Published:Updated:

`38% வீழ்ச்சியடைந்த பிட்காயின் மதிப்பு' - கஜகஸ்தான் மக்கள் போராட்டம்தான் காரணமா?!

பிட்காயின் - கஜகஸ்தான் போராட்டம்
News
பிட்காயின் - கஜகஸ்தான் போராட்டம்

கஜகஸ்தான் மக்கள் போராட்டத்துக்கும், பிட்காயின் சந்தை மதிப்பு சரிவுக்கும் என்ன தொடர்பு? - என்பதை அலசுகிறது இந்தக் கட்டுரை!

ஒரு சிறிய நாட்டில் ஏற்படும் வன்முறையோ, கலகமோ உலக முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலுள்ள சிறிய நாடான கினியாவில், ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றிய சம்பவம் நடந்தது. அலுமினியத்தின் தாதுப் பொருள் விளையும் கினியாவில் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டதால், உலகம் முழுக்க அலுமினியத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதேபோல கஜகஸ்தானில் தற்போது நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தால் பிட்காயினின் சந்தை மதிப்பு பல மடங்கு குறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கஜகஸ்தான்
கஜகஸ்தான்
AP

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கஜகஸ்தான் கலவரம்!

அதிக அளவிலான இயற்கை வளங்களைக் கொண்டது கஜகஸ்தான். அந்த இயற்கை வளங்களை மண்ணிலிருந்து பிரித்தெடுக்கும் பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களே செய்துவருகின்றன. செவ்ரான், எக்சோன் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆதரவாகக் கடந்த வாரத்தில் சமையல் எரிவாயுவின் விலை வரம்பை நீக்கியது கஜகஸ்தான் அரசு. இதனால் ஒரே நாளில் சமையல் எரிவாயுவின் விலை இருமடங்கானது.

அடுத்தடுத்த நாள்களில் சமையல் எரிவாயுவின் விலை பல மடங்கு உயரும் என்ற அச்சத்தால், வீதியில் இறங்கிப் போராட்டங்களைத் தொடங்கினர் கஜகஸ்தான் நாட்டு மக்கள். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் வன்முறையாக மாறின. மக்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கு ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் உயிர்ச்சேதங்கள் நிகழ்ந்தன. கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாத அரசு, பதவி விலகியது. ரஷ்யாவின் உதவியையும் நாடியது. இந்த நிலையில்தான் பிட்காயின் மதிப்பு சடசடவெனக் குறைந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பிட்காயின் - கஜகஸ்தான் என்ன தொடர்பு?

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பெரிய பிட்காயின் சுரங்கங்களைக் கொண்டிருக்கும் நாடு கஜகஸ்தான். பிட்காயின் பரிவர்த்தனைகளை பிளாக்செயின் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பதிவு செய்கிறார்கள். பிட்காயின் சுரங்கங்களில், கணினிகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளைச் சரிபார்ப்பது, பதிவு செய்வது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், புதிய பிட்காயின் வரவுகள் குறித்தும் பதிவு செய்யப்படுகின்றன. சரியான, முறையான பரிவர்த்தனைகள் நடைபெறுவதை உறுதி செய்தபின்னரே, அவை பிளாக்செயின் முறையில் பதிவு செய்யப்படுகின்றன. மேற்கண்ட அனைத்துப் பணிகளையும் செய்வதுதான் பிட்காயின் சுரங்கங்களின் வேலை.

பிட்காயின் (Representational Image)
பிட்காயின் (Representational Image)
கஜகஸ்தானில் மின்சாரத்தின் விலை மலிவாக இருப்பதால், அங்கு அதிக அளவிலான பிட்காயின் சுரங்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உலக அளவில் நடக்கும் பிட்காயின் சுரங்கப் பணிகளில், ஐந்தில் ஒரு பங்கு பணி கஜகஸ்தானில்தான் நடைபெறுகிறது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிட்காயின் மதிப்பு சரிந்தது எப்படி?

கஜகஸ்தானில் ஏற்பட்ட கலவரம் காரணமாக நாடு முழுவதும் இன்டர்நெட் வசதிகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பிட்காயின் சுரங்கப் பணிகளும் முடங்கியிருக்கின்றன. இது பிட்காயினின் சந்தை மதிப்புக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த நவம்பர் மாதத்தில், சுமார் 67,000 அமெரிக்க டாலர்களாக இருந்த பிட்காயினின் மதிப்பு, தற்போது சுமார் 41,000 அமெரிக்க டாலர்களாகக் குறைந்திருக்கிறது! கிட்டத்தட்ட 38 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது பிட்காயினின் மதிப்பு!
பிட்காயின்
பிட்காயின்

பிட்காயினின் மதிப்பில் சரிவு ஏற்பட்டிருப்பதற்கு, கஜகஸ்தானில் சுரங்கப் பணிகள் முடங்கியிருப்பது தவிர வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. `அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்தலாம்' என்று செய்திகள் வெளியானதை அடுத்து, பலரும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வதைக் குறைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

பிட்காயினின் மதிப்பு குறைந்திருப்பதால், ஒட்டுமொத்த கிரிப்டோகரன்சிகளிலும் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொள்வதாகச் சொல்லப்படுகிறது. எனவே, உலகம் முழுக்கவே கிரிப்டோகரன்சி முதலீடுகள் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. `கிரிப்டோகரன்சி முதலீடுகள் பாதுகாப்பானவை அல்ல' என்று தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார்கள் சிலர். தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேயிருந்த பிட்காயினின் மதிப்பு, தற்போது குறைந்திருப்பதை அடுத்து அவர்களின் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது!