Published:Updated:

`விஆர் தொழில்நுட்பம்; இறந்த மகளுடன் சில நிமிடங்கள்!’- கொரிய வீடியோ தரும் நெகிழ்ச்சியும் சர்ச்சையும்

வி.ஆர் தொழில்நுட்பம்
வி.ஆர் தொழில்நுட்பம்

கொரியாவில் ஒரு தாய் தன் இறந்த மகளை வி.ஆர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீண்டும் சந்தித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் டிஜிட்டல் யுகத்தில் சாத்தியமற்றது என்று நினைக்கும் விஷயங்களையும் எளிதாகச் சாத்தியப்படுத்தலாம் என்ற நிலை உள்ளது. அப்படிதான் இறந்த தன் மகளை டிஜிட்டல் முறையில் மீண்டும் சந்தித்துள்ளார் ஒரு கொரிய தாய். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் ஆதரவு பெற்றுள்ளது. அதே நேரத்தில் இதைப் பல உளவியல் ஆய்வாளர்கள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

நயோன்
நயோன்
MBC

கொரியாவைச் சேர்ந்த ஜாங் ஜி சாங் என்ற பெண்ணின் மகள் நயோன். இவருக்கு 7 வயதாக இருக்கும்போது, அதாவது கடந்த 2016-ம் ஆண்டு ஒருவித அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். வி.ஆர் (virtual reality) கண்ணாடியின் உதவியுடன் இறந்த தன் மகளுடன் மீண்டும் இணைந்துள்ளார் ஜாங் ஜி. இந்த நிகழ்வு `உன்னைச் சந்திக்கிறேன்’ என்ற தலைப்பில் அந்நாட்டு ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

கொரியாவைச் சேர்ந்த எம்.பி.சி என்ற நிறுவனம்தான் சிறுமி நயோனின் உருவத்தைத் தத்ரூபமாக வடிவமைத்துள்ளது. பளிச்சென மின்னும் கண்கள், கரும் அடத்தியான முடி, அவரது மாறாத குரல், உடல் நளினம் என அனைத்தையும் பார்த்துப் பார்த்து வடிவமைத்துள்ளனர். நயோனின் தாய் வி.ஆர் கண்ணாடி அணிந்தபடி நிற்கிறார். அப்படியே அவரது விழிகள் ஒரு பூங்காவில் விரிகிறது. ஒரு பாறையின் பின்னால் இருந்து நயோன் தாயை நோக்கி ஓடி வருகிறார்.

வி.ஆர் தொழில்நுட்பம்
வி.ஆர் தொழில்நுட்பம்

நீண்ட வருடங்களுக்குப் பிறகுத் தன் மகளைக் கண் எதிரே பார்த்த ஏக்கத்தில் அப்படியே உடைந்து அழுகிறார் ஜாங் ஜி. பின்னர் தாயும் மகளும் பேசிக்கொள்கிறார்கள். இறப்பின் நிதர்சனத்தை தன் தாய்க்குப் புரிய வைக்கிறார் நயோன். இருவரும் இணைந்து விளையாடுகிறார்கள். `நான் உன்னை நிறைய மிஸ் செய்கிறேன்’ என இருவரும் மாறி மாறி கூறிக்கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் சிறுமி தன் தாயைச் சுற்றி வந்து அவருக்கு ஒரு மலர்க் கொத்து கொடுத்து, `இனிமேல் எனக்கு எந்த வலியும் கிடையாது. அதை நீங்கள் பார்க்கலாம்’ என்று புன்னகையுடன் கூறுகிறார். இறுதியாகச் சிறுமி உறங்கச் செல்வதுடன் வீடியோ முடிகிறது.

இதில் விசேஷ கையுறை அணிந்து ஜாங் ஜி தன் மெய் நிகர் (virtual) மகளைத் தொடுவதற்குச் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. தாயும் மகளும் பேசிக்கொள்வதைப் பார்த்துக்கொண்டிருந்த நயோனின் தந்தையும், சகோதரரும் கண்ணீர் வடித்தனர். தன் பெற்றோர், அன்புக்குரியவர்கள், குழந்தைகளை இழந்தவர்களுக்கு உதவியாக இந்த ஆவண வீடியோ எடுக்கப்பட்டதாக ஜாங் ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது இணையப் பக்கத்தில் குறிப்பிட்டு ஜாங் ஜி, `மூன்று வருடங்களுக்குப் பிறகு நான் இப்போது அவளைச் சந்திப்பதைவிட அவளை இன்னும் அதிகம் நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த தொழில்நுட்பத்தின் உதவியால் என் மகளை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை தற்போது பிறந்துள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு பலரும் நயோனை நினைவில் கொள்வார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

``இந்த வழியின் மூலம் இறந்த ஒருவருடன் மீண்டும் ஒன்றிணைவது பல உளவியல் ரீதியான பிரச்னைகளை உருவாக்கும். நிறைய மனநல மருத்துவர்கள் இதை ஆரோக்கியமற்றதாக கருதுவார்கள். இது போன்ற தொழில்நுட்பங்கள் கவலைக்குரிய நெறிமுறை சிக்கல்களை உருவாக்குகின்றன. தொலைக்காட்சிகளின் லாபத்துக்காக மக்கள் மனதுடன் விளையாடுகிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவ மற்றும் தொழில்நுட்ப பேராசிரியர் பிளே விட்பி.

அடுத்த கட்டுரைக்கு