Published:Updated:

`வட கொரியாவில் சுதந்திரமாக இருந்த ஒரே நபர்..!’ -றெக்கை கட்டும் அடுத்த அதிபருக்கான பேச்சு?

வட கொரியா
வட கொரியா

வட கொரிய அதிபர் உடல்நிலை தொடர்பாக இதுவரை எந்த உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை. அதற்குள் அந்நாட்டின் அடுத்த அதிபர் தொடர்பான பேச்சுக்கள் றெக்கை கட்டி பறக்கத்தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனாவைவிட அதிகமாக கவனம் ஈர்த்துள்ளது வடகொரிய அதிபர் மற்றும் அவரது உடல்நிலை தொடர்பான செய்திகள்தான். அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனை என அமெரிக்காவையே அலறவைத்த கிம் ஜாங் உன்னின் உடல்நிலையைப் பற்றி அறிந்துகொள்ள அனைத்து நாட்டு மக்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

`கிம்மின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது' எனத் தகவல்கள் வெளியாகி 2 வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. இருந்தும் அவரின் உடல்நிலை பற்றிய அதிகாரபூர்வமாக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

ஏப்ரல் 15-ம் தேதி வடகொரியாவில் நடந்த தன் தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் முதன்முறையாக கிம் பங்கேற்காததே இந்த அனைத்துச் சந்தேகங்களுக்கும் ஆரம்பப்புள்ளியாக விளங்கியது. வடகொரியாவைப் பற்றி என்ன வதந்திகள் பரப்பப்பட்டாலும் அந்நாட்டு அரசு ஊடகங்கள் அதுதொடர்பான விளக்கத்தை வெளியிடும் அல்லது மறுப்பு தெரிவிக்கும். ஆனால், தற்போது கிம்மின் உடல்நிலை பற்றி அவர்களுமே வாய் திறக்காதது இந்த சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.

`கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறாரா?!'- வைரல் புகைப்படமும் வதந்திகளும்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை தோல்வியடைந்ததால் அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டார், அதிபர் உயிருடன் இல்லை போன்ற பல உறுதிப்படுத்தாத தகவல்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்த வேளையில், கிம்மின் சகோதரி கிம் யோ ஜொங் தான் வட கொரியாவின் அடுத்த அதிபர் எனக் கூறப்பட்டு வந்தது.

இவர் ஆளும் அரசில் முக்கியப் பொறுப்பில் இருப்பதும் கடந்த இரண்டு வருடங்களாக தன் சகோதரருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருவதுமே இந்தப் பேச்சு எழ அடிப்படைக் காரணமாக இருந்தது. ஆனால் அவர் ஒரு பெண் என்பதால் வட கொரியாவின் அதிகாரத்தை அவரிடம் வழங்குவதற்கு அந்நாட்டுப் பழைமைவாத ஆண்கள் எதிர்ப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கிம் ஜாங் உன் - கிம் யோ ஜொங்
கிம் ஜாங் உன் - கிம் யோ ஜொங்
AP

இந்நிலையில் தற்போது கிம்மின் சித்தப்பா அதாவது வடகொரியாவை உருவாக்கிய கிம் இல் சங்கின் இரண்டாவது மகன் கிம் பியோங் இல் பற்றிய தகவல்கள் மிக வேகமாகப் பரவி வருகிறது. 65 வயதாகும் கிம் பியோங் இல், கிம் இல் சங்கின் உயிருடன் இருக்கும் ஒரே மகனாக அறியப்படுகிறார். இவர் 1970-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் தங்கியிருந்து வட கொரியாவின் தூதராகப் பணியாற்றி வந்தார். பின்னர் கிம்மின் தந்தை வடகொரியாவின் அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார், அப்போது, கொரியாவின் தொழிலாளர்கள் கட்சியில் உயர் பதவி வழங்கப்பட்டுத் தொடர்ந்து ஹங்கேரி, பல்கேரியா, பின்லாந்து போன்ற பல தூதரகப் பொறுப்புகளில் பணியாற்றி தன் பாதி நாள்களை வெளிநாடுகளிலேயே செலவிட்டார் பியோங் இல்.

`சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை’ - கிம் ஜாங் உன் பற்றிய வதந்திகளுக்குத் தென்கொரியா முற்றுப்புள்ளி

தொடர்ந்து கிம் ஜாங் உன்னின் தந்தை மறைந்த பிறகு அடுத்த அதிபர் பதவிக்கான வரிசையில் முதல் இடத்திலிருந்தது பியோங் இல் தான். ஆனால் கிம்மின் தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரும் இணைந்து கிம்முக்குச் சாதகமாகச் செயல்பட்டு அந்தப் பதவியை அவருக்குக் கிடைக்கச் செய்தனர். அப்போதும் எதுவும் பேசாமல் பதவிக்குச் சண்டைபோடாமல் வட கொரிய அரசியலில் தலையிடாமல் தொடர்ந்து வெளிநாடுகளிலேயே இருந்துள்ளார் பியோங். சுமார் 36 ஆண்டுகள் வட கொரிய அரசியலில் இருந்த பியோங்தான் அதிபராகியிருக்க வேண்டும் எனப் பலர் அப்போது கருத்து தெரிவித்திருந்தனர்.

கிம் பியோங் இல்
கிம் பியோங் இல்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனக்கும் தன் ஆட்சிக்கும் ஆபத்து ஏற்படுத்த நினைத்தவர்களைச் சிறையில் அடைப்பது அல்லது தூக்கிலிடுவது போன்றவற்றை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் பியோங்கை மட்டும் இதுவரை எதுவும் செய்யாமல் விட்டுள்ளார். ஏனெனில் அவர் வட கொரிய அரசியலில் அதிகக் கவனம் செலுத்தாமல் தன் வேலைகளை மட்டுமே சரியாகச் செய்து வந்தார்.

மேலும் கிம் ஜாங் உன்னும், பியோங்கை ஒரு நம்பகமான போட்டியாளராகக் கருதவில்லை. தன் ஆட்சியிலும் சித்தப்பாவுக்கு வெளிநாட்டுத் தூதர் பதவிகளை மட்டுமே வழங்கியுள்ளார் கிம். கிட்டத்தட்ட 40 வருடங்களாக வெளிநாடுகளில் இருந்துள்ளார் பியோங் இல். 2017-ம் ஆண்டு கிம்மின் சகோதரர் கிம் ஜாங் நாம் கொல்லப்பட்டபோது பியோங் இல்லுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

`கிம் ஜாங் உன்’ என்னவானார்? வடகொரியாவின் அடுத்த அதிபர் ஆவாரா சகோதரி கிம் யோ?

பியோங் கடந்த நவம்பர் மாதம் தன் அனைத்து வேலைகளையும் விடுத்து மீண்டும் வட கொரியாவுக்குத் திரும்பிவிட்டார். தற்போது அவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அவரை கிம் எளிதாகக் கண்காணிக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தென் கொரிய உளவுத்துறை கூறியுள்ளது.

கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன்
AP

‘மொத்த வட கொரியாவிலும் மிகவும் சுதந்திரமாக இருந்த ஒரே நபர் பியோங் இல் தான். அவரின் செயல்களும் நடவடிக்கைகளும் வட கொரியரைப் போல் இல்லாமல் தென் கொரியாவைச் சேர்ந்தவரைப் போல இருக்கும். கிம்மைப் பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகாததால் அடுத்த அதிபரைப் பற்றித் தற்போது பேச வேண்டியதில்லை.

ஆனால், தற்போது வெளிவரும் செய்திகளிலிருந்து பியோங் இல் அடுத்த வட கொரிய அதிபராக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவருக்கு ஆதரவுகள் அதிகமாக உள்ளன. பிரச்னை என்னவென்றால் கிம்மின் தங்கை கிம் யோ ஜாங் தலைமையிலான வட கொரிய ஆட்சி நிலையானதாக இருக்க வாய்பில்லை. இதைத் தவிர்க்க அந்நாட்டு தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர், தற்போது வீட்டுக்காவலில் இருக்கும் கிம் பியோங் இல்லை அதிகாரத்தின் மையத்துக்கு கொண்டுவர முயற்சி செய்வார்கள்” என வட கொரியாவின் துணைத் தூதராக இருந்த தே யோங் ஹோ கூறியுள்ளார்.

கிம் ஜாங் உன்னின் உடல்நிலையைப் பற்றி எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இப்போதே அடுத்த அதிபர் தொடர்பான யூகங்கள் உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு