்காக கியூவில் நிற்கும்போதுதான் இந்த அறிவிப்பை எங்களுக்குச் சொல்கிறார்கள். இத்தாலி அரசுக்கும், விமான நிறுவனத்துக்கும் எங்களை விமானத்தில் ஏற்றுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இந்திய அரசுதான் எங்களை நாட்டுக்குள் விட மறுக்கிறது. வேலை செய்வதற்காகவே சொந்த நாட்டை விட்டு இங்கு வந்து இருக்கிறோம்.

இந்தியர்கள்
இந்தியர்கள்

இப்போது சோதனைக் காலம் வரும்போது எங்களை நாட்டிற்குள் விடவில்லை என்றால் எப்படி. நாங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது தெரியவில்லை. வெள்ளம் ஏற்பட்டபோது மட்டும் எங்களைத் தேடி இந்திய அதிகாரிகள் வந்தனர். ஆனால், இப்போது எங்களைக் கண்டுகொள்ளவில்லை. எங்களுக்குக் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் எத்தனை நாள் வேண்டுமானாலும், அரசின் சோதனைகளுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களைச் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்" என உருக்கமாகக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், `வெளிநாட்டிலுள்ள இந்தியர்கள் இதுபோன்ற சுற்றறிக்கையால் தேவையற்ற கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள். நோய் பரவாமல் இருக்கப் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்றாலும், நெருக்கடியில் நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களுக்குக் கொடுக்கப்படும் இதுபோன்ற கஷ்டங்கள் முற்றிலும் தேவையற்றவை.

இந்தியர்கள்
இந்தியர்கள்

அவர்களுக்கு நோய்த் தொற்று இருக்கலாம் என்று அச்சப்பட்டால் வேண்டுமானாலும் மருத்துவப் பரிசோதனை செய்யலாம் மற்றும் தேவைப்பட்டால் தனிமைப்படுத்தலில் வைக்கலாம். நம் நாட்டில் அதற்கான தேவையான வசதிகள் உள்ளன. இதனால் இந்தச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்துகிறேன்' என்று வலியுறுத்தியுள்ளார்.

இவர்கள் மட்டுமல்ல, மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் பலர் ஈரானில் சிக்கித் தவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு