Published:Updated:

`மனிதர்களுக்குத்தான் லாக் டெளன்... சாலையில் உறங்கும் சிங்கங்கள்’ -மிரளவைக்கும் புகைப்படங்கள்!

சிங்கங்கள்
சிங்கங்கள்

கொரோனா ஊரடங்கால் மனித நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் தென்னாப்பிரிக்காவின் தேசியப் பூங்காவில், சிங்கங்கள் சாலையில் உறங்கும் காட்சி வைரலாகிவருகிறது.

கொரோனா வைரஸால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வனப் பகுதிகளில் மனித நடமாட்டம் இல்லாததால், விலங்கினங்களும் பறவைகளும் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் தேசியப் பூங்காக்களில் ஒன்றான, க்ரூகர் தேசியப் பூங்காவில், சிங்கங்கள் சாலைகளில் கூட்டமாகப் படுத்துறங்கும் காட்சி இணையத்தில் பரவ, செம வைரல்.

சிங்கம்
சிங்கம்

க்ரூகர் தேசியப் பூங்காவின் ரேஞ்சரான ரிச்சர்ட் சோவ்ரி, வியாழன் அன்று மேற்கொண்ட வழக்கமான ரோந்துப் பணியின்போது, பூங்கா சாலையில் சிங்கங்கள் படுத்துறங்கும் காட்சியைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், ஐந்திற்கும் மேற்பட்ட சிங்கங்களும் அதன் குட்டிகளும் சாலைகளில் உறங்குகின்றன.

Vikatan

இதுகுறித்து, க்ரூகர் தேசியப் பூங்காவின் செய்தித்தொடர்பாளர் ஐசக் பாலா, பிபிசி செய்தியாளரிடம் பேசியபோது, ‘சிங்கங்கள் பொதுவாக புதர்களில்தான் இருக்கும். தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால், பூங்கா ஊழியர்களும் பார்வையாளர்களும் அனுமதிக்கப்படுவதில்லை. புத்திசாலியான சிங்கங்கள், தற்போது மனிதர்கள் இல்லாத சூழலை தங்களுக்கான நேரமாக பயன்படுத்திக்கொண்டு, சாலையில் படுத்துறங்குகின்றன" என்றார்.

இந்தப் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள க்ரூகர் தேசியப் பூங்கா நிர்வாகம், சிங்கக் கூட்டம் அணிவகுத்துள்ள இந்த இடத்தை க்ரூகர் பார்வையாளர்கள் முன்னர் பார்த்திருக்க மாட்டார்கள் எனப் பதிவிட்டுள்ளது. க்ரூகர் தேசியப் பூங்காவின் உள்ளே அமைந்துள்ள குகுசா கோல்ஃப் கிளபின் கேப்டன் ஜீன் ரோசோவ், இந்த வார தொடக்கத்தில் பூங்காவின் சூழலை வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் பதிவுசெய்துள்ளார். சிங்கங்கள் குளத்தில் நீர் அருந்திக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த கழுதைப் புலிகளை அவை துரத்தும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் இருப்பதால் பறவைகளும் விலங்கினங்களும் அச்சமின்றி சுதந்திரத்துக்கு திரும்பிவருகின்றன. இருப்பினும், மனிதனால் நிகழ்த்தப்படும் விரும்பத்தகாத சில வேட்டைச் சம்பவங்களும் நடந்துவருகின்றன. கடந்த மாதம் சண்டே டைம்ஸ் நாளிதழில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, சிலர் காண்டாமிருக வேட்டையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காண்டாமிருகம்
காண்டாமிருகம்

அதேபோல், தென்னாப்பிரிக்காவில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பான ஒரு வார காலத்தில், போட்ஸ்வானா மாகாணத்தில் 9 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஊரடங்கால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், நிதி நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளதாக அந்நாட்டின் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் வருத்தம் தெரிவித்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு