Published:Updated:

`7 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய கிம்மின் அத்தை; தலைமை மாற்றம்?!' -வடகொரியாவை வட்டமிடும் அடுத்த மர்மம்

கிம் கியாங்
கிம் கியாங் ( AP )

ஸாங் தேக் தூக்கில் போடப்படவில்லை என்றும் பட்டினி போடப்பட்ட நாய்கள் அடைக்கப்பட்ட கூண்டில் வீசப்பட்டார் என்றும் அப்போது வெளியான தகவல்கள் உலக நாடுகளை அதிரச் செய்தன.

இரும்புத்திரை போர்த்திய நாடு, ஹிட்லரின் மறு உருவம் என்று உலகின் அனைத்து மூலைகளிலும் அச்சமூட்டும் பெயராக வலம்வந்துகொண்டிருப்பது வடகொரியாவும் அதன் அதிபர் கிம் ஜாங் உன்னும்தான். தினமும் அவரைப் பற்றிய பகீர் தகவல்கள் உலக நாடுகளை அதிரவைக்க தவறுவதில்லை.

இதற்கிடையே, நேற்று நடந்த சம்பவம் அவர்மீதான பார்வையை மேலும் மர்ம தோன்றலுக்கு அழைத்துச் செல்கிறது. அப்படியென்ன சம்பவம் என்கிறீர்களா?

கிம் ஜாங் உன்னின் அத்தை கிம் கியாங் பொதுவெளியில் 7 ஆண்டுகளுக்குப் பின் தோன்றியுள்ளார். இதில் என்ன இருக்கிறது எனக் கேட்கிறீர்களா? அதற்கு முன்னதாக ஃபிளாஷ்பேக்கை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். வட கொரியாவை நிறுவிய கிம் சங்கின் மகள்தான் இந்த கிம் கியாங்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

அதாவது, அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல்லின் தங்கை. இவரது கணவர் பெயர் ஜங் ஸாங் தேக். கிம் ஜாங் உன்னின் தந்தை ஜாங் இல் இறந்தபிறகு கிம் ஜாங் உன்னுக்கு அனைத்துமாக இருந்தவர் ஸாங் தேக். புதிதாக ஆட்சிப் பொறுப்பில் கிம் ஜாங் உன் அமர்ந்தபோது அவருக்கு அனைத்து விதத்திலும் உதவியாக இருந்து ஆட்சியை ஸ்திரப்படுத்தியவர் அவரது மாமா ஸாங் தேக்தான். அப்போது மட்டுமல்ல ஜாங் இல் ஆட்சிக்கும் பெரும் உதவியாக இருந்தார் ஸாங் தேக். ஜாங் இல் ஆட்சி, கிம் ஜாங் உன் ஆட்சி எனப் பல ஆண்டுகள் வடகொரியாவின் நம்பர் 2-வாகத் திகழ்ந்து வடகொரியாவின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத நபராக வலம்வந்துகொண்டிருந்தவர் ஸாங் தேக்.

கிம்மின் திக் திக்... குதிரை சவாரி! - பதற்றத்தில் வடகொரியா மக்கள்

அப்படிப்பட்ட ஸாங் தேக்கை ஆட்சியைக் கைப்பற்ற சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி கைது செய்தார் அதிபர் கிம். அதிபரின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்துகொண்டு, அதிபருக்கு எதிராக ஆட்களைத் தூண்டி ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டார் என்றும், மேலும் கட்சியின் பணத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசமாகப் பொழுதுபோக்கினார் என்றும் அவர்மேல் குற்றம்சாட்டப்பட்டது.

2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தனி ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு ஸாங் தேக்குக்குத் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், ஸாங் தேக் தூக்கில் போடப்படவில்லை என்றும் பட்டினி போடப்பட்ட நாய்கள் அடைக்கப்பட்ட கூண்டில் வீசப்பட்டார் என்றும் அப்போது வெளியான தகவல்கள் உலக நாடுகளை அதிரச் செய்தன.

ஸாங் தேக்
ஸாங் தேக்

ஆனால், அவரது மரணம் மட்டும் உறுதி என்று கூறப்பட்டது. இந்த மரணத்துக்குப் பின் ஸாங் தேக்கின் மனைவி கிம் கியாங் வெளியே தலைகாட்டவில்லை. இதனால் அவரும் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது நாடு கடத்தப்பட்டிருக்கலாம் என்று பேசப்பட்டது. இந்தநிலையில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து மக்கள் முன் தோன்றியுள்ளார் கிம் கியாங். அதுவும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.

நேற்று நடந்த சந்திரப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது கிம் ஜாங் உன் அருகில் கிம் கியாங் அமர்ந்தவாறு இருக்கும் புகைப்படம் வடகொரியா அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ளது. கிம் ஜாங் உன் அருகில் அமர்ந்திருப்பதால் கியாங்கிற்கு அரசு அதிகாரத்தில் முக்கியப் பங்கு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Vikatan

வடகொரியாவில் அவ்வப்போது நிறைவேற்றப்படும் மரணதண்டனை குறித்த தகவல்களும் அதன் உண்மைத் தன்மையும் மர்மமான ஒன்றாகவே இருக்கும். சில மரண தண்டனை குறித்த செய்திகள் புனையப்பட்டவையாகவும் இருந்துள்ளன.

ஹ்யோன் சோங் வோல் என்ற பெண்ணின் மரண தண்டனை குறித்த செய்தியை உதாரணமாகக் கூறலாம். ஹ்யோனுடன் சேர்ந்து 11 இசைக் கலைஞர்களும் ஒரு பாலியல் வீடியோவை உருவாக்கியதாகவும் இதற்காக அவர்கள் பிடிக்கப்பட்டு இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அதை வடகொரியா மறுத்தது. செய்தி வெளியான அடுத்த ஆண்டிலேயே ஹ்யோன், அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி, தாம் நலமாக இருப்பதை வெளிப்படுத்தினார். இப்படி ஒரு மர்மம் கியாங்குக்கு நிகழ்ந்திருக்கக்கூடும் என்கின்றனர்.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்

இதற்கிடையே, 7 ஆண்டுகளுக்குப் பின் கிம் கியாங் மக்கள் முன் தோன்றியதற்கான காரணங்கள் பொதுவெளியில் தெரியவில்லை என்றாலும் சமீபகாலமாக வடகொரியாவில் நிலவும் சூழ்நிலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைக்குப் பிறகு வடகொரியா அதன் தலைமையில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கிம் ஜாங் தனது உயர்மட்ட ராஜதந்திரி மற்றும் பாதுகாப்புத் தலைவரை நீக்கியுள்ளார் என்றும், அதற்குப் பதிலாக வெளியுறவுக் கொள்கையில் அதிக அனுபவமுள்ள முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரைக் கடந்த வெள்ளிக்கிழமை தனது உயர்மட்ட தூதராக கிம் நியமித்துள்ளார் என்றும், பாதுகாப்புத் தலைவர் பதவியை கிம் ஜாங் உன் தனது செல்லப்பிராணிகளுக்காகக் கட்டப்பட்டு வரும் கட்டுமானத் திட்டங்களை மேற்பார்வையிட்ட ஒரு அதிகாரிக்குக் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு