Published:Updated:

புதிய சட்டத்தால் குவைத்தில் வேலையிழக்கும் 8 லட்சம் இந்தியர்கள்... எப்போது சீராகும் நிலை?

Vande Bharat mission flights from Kuwait
Vande Bharat mission flights from Kuwait ( Photo: Twitter / IndiGo6E )

கொரோனா கால ஊரடங்கால் மற்ற நாடுகளைப் போன்றே வளைகுடா நாடுகளும் கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகின்றன. இதிலிருந்து மீண்டு சொந்த நாட்டினருக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய குவைத் அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

கொரோனாவால் உலகமே முடங்கிக்கிடக்கிறது. கொரோனாவுக்கு நேரடி மருந்துகள் இல்லாததால் தனி மனித விலகல் மட்டுமே தடுப்பு நடவடிக்கையாக முன்வைக்கப்படுகிறது. அதனால், தொடர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பலரது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

குறிப்பாக, சிறு, குறு தொழில் புரிந்த பலர் தங்கள் தொழிலைக் கைவிட்டுள்ளனர். பல நாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்பு நிலைகுலைந்துள்ளது. இதன் காரணமாகப் பல நாடுகள் தங்கள் நாடுகளில் பணிபுரிந்த வெளிநாட்டினரை சொந்த நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளன.

வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ஹெச்-1 பி உள்ளிட்ட பல விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். ஐக்கிய அரபு நாடுகளில் வேலை பார்த்து வரும் மற்ற நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை அந்தந்த நாடுகள் அழைத்துச் செல்ல வேண்டும் என ஐக்கிய அரபு நாடுகள் கோரிக்கை வைத்தன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

கொரோனா கால ஊரடங்கால் மற்ற நாடுகளைப் போன்றே வளைகுடா நாடுகளும் கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகின்றன. இதிலிருந்து மீளவும் சொந்த நாட்டினருக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் குவைத் அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது. பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் சிறிய நாடான போதிலும், உலக நாடுகளின் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது குவைத். இந்தியா, எகிப்து உள்பட பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பணி நிமித்தம் குவைத்துக்குச் செல்கின்றனர்.

குவைத் நாட்டில் வாழும் 70 சதவிகிதம் பேர் வெளிநாட்டவர்கள்தான். அதில் 30 சதவிகிதத்துக்கும் மேல் இந்தியர்கள். இதை 30 சதவிகிதமாகக் குறைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக சட்டத்தையும் திருத்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் குவைத் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் பல நாடுகளில் வேலைசெய்யும் லட்சக்கணக்கான இந்தியர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலையில், குவைத்திலும் இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது மேலும் பாதிப்பை உருவாக்கும் என்கிறார்கள்.

இதுகுறித்து வெளிநாட்டுக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் ஶ்ரீனிவாஸ் சம்பந்தமிடம் பேசினோம்.

``கொரோனாவால் வேலையிழப்பு என்பது இன்று உலக நாடுகள் முழுவதும் இருக்கும் பெரும் பிரச்னை. அந்தந்த நாடுகளின் தலைவர்கள், தங்கள் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள இந்தச்சூழலில் `மண்ணின் மைந்தர்கள்' நிலைப்பாட்டைக் கையில் எடுக்கிறார்கள்.

ஶ்ரீனிவாஸ் சம்பந்தம்
ஶ்ரீனிவாஸ் சம்பந்தம்

அமெரிக்காவின் அறிவிப்பு இத்தகைய அரசியல்தான். எல்லா நாடுகளுக்குமே திறன் வாய்ந்த உழைப்பாளர்கள் தேவை. அந்த தேவையை இந்தியர்கள்தாம் பெரும்பாலான நாடுகளில் பூர்த்தி செய்கிறார்கள். தேர்தலுக்காக அமெரிக்கா இந்த உத்தியைக் கையிலெடுத்திருக்கிறது. தேர்தல் முடிந்ததும் அங்கு நிலை சீராகிவிடும். அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனங்களுக்கு இந்தியர்களின் தனித்திறன் தேவைப்படுகிறது என்பதே உண்மை. இதுதான் அமெரிக்காவின் நிலைமை. குவைத் போன்ற நாடுகளில் தற்போது கச்சா எண்ணெய் மதிப்பு குறைந்துள்ளது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பளம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது அதனால்தான் பலரையும் வேலையைவிட்டு அனுப்புகின்றனர். ஈராக் நாட்டில், ஆயில் நிறுவனங்களில் பணிபுரிபவர்களை சொந்த நாடுகளுக்குத் திரும்பச்சொல்லியிருக்கிறார்கள். பொருளாதாரச் சூழல் சீரானதுடன் மீண்டும் பணிக்கு அழைத்துக் கொள்வதாகவும் அந்நாட்டு அரசு உறுதியளித்திருக்கிறது.

நாளை கச்சா எண்ணெயின் மதிப்பு அதிகரிக்கும்போது மீண்டும் இவர்களைப் பணிக்கு அழைக்க வாய்ப்புகள் அதிகம். தேவை ஏற்படும்போது திறன் வாய்ந்த ஊழியர்கள் நிச்சயம் அவர்களுக்கு தேவைப்படுவார்கள். ஆனால், வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் தங்களை எப்போது வேலைக்கு அழைப்பார்கள் என்ற அச்சம் இருக்கிறது. இப்போதைய நிலையில், Unskilled labours எனப்படும் கூலி வேலை செய்பவர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. நியூசிலாந்து அரசு, நிறுவனங்கள் ஊழியர்களை வேலையைவிட்டு அனுப்பாதிருக்க சிறப்பு நிதி வழங்கியிருக்கிறது. கடனாக அல்லாமல் இலவசமாகவே வழங்கியிருக்கிறது. அந்த நாட்டின் மக்கள் தொகை போன்றவை அதற்கு சாதகமாக இருக்கின்றன.

வேலை
வேலை

இந்தியாவிலும் தற்போது வேலையிழப்பு தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து புராஜெக்டுகள் குறைந்தால் இங்கும் பெரிய அளவில் வேலையிழப்பு ஏற்படும். இரண்டு பேர் வேலையை ஒருவர் செய்யும் நிலை இப்போதே தொடங்கிவிட்டது. இதற்கிடையில் வரும் காலங்களில் படித்து முடித்து வெளியேறும் பட்டதாரிகளும் இந்த வேலையிழப்பால் பாதிக்கப்படுவர். இந்த வேலையிழப்பு, அந்தந்த நாடுகளில் பொருளாதாரம் சீராகாமல் முழுமையாகச் சரியாகாது. சரியாகும் என நம்புவோம். தங்கள் நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்தந்த அரசால் மட்டுமே திட்டமிட முடியும். இந்த நிலை சரியாகும்போது நிச்சயம் இந்தியர்களின் தேவை நிச்சயம் பல நாடுகளுக்கும் ஏற்படும். நிலை சீராகும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு